இன்றைய அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களின் பணம் மட்டுமன்றி, தோல்விகளுக்கான பொறுப்புகளும் குற்றச்சாட்டுகளும் தவறான இடங்களுக்கு திருப்பப்படுகின்றன என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று (12) செருவாவில, ராஜவெவ பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன், சர்ச்சைக்குரிய “Rebuilding Sri Lanka” நிதியம் குறித்தும் கருத்து வெளியிட்டார்.
அந்த நிதியம் முறையாக நிறுவப்படவில்லை என்றும், அதனுடன் தொடர்புடைய நிதி எவ்வாறு கையாளப்பட்டது என்பது குறித்த தெளிவின்மை இருப்பதாக நாடாளுமன்ற நிதிக்குழுவில் அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் கூறினார்.
“இப்போது அரசாங்கக் கணக்குகளில் இருந்து பணம் தவறான கணக்குகளுக்குச் செல்கிறது. அதைப் பற்றி கேள்வி எழுப்பினால் ‘ஹேக்கர்’ அல்லது நிர்வாகப் பிழை என்ற பதில் வழங்கப்படுகிறது. பணம் மட்டுமல்ல, குற்றச்சாட்டுகளும் தவறான கணக்குகளுக்கே செல்கின்றன போல தெரிகிறது,” என நாமல் தெரிவித்தார்.
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். உரத் தட்டுப்பாடு மற்றும் விவசாயப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையான சவால்களை சந்தித்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.
மேலும், அரிசி ஆலை உரிமையாளர்கள் இழப்புகளை எதிர்கொள்வதாகவும், எதிர்கால பயிர்ச்செய்கைக்கான தெளிவான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேறவில்லை என்றும், தொழிற்சாலைகள் மூடப்படுவதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைவதும் பொருளாதாரத்தை பாதித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களுக்கும் வணிகங்களுக்கும் அதிக வரிச் சுமை விதிக்கப்படுவதாகவும், இதனால் பல சிறு தொழில்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் நாமல் கூறினார். பெரிய அளவிலான வணிகங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, விவசாயிகள், தொழில்முனைவோர், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, எதிர்க்கட்சிகளின் குரலை அடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார். மேலும், சிவில் பாதுகாப்புத் திணைக்கள (Civil Security Department) பணியாளர்கள் தங்கள் சொந்த பகுதிகளிலிருந்து மாற்றப்பட்டு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்ளூர் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களை புறக்கணித்து இறக்குமதிகளையே அதிகம் நம்பும் பொருளாதாரக் கொள்கையை அரசாங்கம் பின்பற்றுகிறது என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான தெளிவான நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என்றும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.
உரையின் இறுதியில், மக்களுக்கு பொறுப்புக்கூறும், உள்ளூர் தொழில்களைப் பாதுகாக்கும், விவசாயத்தை வலுப்படுத்தும் மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் ஆட்சியை உருவாக்குவதற்காக அரசியல் வேறுபாடுகளை தாண்டி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.




