தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில் முதல்வர் ஜோசப் விஜய் உட்பட பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் எம்எல்ஏவாக பதவியேற்க தொடங்கினர்.
தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய் நேற்று பதவியேற்றார். இதனையடுத்து தற்காலிக பேரவைத் தலைவராக சோழவந்தான் தொகுதி தவெக உறுப்பினர் எம்.வி.கருப்பையாவை நியமிப்பதற்கான கோப்பில், முதல்வர் ஜோசப் விஜய்யிடம், பேரவைச் செயலர் கி.சீனிவாசன் ஒப்புதல் பெற்றார்.
ஆளுநர் மாளிகையில், தற்காலிக பேரவைத் தலைவராக கருப்பையாவுக்கு ஆளுநர் அர்லேகர் நேற்று மாலை 4 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில், முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் பங்கேற்பதாக தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு குழுவாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் தனித்தனியாக வந்தனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை.
முதல்வர் விஜய் பதவியேற்பின்போது வந்தது போலவே இன்றும் கோட் சூட்டில் வருகை தந்தார். சரியாக 9.30 மணிக்கு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது.
சபாநாயகர் உரைக்குப் பிறகு முதல்வர் விஜய் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து உறுதிமொழி எடுத்துக்கொள்ள தொடங்கினர்.



