ஐக்கிய அரபு அமீரக (UAE) அமைச்சரவை, குழந்தைகளின் சமூக ஊடக அணுகலை ஒழுங்குபடுத்தும் புதிய தீர்மானத்தை வெளியிட்டு, சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகளை சமூக ஊடக தளங்கள் நடைமுறைப்படுத்துவதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து 12 மாதங்கள் வரை இடைக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
புதிய தீர்மானத்தின்படி, 15 வயதிற்குக் குறைவான குழந்தைகள் சமூக ஊடக தளங்களில் தனிப்பட்ட கணக்குகளை உருவாக்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது. மேலும், சமூக ஊடக தளங்களின் முழுமையான அம்சங்களையும் அவர்கள் அணுக அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அதேவேளை, 15 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு, வயதிற்கு ஏற்ற உள்ளடக்க வகைப்பாடு, கட்டுப்படுத்தப்பட்ட தொடர்பாடல் வசதிகள், ஒழுங்குபடுத்தப்பட்ட பயன்பாட்டு நேரம் மற்றும் பெற்றோர் கண்காணிப்பு வசதிகளுடன் பாதுகாப்பான அணுகல் வழங்கப்பட வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடக நிறுவனங்கள், பயனர்களின் வயதை துல்லியமாக உறுதிப்படுத்தக்கூடிய நம்பகமான வயது சரிபார்ப்பு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறும் கணக்குகளை கண்டறிந்து, உடனடி நடவடிக்கை எடுத்து அவற்றை கட்டுப்படுத்தவும் நிறுவனங்கள் கடமைப்பட்டுள்ளன.
மேலும், பெற்றோர் அனுமதி வழங்கினாலும், இந்த விதிமுறைகளில் உள்ள தடை அல்லது கட்டுப்பாடுகளை மீறுவதற்கு அது செல்லுபடியாகாது என தீர்மானம் தெளிவுபடுத்துகிறது. அதாவது, பெற்றோர் ஒப்புதல் அளித்தாலும் 15 வயதிற்குக் குறைவான குழந்தைகள் சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்த அனுமதி கிடைக்காது.
குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை கண்காணித்து அவர்களின் தனிப்பட்ட தகவல்களை வணிக அல்லது விளம்பர நோக்கங்களுக்காக சேகரிப்பதையும் பயன்படுத்துவதையும் இந்த தீர்மானம் தடை செய்கிறது.
இதன்படி, நிறுவனங்கள் குழந்தைகளின் ஆன்லைன் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரித்து வணிக லாபத்திற்கோ விளம்பர நோக்கங்களுக்கோ பயன்படுத்த முடியாது.
குழந்தைகளின் அனுமதிக்கப்பட்ட டிஜிட்டல் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பதும், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான இணையப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் பொறுப்பாகும் என தீர்மானம் வலியுறுத்துகிறது.
மேலும், குழந்தைகள் பொறுப்பான மற்றும் விழிப்புணர்வுள்ள டிஜிட்டல் வாழ்க்கை முறையை பின்பற்ற உதவும் தெளிவான வழிகாட்டுதல்களையும் நடைமுறை கருவிகளையும் குடும்பங்களுக்கு இந்த புதிய சட்டம் வழங்குகிறது.
சமூக ஊடக நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து அனைத்து தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், இந்த புதிய விதிகளை அடுத்த ஒரு ஆண்டுக்குள் படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என UAE அரசு தெரிவித்துள்ளது.




