கோவை சூலூர் அருகே பாலியல் வன்கொடுமை: 10 வயது சிறுமி கடத்திக் கொலை – நடந்தது என்ன?

Date:

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 10 வயது மகள் கடந்த 21-ம் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் சூலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

இந்த நிலையில், கண்ணம் பாளையம் செல்லும் வழியில் குளக்கரை பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று முன்தினம் இரவு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, பெற்றோரும், உறவினர்களும் சிறுமி உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி சூலூர் காவல் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அதிரடிப் படை போலீஸார் குவிக்கப்பட்டனர். கோவை மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, டிஐஜி சாமிநாதன், எஸ்.பி.பவன்குமார் ரெட்டி மற்றும் சூலூர் எம்எல்ஏ சுகுமார் உள்ளிட்டோர் சென்று சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை நகர மாட்டோம் என்று கூறி விடிய விடிய மறியலில் ஈடுபட்டனர். இதனால், கோவை – திருச்சி நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதற்கிடையே, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக இறங்கினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்தி (33) என்ற இளைஞர், சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றது தெரியவந்தது. நேற்று காலை அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கிஇருந்த கார்த்தியை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில், அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும், இதற்கு அவரது நண்பர் மோகன் (30) உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற கார்த்தி, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதிக்க முயன்றபோது, வலது கால், வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோவை போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்து, அவரிடம் விசாரணை நடத்தினார். அவரை மே 5-ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார். மோகன், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில்அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, தமிழக தலைமை டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர், ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் ஆகியோர் கோவைக்கு வந்தனர். சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சம்பத்குமார் இஎஸ்ஐ மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். ‘‘குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரநடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது” என்றார்.

கோவையில் செய்தியாளர்களிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி கூறியதாவது: கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் தொழில் நுட்பஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் அருகில் வசித்து வந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்தி மீது சந்தேகம் ஏற்பட்டது.

சிறுமியின் தந்தையுடன் நட்பாக பழகிய அவர், அவ்வப்போது அவரது மகன், மகள் இருவருக்கும் தின்பண்டங்கள் வாங்கித் தருவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னந்தோப்பில் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். கைது செய்யப்பட்ட கார்த்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவருக்கு உடந்தையாக நண்பர் மோகன் இருந்துள்ளார். குற்றத்தை மறைத்து சதியில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குபதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு விரைவில் அரசு நிவாரண உதவியும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, சிறுமி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்தில் உறவினர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி நிர்வாகிகளின் அஞ்சலிக்குப் பிறகு, உடல் தகனம் செய்யப்பட்டது. 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவை சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் நேற்று கூறியுள்ளதாவது: கோவையில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. மனிதநேயமற்ற, மன்னிக்க முடியாத இத்தகைய குற்றச் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் உயிருக்கு உயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த வழக்கில் தொடர்பு உடையதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, உடனடியாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யத்தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நெடுந்தீவு கடலில் தத்தளித்த தமிழக மீனவர் மீட்பு!

தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில்...

2029 இல் அனுர மீண்டும் ஜனாதிபதியாகுவதை யாராலும் தடுக்க முடியாது!

2029-ல் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை யாராலும் தடுக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்