FIFA WC 2026 | அலிசனின் 2 ‘சேவ்’களால் பிழைத்தது பிரேசில் – ‘டஃப்’ தந்த மொராக்கோவுடன் சமனிலை!

Date:

நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘சி’- பிரிவு ஆட்டத்தில் ஆஃப்கான் கோப்பைச் சாம்பியன் மொராக்கோவை 5 முறை உலக சாம்பியன்களான பிரேசில் எதிர்கொண்ட ஆட்டம் எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வி இன்றி 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதனால் புள்ளிகள் பகிரப்பட்டுள்ளது.

1934ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஸ்பெயினுக்கு எதிராக முதல் போட்டியில் தோற்ற பிறகே முதல் போட்டியைத் தோற்காமல் பிரேசில் காப்பாற்றி வந்துள்ளது. அதாவது 21 உலகக் கோப்பை முதல் போட்டிகளில் 17 வெற்றிகளுடன் தோல்வியடையாத சாதனையை இன்றும் பராமரித்தது.

மொராக்கோ ஆஃப்கான் கோப்பை சாம்பியன் என்பதாலும் பிரேசில் ஒரு மிகப்பெரிய திறமைகளைக் கொண்ட அணி என்பதாலும் தரவரிசையில் பிரேசில் 6ஆம் இடத்திலும் மொராக்கோ 7ஆம் இடத்திலும் இருப்பதால் இந்த உலகக் கோப்பையின் குழு மட்ட மோதலில் இது பெரிய போட்டியாக கருதப்பட்டது. ஆனால், விளம்பரங்களின் ஹைப்புக்கு ஈடு கொடுத்து ஆடிய அணி மொராக்கோ என்றால் மிகையாகாது. பிரேசில் அணி முதல் அரைமணி நேரத்தில் திக்கித் திணறியது. மொராக்கோவின் நட்சத்திர வீரர் ஹக்கிமி வலது புறத்தில் பிரேசிலுக்கு கடும் சிக்கல்களை ஏற்படுத்தினார்.

மொராக்கோவின் முதல் கோல்!

அந்தச் சிக்கல்களின் விளைவாக முதல் அரைமணி நேர ஆட்டத்திலேயே 7 முறை கோலை நோக்கிய ஷொட் முயற்சி செய்தது மொராக்கோ. ஆனால், எதுவும் இலக்கு நோக்கி இல்லை. என்றாலும் இந்த அரைமணி நேரத்தில் பிரேசில் கால்கள் மெதுவாகவும் களைப்படைந்ததாகவுமே இருந்தது. இத்தகைய ஆட்டப்போக்கில்தான் 21 வது நிமிடத்தில் பிரேசிலின் தடுப்பு வீரர்கள் எங்கே என்ற கேள்வி எழுமாறு அந்த மொராக்கோ கோல் அமைந்தது. மிட்ஃபீல்டில் ஒரு தளர்வான பந்தை மொராக்கோ வீரர் பிராஹிம் டயஸ் எடுத்து சக வீரர் சைபாரியிடம் கொடுக்க அங்கு பிரேசில் தடுப்பு வீரர்கள் இல்லை.

பந்து பெனால்டி பகுதிக்குள் செல்லாமலேயே பிரேசில் கோல் கீப்பர் முன்னால் வந்து தடுக்க முனைந்தார், கோல் வலை காலியாக இருக்க, சைபாரி பந்தை தூக்கி விட்டார் கோல் வலைக்குள் பந்து புகுந்தது மொராக்கோ 1-0 என்று முன்னிலை பெற்றது. இதில் பிரேசில் ஆடிப்போய் விட்டது.

பிரேசிலுக்கு உயிர் கொடுத்த ‘மேஜிக்’ வினிசியஸ் ஜூனியர்:

26 வது நிமிடத்தில் அஷ்ரப் ஹக்கிமி மீண்டும் ஒரு கோல் முயற்சியை மேற்கொண்டார். ஆனால், பந்து வைடாகச் சென்றது. ஒரு கோலை வாங்கிய பிறகே உணர்வு பெற்ற பிரேசில், கொஞ்சம் உஷ்ணத்தைக் கூட்டியது. வேகத்தைக் கூட்டியது, அந்த நிலையில்தான் ஆட்டத்தின் 32 வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் பிரேசில் அணிக்கு உயிர் கொடுத்தார்.

பிரேசிலின் இன்னொரு வீரர் கிமாரேஸ் கொடுத்த அட்டகாசமான பாஸை இடது விங்கில் இருந்த வினீஷியஸ் பெற்று உள்ளே வந்தார். பந்தை வலது காலுக்கு மாற்றிக் கொண்டு மொராக்கோ கோல் கீப்பர் ஒன்றுமே செய்ய முடியாதபடிக்கு ரொப் கோர்னரில் சக்தி வாய்ந்த ஷொட்டை கோலுக்குள் செலுத்தினார். உண்மையில் மேஜிக் கோல். இத்தகைய கோல்தான் இன்று பிரேசிலை உயிர்ப்பித்தது என்றால் மிகையாகாது. வினிசியஸின் 10வது சர்வதேச கோல் ஆகும் இது.

இடைவேளைக்கு சற்று முன்னதாக பிரேசிலின் பக்வெட்டா அடித்த சிசர் ஷொட் முயற்சியை மொராக்கோ கோல்கீப்பர் தடுத்தார். கடைசி நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் மிக வேகமாக ஒரு பந்தை எடுத்துச் சென்றார். ஆனால் மொராக்கோ நட்சத்திர வீரர் ஹக்கிமி அதைத் தடுத்தார். வினிசியஸ் நடுவரிடம் ஃபவுல் என்று மன்றாடினார். ஆனால், ஃபவுல் கொடுக்காத நடுவர் ஃப்ரீ கிக்கையும் மொராக்கோவுக்கு வழங்கினார். வினிசியஸ் கடுப்பானார். இடைவேளை இவ்வாறு கொஞ்சம் உஷ்ணத்துடன் முடிந்தது. இரு அணிகளும் 1-1 என்று இருந்தது.

இடைவேளையின் போது இரண்டு பிரேசில் வீரர்கள் காஸ்மிரோ மற்றும் இபனேஸுக்கு மஞ்சள் அட்டைக் காட்டப்பட்டதால் இடைவேளைக்குப் பிறகு மேலாளர் ஆன்சிலோட்டி அவர்களைக் களமிறக்காமல் ரஃபீனா மற்றும் ஹென்றிக் ஆகியோரைக் களமிறக்கினார், இவர்களுடன் குனியாவும் சேர பிரேசில் அணிக்குக் கொஞ்சம் வேகம் கிடைத்தது.

ஆனாலும் மொராக்கோவின் தடுப்பு உத்தியைத் தாண்டி கோலாக மாற்ற முடியாமல் திணறியது. கோல் நோக்கிய ஷொட்களும் அரிதானது. ஆனால் ஆட்டம் முடியும் தறுவாயில் பிரேசில் மிகவும் ஆக்ரோஷமாக ஆடியது. கோலாக அது மாறவில்லை. லூயிஸ் ஹென்றிக் ஏறக்குறைய வெற்றி கோல் அடித்திருப்பார். ஆனால் மொராக்கோ கோல்கீப்பர் பானோ அருமையாக பிரஷர் சூழ்நிலையில் தடுத்தார்.

ஆட்டம் 90 நிமிடங்கள் சென்ற பிறகு கடைசி 10 நிமிட ஸ்டாப்பேஜ் டைமுக்குச் சென்றது. அதில் 99வது நிமிடத்தில் மொராக்கோ ஏறக்குறைய வெற்றிக்கான கோலை அடித்திருக்கும், அத்தகைய அட்டகாசமான முயற்சியை அதைவிடவும் கூர்மையான பிரேசில் கோல்கீப்பர் அலிசன் தடுத்துக் காப்பாற்றினார்.

முதலில் மொராக்கோ வீரர் எல் அய்னோயி பிரேசில் கோல் வலையின் வலது மூலையை நோக்கி அடித்த அற்புதமான ஷொட்டை அலிசன் டைவ் அடித்து தட்டி விட்டார். ஆனால் அங்கு இன்னொரு மொராக்கோ வீரர் அமய்மவ்னி பந்தை கோலுக்குள் திருப்பி விட்ட முயற்சியையும் அலிசன் தடுத்தாட்கொண்டார். இதனால் பிரேசில் தப்பிப் பிழைத்தது. இல்லையெனில் மொராக்கோவிடம் இன்று தோல்வி கண்டிருக்கும்.

பிரேசில் அணி இன்னும் நிறைய கடின உழைப்பை இட வேண்டியுள்ளது. உத்தி ரீதியாகவும் இத்தாலி பயிற்சியாளர் ஆன்சிலொட்டி நிறைய பிரேசில் அணியிடத்தில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘அல்வா’ கொடுத்த செல்வம்; மீண்டும் தலைவரானார்: அதிருப்திக்குழு நீதிமன்றத்தை நாடுகிறது!

பெண்ணொருவருடன் சர்ச்சைக்குரிய உறவு தொடர்பான தொலைபேசி உரையாடல் கசிந்ததை தொடர்ந்து தமிழீழ...

உலகளவில் El Niño உருவாகும் சாத்தியம் – பிப்ரவரிக்குப் பிறகு கனமழை எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் El Niño காலநிலை நிகழ்வு,...

காலிமுகத்திடலில் கின்னஸ் சாதனை: 5,000க்கும் மேற்பட்டோர் இணைந்து பரதநாட்டியம்!

கொழும்பில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் இணைந்து கின்னஸ் உலக சாதனை! கொழும்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்