ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

Date:

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான சட்டங்களும் அரச நிறுவனங்களும் உள்ளன என்றும் துரதிர்ஷ்டவசமாக தற்போது எதிர்க்கட்சியினரே இவற்றுக்கெல்லாம் பிரதான குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக மாறியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவது குறித்த பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குற்றங்களை ஒடுக்குவதில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர பெரும் பங்காற்றி வருவதாகவும், இன்று அவர் எதிர்க்கட்சியின் எதிரியாக மாறியுள்ளார் என்றும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

இதேவேளை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அமைச்சர் ஆனந்த விஜேபால, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் திலீப பீரிஸ் மற்றும் நீதிமன்றமும் இன்று எதிர்க்கட்சியின் எதிரிகளாக மாறியுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

“இன்று நியாயம், நீதி, ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்பவற்றை எதிர்க்கட்சியால் தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளது. அரசுக்குள்ளே இருந்து கொண்டு, அரச அனுசரணையுடன் குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால், அந்த குற்றவாளிகளை வெளிப்படுத்தக் கூடாதா? அது நாட்டை காட்டிக்கொடுப்பதா? அது தேசத்துரோகமா? இல்லை, அது ஒரு நாகரீகமான அரசை கட்டியெழுப்பும் நோக்கமாகும். எமது அரசை நாம் ஒரு நாகரீகமான அரசாக மாற்ற வேண்டும்.”

“நமது நாடு ஒரு ஊழல் நிறைந்த அரசாக இருந்தது. எமது இராணுவம், புலனாய்வுப் பிரிவினர் மீதான கௌரவம், பாராட்டு மற்றும் விசுவாசம் எமக்கு உள்ளது. ஆனால், எமது இராணுவமும் புலனாய்வுப் பிரிவினரும் நாட்டின் பாதுகாப்புக்காகவும், மக்களின் பாதுகாப்புக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும்போது, அவர்கள் எங்கேனும் அநீதிக்குள்ளானால் நாம் அவர்களுக்காக முன்னிற்போம். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மக்களின் பாதுகாப்புக்காகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் இராணுவமும் புலனாய்வுப் பிரிவும் செயற்பட்டிருந்தால், அவர்களை எந்த இடத்திலும் பாதுகாக்கவும் கௌரவிக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். அந்தப் பணியை நாம் செய்வோம்.”

“ஆனால், இராணுவத்திலோ அல்லது புலனாய்வுப் பிரிவிலோ உள்ள ஒரு சிறிய குழுவினர், ஏதேனும் ஒரு குடும்பத்தின் அதிகாரத்துக்காக அல்லது ஒரு அரசியல் முகாமின் அதிகாரத்துக்காக அரச தேவையின் பேரில் குற்றங்களைச் செய்திருந்தால், அவர்களுக்குரிய தண்டனையை வழங்க எமது அரசாங்கம் தயங்காது.”

“தங்கள் அதிகாரத்துக்காக, ஒரு குடும்பத்தின் மற்றும் தங்கள் அரசியல் முகாமின் அதிகாரத்துக்காகச் செய்யப்பட்ட குற்றங்களான தாஜுதீன் விவகாரமும் அப்படித்தான், ஈஸ்டர் தாக்குதலும் அப்படித்தான்… இவற்றின் பின்னணியில் மிகச் சிறிய அரச இயந்திரத்தின் இயக்குநர்கள் இருந்தனர். இதனை நாட்டுக்கு வெளிப்படுத்தக் கூடாதா? நாட்டில் வெள்ளை வாகன பயம் இருக்கவில்லையா? இலக்கத் தகடுகள் இல்லாத வெள்ளை வான்களில் வந்து, தங்கள் காணியில் வீட்டை உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மனிதர்களைக் கடத்தினார்கள். இவை சிவில் மோதல்கள் அல்ல. ஒரு சிறிய குழுவினர் தங்களின் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு இக்கொடூரக் கொலைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் நிச்சயமாகக் கடமைப்பட்டுள்ளோம்.”

இதற்கு விபரீதமாக அல்லது எதிராகச் செயற்படக்கூடியவர்கள் இக்குற்றங்களினால் லாபம் ஈட்டியவர்கள் மாத்திரமே எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளை யாராவது அச்சுறுத்தினால் அல்லது அழுத்தம் கொடுத்தால், அரசாங்கம் அவர்கள் சார்பில் முன்னிற்கும் என்றும், பொதுமக்களும் அவர்களுக்காக முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

“காலத்தின் மணல் துகள்களால் இவை மூடிப்போகும் என்று சிலர் நினைத்தார்கள். அதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். குற்றவாளிகளை முறையாக சட்டத்தின் முன் நிறுத்துவதே எமது கடமையாகும். விசாரணைகளை மேற்கொண்டு, கைது செய்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக வழக்குத் தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் மூலம் நாம் அவர்களுக்குத் தண்டனை வழங்குவோம். கொலைகளில் இருந்து காப்பாற்றுவதற்காகக் கப்பம் வாங்கிய ஒரு வரலாறு இருந்தது. இன்று காலையில் கைது செய்யப்பட்டவர்களின் இரகசியங்கள் உங்களுக்கு விரைவில் தெரியவரும். நீங்கள் இன்னும் அப்படிப்பட்டவர்களைக் கட்சியில் வைத்திருப்பீர்களா?”

“போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் வளர்வதற்கு அரசியல் அதிகாரமே துணையாக இருந்துள்ளது. இந்த விவகாரங்களுக்காக அரசியல் அதிகாரம் வழங்கும் அனைத்துப் பாதுகாப்புகளையும் நாம் முற்றிலும் ஒழிப்போம். யாரும் இதனை அரசியல் பழிவாங்கல் என்று கூற வேண்டாம். எமக்கு எதற்காக அதிகாரம் வழங்கப்பட்டது? ஒரு பாரிய மக்கள் ஆணை இருந்தது. அதற்குள் ஒரு சாராம்சம் இருந்தது. அதுதான் எமது அரசை நாகரீகமான ஒன்றாக மாற்றுவதாகும். பாராளுமன்றம் நாகரீகமானதாக மாற வேண்டும்.”

“இந்த நாட்டுக்கு மீண்டும் நாகரீகத்தைக் கொண்டுவரும் பொறுப்பே எமக்கு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்குள்ளும், அரச நிறுவனங்களுக்குள்ளும், இவை அனைத்துக்குள்ளும் மீண்டும் நாகரீகத்தைக் கொண்டுவரும் போராட்டத்திலேயே நாம் ஈடுபட்டுள்ளோம்…”

“பணம் நாட்டிலிருந்து வெளியே கடத்தப்பட்டுள்ளது… அவை இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சிலரை நாம் கைது செய்துள்ளோம். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஊழல் மூலம் ஈட்டப்பட்ட செல்வமே டொலர்கள் ஊடாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளது. இலங்கைக்குள் அது ரூபாய்களாக இருக்கலாம், ஆனால் நாட்டிலிருந்து கடத்தப்பட்டது டொலர் வடிவத்திலாகும். இந்நாட்டின் பொருளாதாரமும் சமூகக் கட்டமைப்பும் வீழ்ச்சியடைவதற்கு ஊழலே காரணமாக இருந்துள்ளது. எவருக்கும் தனிப்பட்ட பழிவாங்கும் எண்ணமோ, குரோதத்தைத் தீர்த்துக்கொள்ளும் தேவையோ எமக்குக் கிடையாது. இது பழிவாங்கல் அல்ல. போதைப்பொருள் பணம், குற்றவாளிகளின் பணம், ஊழல் மூலம் ஈட்டப்பட்ட பணம் என அனைத்தும் TT (Telegraphic Transfer) ஊடாகவே சென்றுள்ளன.”

“இந்நாட்டின் பொதுமக்களுக்கு ஊழல், மோசடிகளுக்கு எதிராகத் தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பிற்கு உயிர் கொடுக்கும் அரசாங்கமாக நாம் மாறி வருகிறோம். அதை நாம் செய்வோம். சிலர் தங்களது உயிரைப் பணயம் வைத்தே இந்த விசாரணைகளை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு எனது நன்றிகள். அதற்கமைய, பெருமளவிலானோருக்கு நாம் பிடியாணை பெற்றுள்ளோம். பெருமளவிலானோர் நீதிமன்றத்தை எதிர்கொள்ள முடியாமல் தப்பியோடியுள்ளனர். இது பழிவாங்கல் அல்ல. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தங்களைப் பற்றிய தரவுகளை நீதிமன்றத்தில் முறையாக முன்வைத்து, விடுதலையாவதற்கான உரிமை உண்டு.”

“எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 3,390 கிலோ ஹெரோயின், 304 கிலோ கொகெய்ன், 5,543 கிலோ ஐஸ், 1,521 கிலோ குஷ் மற்றும் 5,110,731 போதை மாத்திரைகளும், 2,454,267 போதை குளிசைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நச்சுப் போதைப்பொருட்களைக் கைப்பற்றுவதற்காக நாம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கடல் எல்லையில் கடற்படையினர் பாரிய பங்காற்றி வருகின்றனர். எனினும் இவை இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அனைத்து இடங்களிலும் இதனை ஒடுக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்தஸ்து தராதரம் பாராது நாம் பலரைக் கைது செய்துள்ளோம்.”

“அதேபோன்று, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கும் பாரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை நாம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த 23 பேரை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவந்துள்ளோம். மேலும் பல்வேறு வழிகளில் இவற்றுடன் தொடர்புடைய 35 பேர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். சிலர் சிறைச்சாலையில் இருந்துகொண்டே இவற்றை இயக்கியுள்ளனர்.”

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் பாரிய தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், இதனை ஒரே இரவில் முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, போதைப்பொருள் வலையமைப்பை இலங்கையிலிருந்து முற்றிலும் ஒழிப்பதாகவும் இங்கு தெரிவித்தார்.

இதற்காக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் ஜனநாயகத்திற்குப் புறம்பாக செய்யப்படமாட்டாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எவரும் ஆட்சியாளரைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.

எமக்குத் தேவை ஆட்சியாளருக்குப் பயப்படும் ஒரு சமூகம் அல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சியாளரைத் தொடர்ச்சியாகக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு நிர்வாகமே எமக்குத் தேவை என்றும் கூறினார்.

“நீண்ட காலமாக, 1979 ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, விசேட ஏற்பாடுகளைக் கொண்ட தற்காலிகச் சட்டமாகவே கொண்டுவரப்பட்டது. ஒரு வருட கால தற்காலிகச் சட்டமாகவே PTA கொண்டுவரப்பட்டது. இப்போது 46 வருடங்களாக இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு கோரி ஒரு போராட்டம் இருந்தது. தங்களது சுதந்திரத்தை விரும்பும் மனிதர்களுக்கு, இந்த கடுமையான சட்டம் குறித்து நாட்டில் ஒரு பிரச்சினை இருந்தது. நீண்ட காலமாக மக்கள் அந்தச் சட்டத்தை நீக்குமாறு போராடினார்கள். நான் உங்களுக்குக் கூற விரும்புகிறேன், இவ்வருடத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படும்.”

“ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கான வரைவிலக்கணம் சரியாகச் சுருக்கப்பட்டு, அது தயாரிக்கப்படும். அதில் பரந்ததொரு வரம்பு உள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகள், பேச்சுரிமை மற்றும் ஜனநாயக உரிமை என்பன முற்றிலும் பாதுகாக்கப்படும் வகையில், திருத்தங்களுக்கு உட்படுத்தி அதனை மிக விரைவில் செய்வோம். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை மட்டுமே இலக்காகக் கொண்ட ஒரு வரையறைக்கு உட்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்திற்கான புதிய சட்டமூலத்தை நாம் கொண்டு வருவோம்.” என்றார்.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்