நாடு முழுவதும் சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான சட்டவிரோதச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவற்றை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, குறுகிய காலத்திலேயே அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு பாலைமீன்மடுவில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 17ஆம் தேதி காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் காரணமாக, அவமானத்தை தாங்க முடியாமல் அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டது மிகுந்த பரிதாபகரமானது என்றும், இத்தகைய சம்பவங்கள் இலங்கை சமூகத்தின் மனச்சாட்சியையே உலுக்கும் வகையிலானவை என்றும் குறிப்பிட்டார்.
சிறுவர் துஷ்பிரயோகம் என்பது பாதிக்கப்படும் சிறுவரை மட்டுமல்லாது, அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் முழு சமூகத்தையும் பாதிக்கும் கொடூரமான குற்றமாகும். எனவே, இவ்வாறான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் கடுமையான சட்ட நடவடிக்கைகளும், அதிகபட்ச தண்டனைகளும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள கிராம உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தி அமைப்புத் தலைவர்கள், மத நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு, சிறுவர் துஷ்பிரயோகம், கசிப்பு உற்பத்தி, போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றச்செயல்கள் இடம்பெறாத வகையில் கூட்டு கண்காணிப்பை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், தொழில் நிமித்தமாக பெற்றோர் வெளிநாடுகளுக்கு சென்றிருப்பது, அல்லது தாய் அல்லது தந்தையர் ஒருவரின் பாதுகாப்பில் மட்டுமே வாழ்ந்து வரும் 18 வயதுக்குட்பட்ட 3,000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பு குறைவான சூழலில் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இச்சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, கிராம உத்தியோகத்தர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்தி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, தற்போதைய இலங்கை தண்டனைச் சட்டத்தில் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் போதுமான கடுமையுடையதாக இல்லை என்றும், அதனால் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்காக தனிப்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, விரைவான விசாரணை மற்றும் மரண தண்டனை வழங்கும் சட்ட நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி ஒருமித்த குரலில் இக்கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்து, சட்டத்தை மேலும் கடுமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படாவிட்டால், அவை தொடர்ச்சியாக அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்த அவர், நாடு முழுவதும் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் வியாபாரம் போன்ற மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விரைவான தண்டனை வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், சட்டத்தரணிகளிடமும் அவர் வேண்டுகோள் விடுத்து, சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்காக நீதிமன்றத்தில் சார்பாக ஆஜராகி வாதிடாமல் இருக்க வேண்டும் என்றார். சட்ட உதவி மற்றும் பண பலத்தை நம்பியே பல குற்றவாளிகள் தப்பிக்க முயற்சிக்கின்றனர்; ஆகையால் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக சட்ட உதவி வழங்காமல் இருப்பது நாட்டுக்கும் சமூகத்துக்கும் செய்யப்படும் ஒரு பெரிய பொறுப்புணர்வான செயல் எனவும் அவர் குறிப்பிட்டார்.




