உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம் கிடைக்கும் என அரசு நம்பிக்கை
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து குறைந்து வருவதால், இலங்கை மக்களுக்கு விரைவில் எரிபொருள் விலை தொடர்பான நிவாரணத்தை வழங்க அரசு எதிர்பார்த்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இதுவரை அரசு ரூ.57 பில்லியன் மதிப்பிலான எரிபொருள் மானியத்தை வழங்கியுள்ளதாகவும், அந்த மானியத் திட்டம் இம்மாதத்துடன் நிறைவடையவுள்ளதாகவும் கூறினார்.
மானியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கும் என்றும், பொதுமக்கள் மீது தேவையற்ற நிதிச் சுமையை ஏற்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்ததன் காரணமாக உள்நாட்டு எரிபொருள் விலைகளிலும் சிறிய அளவில் உயர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் விளக்கினார்.
எனினும், தற்போது சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் மீண்டும் குறையத் தொடங்கியுள்ளதாகவும், குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்புகள் இலங்கைக்கு வந்தவுடன் அதன் நன்மை நேரடியாக நுகர்வோருக்கு கிடைக்கும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.




