பூநகரி பிரதேச சபை மக்களை தேடி சென்று சேவைகளை வழங்கும் திட்டத்தின் மற்றுமொரு படியாக நடமாடும் இலவச ஆயுர்வேத மருத்துவ சேவையினை ஆரம்பித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கூடிய நிலப்பரப்பினை உள்ளடக்கிய சபையாக பூநகரி பிரதேச சபை அமைந்துள்ளது.
எனினும் வாடியடி ,ஜெயபுரம் மற்றும் பல்லவராயன்கட்டு பகுதிகளில் இலவச ஆயுர்வேத வைத்திய சாலைகள் இயங்கிவருகின்ற போதிலும் போதிய போக்குவரத்து வசதிகள் இன்மை மற்றும் நீண்ட தூரம் காரணமாக மக்கள் முழுமையாக இலவச வைத்திய சேவைகளை பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டேவருகின்றனர்.
இத்தகைய நிலையில் மக்களை தேடி சென்று சேவைகளை வழங்கும் திட்டத்தின் மற்றுமொரு படியாக நடமாடும் இலவச ஆயர்வேத மருத்துவ சேவையினை சபை ஆரம்பித்துள்ளது.
வாடியடி உப அலுவலகத்தின் கீழாக முட்கொம்பன், பள்ளிக்குடா மற்றும் கௌதாரிமுனை பகுதிகளில் நடமாடும் வைத்திய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று ஜெயபுரம் வைத்தியசாலையின் கீழ் வேரவில் பொது நூலக கட்டடத்தொகுதியில் கிராஞ்சி,வலைப்பாடு, பொன்னாவெளி,பாலாவி மற்றும் வேரவில் பிரதேச மக்களிற்கான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் இரணைமாதா நகர் வைத்தியசாலையின் கீழ் முழங்காவில் நகரம் மற்றும் நாச்சிக்குடா பிரதேசங்களில் நடமாடும் வைத்தியசேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொதுநூலகங்களை பயன்படுத்தி பாடசாலைகள் தோறும் நடமாடும் நூலக சேவையினை வெற்றிகரமாக முன்னெடுத்துவரும் பூநகரி பிரதேச சபை மக்களை தேடி சென்று சேவைகளை வழங்கும் திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவ சேவையினை ஆரம்பித்துள்ளமை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.




