“அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இணைந்து அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் வழங்கி இருந்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பாஜக இன்று அறிவித்தது.
இந்நிலையில், தனது எதிர்கால திட்டங்கள் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக அவர் பேசினார். அப்போது அண்ணாமலை கூறியது: “நான் 2020, ஆகஸ்ட் 25-ல் பாஜகவில் இணைந்தேன். தமிழக மக்களுக்காக 6 ஆண்டு காலம் பணியாற்றுவதற்கு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
என்னுடைய பாதை வேறு; வேறு பாதையில் பயணம் செய்ய வேண்டும்; எனக்கு இலக்குகள் பெரியதாக உள்ளன; நிறைய மக்களை இணைத்து செயல்பட வேண்டும்; ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்புகளை மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் இருக்கிறேன் என்பதை பாஜக தலைவர்களிடம் பண்போடு சொல்லிவிட்டு அந்த இயக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளேன். இது தமிழர் பண்பு என்றும்கூட வைத்துக்கொள்ளலாம்.
ஒரு புதிய இயக்கம், ஒரு புதிய அரசியல் இயக்கம், ஒரு புதிய பரிமாணத்தோடு இயங்கக்கூடிய வகையில்தான் நமது இயக்கத்தை தொடங்க வேண்டும்; எல்லோரும் சேர்ந்து, இணைந்து இதை ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது பெரிய ஆசை.
எனது அரசியல் பாதை எளிதானது அல்ல. வளைந்து, நெளிந்து நான் இங்கு வந்திருக்கிறேன். ஒரு கிராமத்தில் பிறந்து, ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். இதுபோன்ற எளிய பின்னணி கொண்ட மனிதர்கள் அரசியலுக்கு வருவதே அரிது. ஏனெனில், நாம் ஒதுங்கிக் கொள்வோம்; வர மாட்டோம்.
என்னுடைய பாதையும்கூட 2009ல் விஜயகாந்த்தின் தேமுதிகவில் மூன்று மாத காலம் இருந்து பயிற்சி பெற்று, பின்னர் 10 ஆண்டு காலம் கழித்து பாஜகவில் இணைந்து அங்கு 6 ஆண்டு காலம் பணியாற்றிய நிலையில், தற்போது தனித்துவமான முறையில் நம்முடைய இயக்கத்தை மக்கள் முன் வைக்க வேண்டும் என்பதற்காக நான் உங்கள் முன் நிற்கிறேன்.
நான் காவல்துறை பதவியை விட்டு விலகிய பிறகு எனக்கும் நடிகர் ரஜினிகாந்த்துக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நான் பாஜகவில் இணைவதற்கு ஒரு நாள் முன்பாக நடிகர் ரஜினிகாந்த் என்னிடம் தொலைபேசியில் பேசினார். நான் அவரது இயக்கத்தில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
அப்போது, தமிழ்நாட்டுக்கு எது நல்லது; ரஜினிகாந்துக்கு எது நல்லது; அண்ணாமலைக்கு எது நல்லது என்ற மூன்று விஷயங்கள்தான் என் கண் முன்பாக இருந்தன. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டுக்கு நல்லது. ஆனால், கோவிட் பெருந்தொற்று காலமாக இருந்ததால் அவர் அரசியலுக்கு வராமல் இருப்பது அவருக்கு நல்லது. நான் பாஜகவில் இணைவதாக பி.எல். சந்தோஷ் அவர்களிடம் வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதனால் அதை மீறக்கூடாது என நான் கருதினேன்.
இதனால், என்னை மன்னித்துவிடுங்கள்; என்னால் வர முடியாது என்று ரஜினிகாந்த்திடம் கூறிவிட்டு, மறுநாள் பாஜகவில் இணைந்தேன். பிறகு நேரிலும் சந்தித்து மன்னிப்பு கோரினேன். அவரும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு தனது முடிவை அவர் எடுத்தார். சில யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன். வேறு காரணம் இல்லை.
பாஜகவில் நான் இருந்தபோது பல தலைவர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தார்கள். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அப்போது முடிவெடுத்தோம். அதேபோல், மக்களவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்து அவ்வாறே போட்டியிட்டோம். எனக்கும் இன்னொரு கட்சிக்குமான தனிப்பட்ட பிரச்சினை அல்ல அது. பாஜக தமிழர் அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு நிலைப்பாட்டை நாங்கள் எடுத்தோம்.
பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கக்கூடிய மனிதன் நான். இந்த நாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கக்கூடிய மனிதர் அவர். ஆனால், பாஜகவில் எனக்கு சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்துகொண்டே இருந்தன. இது குறித்து கடந்த 18 மாதங்களாக நான் பாஜக தலைவர்களிடம் சொல்லிக்கொண்டே வந்துள்ளேன்.
பாஜகவில் இருந்து நான் விலக உள்ளேன் என்பதை கடந்த டிசம்பர் 4ம் தேதியே நான் கூறினேன். இப்போதே உங்களை தயார்படுத்த விரும்புகிறேன் என்பதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவெடுக்க விரும்பவில்லை என்றும் அவர்களிடம் கூறினேன். அப்போது தேர்தல் பணியை முடித்துவிட்டு செல்லுமாறு சொன்னார்கள். உண்மைத் தொண்டனாக அதை ஏற்று தேர்தல் பணியை முடித்துவிட்டு மே மாதம் இறுதிவரை நான் எனது பணியை செதுவிட்டுத்தான் வெளியே வந்துள்ளேன்.
அடுத்ததாக, ஆனந்தமாக, அன்போடு தமிழகத்தில் நாம் ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம். இது அரசியல் இயக்கமா கட்சியா என்றால், அடுத்து தமிழகத்தில் நடைபெற இருக்கிற பொதுத் தேர்தலில் நமது கட்சி போட்டியிடும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்கு நாம் நிறைய தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிறைய தலைவர்களை உருவாக்க வேண்டும். நிறைய நிர்வாகிகளை, தன்னார்வர்களை தயார்படுத்த வேண்டும். அதற்கான திறன்களை நாம் அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் நேரம் ஆகும். நாம் ஒரு இயக்கமாக ஆரம்பித்து நிறைய மனிதர்களை உள்ளே கொண்டு வந்து அவர்களுக்கு அரசியலை சொல்லிக் கொடுத்து, எல்லா தரப்பு மனிதர்களையும் உள்ளே கொண்டு வர வேண்டும்.
நான் பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதலில் யாரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினேன் என்றால் சமீபத்தில் மறைந்த நல்லக்கண்ணு அய்யா அவர்களிடம்தான். மண் சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டும், நல்ல மனிதர்களை உள்ளே கொண்டு வர வேண்டும். எல்லா மனிதர்களையும் உள்ளடக்கிய அரசியலை நாம் முன்னிறுத்த வேண்டும். நிறைய தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் இணைய வேண்டும்.
உலக அளவிலான பல தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் பதவிகளில் நமது தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நாம் தமிழகத்துக்கு அழைத்து வர வேண்டும். தமிழத்தின் வளர்ச்சிக்கு எல்லோரையும் நாம் பயன்படுத்த வேண்டும். வளர்ந்த பாரதத்தில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை கொண்டு வந்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதற்கேற்ப அரசியல் இலக்கணம், அரசியல் மொழி என அனைத்தையும் நாம் மாற்ற வேண்டும்.
தமிழகத்துக்கு இன்றைக்கு ஒரு அரசியல் கட்சி வேண்டுமா என்று கேட்டால், நிச்சயமாக வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் ஒரு பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதன் தரத்தைப் பார்த்துதான் வாங்குகிறோம். அதேபோல், நமது இயக்கம் கட்சியாக மாறும்போது மக்கள் அதன் தரத்தைப் பார்ப்பார்கள். நாம் எல்லோரும் பொதுமக்களில் இருந்து வரக்கூடிய தலைவர்களாகத்தான் இருப்போம். தனி நபரை துதிபாடும் அரசியல் இருக்காது.
மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும். தூய்மையான அரசியல், தூய்மையான நிர்வாகம் என்பது அதற்கான திறன்படைத்த தலைவர்களால்தான் சாத்தியம். அதற்கேற்ப உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் இருந்து அனைத்து மட்டங்களிலும் அத்தகைய தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும். இந்த கட்சியில் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கும் வகையில் பதவிக்காலம் நிர்ணயம் செய்யப்படும். எத்தனை முறை எம்எல்ஏவாக இருக்கலாம், எத்தனைமுறை எம்பியாக இருக்கலாம் என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும். எனக்கும் இது பொருந்தும். நிரந்தர எம்எல்ஏ, நிரந்தர எம்பி என்பதை நாம் உடைக்கப் போகிறோம்.
இதற்காக www.wetheleader.org என்ற இணைய தளம் செயல்படும். நமது இயக்கத்தில் இதன்மூலம் இணைய முடியும். கோவையில் ஏபிஜே அப்துல் கலாம் அய்யா பெயரில் Centre for Ethics and Politics எனும் அமைப்பை உருவாக்க இருக்கிறோம். இதன்மூலம், பயிற்சிகள் அளிக்கப்படும். நாம் மாறினால் மாற்றம் தானாக வரும். எனவேதான் இந்த இயக்கத்தின் கொள்கையே மாறுவோம்; மாற்றுவோம்.
சமூக வலைதளத்தில் எனது ஆதரவாளரகள் யாராவது யாரையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயம் செய்ய வேண்டும். அதேநேரத்தில், வயதானவர்கள் தங்கள் காலத்தை மகிழ்ச்சியோடு கழிக்க தேவையான மாற்றங்களை நாம் செய்ய வேண்டும்.
பிரதமர் மோடி நமது பிரதமர். அதில் ஒரு கம்பீரம் இருக்கிறது. அதேநேரத்தில், திமுக, அதிமுக, தவெக, பாமக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை எப்படி பார்ப்போனோ அதேபோலத்தான் பாஜகவையும் நான் பார்ப்பேன். யாருக்கும் நாம் போட்டி கிடையாது. யாரையும் எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கப் போவது கிடையாது. தரம் பார்த்து மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நாம் மக்கள் முன் நிற்கப்போகிறோம்.
நாகரிக அரசியலை முன்னெடுப்போம். நாம் எல்லோரும் சேர்ந்து தமிழகத்துக்காக ஒரு புரட்சியை, மாற்றத்தை ஏற்படுத்துவோம். பாரதத்தில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவது மட்டும்தான் நமது குறிக்கோள். இதற்காக நாம் நமது வாழ்வை அர்ப்பணிப்போம். மாறுவோம்; மாற்றுவோம்” என்று அண்ணாமலை கூறினார்.




