76 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, Young Presidents’ Organisation (YPO) அமைப்பின் உலகளாவிய வாரியத்திற்கு ஒரு இலங்கையர் தேர்வாகியுள்ளார். முன்னணி தொழிலதிபரான நஸ்ரி நிஸார், உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைமைத்துவ அமைப்புகளில் ஒன்றான YPO-வின் உலகளாவிய நிர்வாக சபையில் இடம்பிடித்துள்ளார்.
2026 மே 21ஆம் திகதி நடைபெற்ற YPO வருடாந்த பொதுக்கூட்டத்தில் அவரது நியமனம் உறுதிப்படுத்தப்பட்டது. அவர் 2026 முதல் 2029 வரை YPO உலகளாவிய வாரிய இயக்குநராகப் பணியாற்றுவதுடன், YPO Global Forum Committee-யின் தலைவராகவும் ஒரே நேரத்தில் செயல்படவுள்ளார்.
1950ஆம் ஆண்டு நிறுவப்பட்ட YPO, உலகின் 150 நாடுகளில் இருந்து 38,000க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களை உள்ளடக்கிய உலகளாவிய தலைமைத்துவ சமூகமாகும். அதன் உறுப்பினர்கள் வழிநடத்தும் நிறுவனங்கள் ஆண்டுதோறும் சுமார் 9 டிரில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை உருவாக்குகின்றன.
வழக்கமான வணிக அமைப்புகளை விட வித்தியாசமாக, தலைமைத்துவம் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் கற்றல் பயணம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் YPO இயங்குகிறது. நிர்வாகக் கல்வி, அனுபவப் பகிர்வு மற்றும் இரகசிய தலைமைத்துவ கலந்துரையாடல்கள் மூலம் உலகளாவிய தலைவர்களை ஒன்றிணைக்கும் தளமாக இது விளங்குகிறது.
YPO அமைப்பில் பல ஆண்டுகளாகச் சேவையாற்றி வந்த நஸ்ரி நிஸார், முன்னதாக YPO Colombo Integrated Chapter-இன் தலைவராகவும், YPO South Asia Regional Board உறுப்பினராகவும், அண்மையில் YPO Global Forum Committee உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த நஸ்ரி நிஸார், “தலைமைத்துவம் என்பது எல்லா பதில்களையும் அறிந்திருப்பது அல்ல. அது தொடர்ச்சியான கற்றல், நம்பிக்கையான உறவுகள் மற்றும் பிறரின் அனுபவங்களிலிருந்து வளரத் தயாராக இருப்பது பற்றியது என்பதை YPO எனக்கு கற்றுக்கொடுத்தது” என தெரிவித்தார்.
இந்த நியமனம் தனக்கு பெருமையையும் பணிவையும் அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், மேலும் பல இலங்கைத் தலைவர்கள் உலகளாவிய தளங்களில் இணைந்து தங்களது அனுபவங்களை உலகுடன் பகிர ஊக்கமளிக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
தற்போது நஸ்ரி நிஸார், பொறியியல், உட்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உற்பத்தி மற்றும் வெளிப்புற விளம்பரத் துறைகளில் செயற்படும் Richardson Holdings நிறுவனத்தின் குழும முகாமைத்துவ பணிப்பாளராக (Group Managing Director) பணியாற்றி வருகிறார்.
அவரது தேர்வு, இலங்கை வணிகத் தலைமைத்துவத்திற்கான முக்கிய சாதனையாகக் கருதப்படுவதுடன், சர்வதேச தலைமைத்துவ வலையமைப்புகளில் இலங்கை நிர்வாகிகளின் அதிகரித்து வரும் பங்களிப்பையும் வெளிப்படுத்துகிறது.




