தமிழக தேர்தல் திருவிழா முடிந்து விட்டது. ஒரு திரைப்படத்தை போலவே முடிந்த தேர்தலில், நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஏதேனும் சித்தாந்தம் இருப்பதாக தெரியவில்லை. எல்லா கட்சிகளிலிருந்தும் ஏதாவதொன்றை உருவி, சாம்பாராக எதையோ பேசி வருவதால், அதை திராவிட கட்சிகளின் நீட்சியாக யாரும் கொள்ளவில்லை.
இந்த தேர்தலில் நடந்த மிகப்பெரிய திருப்பங்கள் இரண்டு. முதலாவது விஜய் முதலமைச்சராவது. இரண்டாவது, இலங்கையில் உள்ள விஜய் ரசிகர்கள் கிளர்ச்சியடைந்து, தமிழக வெற்றிக்கழகத்தை ஆதரித்தது. தமிழக தேர்தலொன்றில் இலங்கையில் இவ்வளவு கிளர்ச்சியடைந்தவர்களை காண்பது அரியதானது.
விஜய்யின் வெற்றி திரைக்கவர்ச்சியுடன நேரடியாக தொடர்புடையதென்ற தர்க்கத்தை வலுப்படுத்துவது இந்த சம்பவம்.
திரைக்கவர்ச்சியினால் விஜய்க்கு ஆதரவாக கிளர்ந்த இலங்கையிலுள்ள ஆதரவாளர்கள், மறுபுறம் தி,மு.கவை கடுமையாக எதிர்த்தனர். திமுகவை எதிர்ப்பதாலேயே விஜய்க்கு ஆதரவளிப்பதாகவும் சிலர் சொன்னார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள், தாம் விஜய்யின் இரசிகர்கள் என்பதால் அவரை ஆதரிக்கிறோம் என பகிரங்கமாக சொல்ல வெட்கப்பட்டு, ஒரு அறிவுஜீவி வேடமிட்டு- திமுகவை எதிர்ப்பால்- ஒரு மாற்றம் அவசியமென்பதால் விஜய்யை ஆதரிப்பதாக சொன்னார்கள்.
இலங்கையிலுள்ள விஜய் ஆதரவாளர்கள் அனைவருமே, அவரது திரைப்பட ரசிகர்கள் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. என்ன, அதை பகிரங்கமாக சொல்ல வெட்கப்பட்டு- ஒரு அறிவுஜீவி வேடமிட்டு- எதிரிகளை தேடித்தேடி உருவாக்கினார்கள்.
சிலருக்கு திமுக ஊழல் கட்சி. திமுக என்ன ஊழல் செய்ததெனறால் தெரியாது. சிலருக்கு திமுக வாரிசு கட்சி. சிலருக்கு மாற்றம் தேவைப்பட்டது. இப்படி தனித்தனி உலகத்தை விஜய் ரசிகர்கள் உருவாக்க, அவர்களை அந்த போதை உலகத்திலேயே வாழ வைத்தது சமூக ஊடக ரீல்ஸ்கள்.
முதலில் ஆராயப்பட வேண்டிய விடயம்- திமுகவை இலங்கையிலுள்ளவர்கள் சிலர் ஏன் எதிர்க்கிறார்கள் என்பது.
இம்முறை விஜய்யை ஆதரித்த இளையவர்கள் பலர் திமுக ஊழல் செய்வதாக சொன்னார்கள். இதை கேட்டபோது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
திமுக என்ன ஊழல் செய்தது என கேட்டால்- அவர்கள் எல்லாவற்றிலும் ஊழல் செய்கிறார்கள் என பொதுவாக சொல்கிறார்களே தவிர- குறிப்பாக எதையும் சொல்ல தெரியவில்லை.
திமுக என்ன ஊழல் செய்தது என்பது இங்குள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு உண்மையில் தெரியாது. இந்த ஊழல் விவகாரத்தை குறிப்பிடும் போது இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும். ஊழலை இயல்பாக்கம் செய்வது இந்த கட்டுரையின் நோக்கமல்ல. எனினும், இலங்கை, இந்திய வெகுஜன சூழல் ஊழலை ஓரளவு இயல்பாக்கம் செய்துள்ளது. மிகச்சில விதிவிலக்கான தேர்தல் முடிவுகளை தவிர்த்தால், பெரும்பாலும் அவர்கள் பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களையெல்லாம் வேறு வேறு காரணங்களை குறிப்பிட்டு தெரிந்தெடுத்துள்ளனர். திமுக ஊழலே செய்யாத தூய கட்சியென்றும் சொல்லவில்லை. ஊழல் என்பது தமிழகத்தின் அரசியலுடன கலந்தது. விஜய் கூட தனது வருமானத்தை மறைத்த ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவர்தான். அதாவது அவர் அதிகாரத்திற்கு வர முன்னரே, ஊழல் செய்வதற்கான எல்லாவித இயல்பையும் கொண்டவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மறுவளமாக, திமுக மீதான ஊழல் வழக்குகள் பெரும்பாலும் நிரூபிக்கப்படவில்லை. கருணாநிதி அல்லது ஸ்டாலின் ஊழல் வழக்கில் தண்டிக்கப்படவில்லை. மாறாக, ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டார். எனினும், திமுக ஊழல் செய்தது என சொல்லும் யாரும் அதிமுக ஊழல் செய்தது என சொல்வதில்லை.
தமிழகத்திலும், இலங்கையிலும் இந்த பொதுக்கருத்து நிலவுவதற்கு 2 பிரதான காரணங்கள் உள்ளன.
முதலாவது, திமுக மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவது. திராவிட இயக்கத்தின் எழுச்சி, தமிழகத்தில் பார்ப்பன அதிகாரத்தை உடைத்து எழுந்தது. அதிமுகவும் திராவிட கட்சியென்ற போதும், அது பின்னாளில் திராவிட சித்தாந்தத்தை கடைப்பிடிக்கவில்லை. அது ஒருவித பார்ப்பன கட்சியாகவே விளங்கியது.
தமிழகத்தின் கருத்துருவாக்க ஊடகங்கள் அனேகமானவை பார்ப்பன அதிகாரத்தை அண்டியுள்ளவை அல்லது மத்திய அரசை ஏதோ விதத்தில் சார்ந்திருப்பவை. திமுக ஆட்சியை பிடிக்கும் சமயத்திலெல்லாம், திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் போலி பிம்பத்தை உருவாக்குகின்றன.
மறுபுறம், ஜெயலலிதா ஆட்சி பீடமேறினால் இந்த பிம்பத்தை உருவாக்குவதில்லை. ஆனால் ஜெயலலிதானதான் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி. விஜய்யின் நடவடிக்கை மற்றும் கட்சி பிரமுகர்களை கவனித்தால், பார்ப்பன ஊடகங்கள் ஜெயலலிதாவை போலவே தமிழக வெற்றிக்கழகத்தையும் அணுகும் என தெரிகிறது.
இந்த ஊடக பிம்பத்தில் சிக்கிய இலங்கை இளையவர்களே, திமுக ஊழல் செய்கிறது என்றார்கள். என்ன ஊழல் என்றால் அவர்களிடம் பதிலில்லை.
சட்டமன்ற தேர்தல் வாக்களிப்பு முடிந்ததும் விஜய் மத வழிபாட்டு தலங்களுக்கு சென்றார். திமுக அதை செய்வதில்லை. சனாதன தர்மத்திற்கு எதிராக துணிந்து செயற்பட்ட கட்சி. மதவாத அதிகாரிகள், நீதிபதியின் உதவியுடன் திருவண்ணாமலை கார்த்திகை தீப தூண் விவகாரத்தை கிளற முயன்ற போது, திமுக அரசு மிக நிதானமாகவும், உறுதியாகவும் செயற்பட்டு தமிழகத்தில் மதவாத மோதல் ஏற்படாமல் தடைபோட்டது. தமிழகத்தின் வேறெந்த பிரதான கட்சியும் அப்படி செயற்பட்டிராது.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியான பின்னர், பார்ப்பன பிரபலங்கள் சிலர் சனாதனம் திமுகவை வீழ்த்தி விட்டது என பகிரங்கமாக புளகாங்கிதப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுதான், பார்ப்பனிய சக்திகள் திமுகவை வீழ்த்த முயற்சிக்கும் பின்னணி.
மற்றொன்று- ஒரு உளவியல் காரணம்.
திமுக தலைவர் கருணாநிதி குடும்பம் இசை வேளாள குடும்பத்தை சேர்ந்தது. இந்த பின்னணியிலிருந்து உருவாகி வந்த குடும்பம ஆதிக்கம் செலுத்துவது சாதிய மனநிலை தோய்ந்தவர்களிற்கு உறுத்தலானது. இலங்கையிலும் நீண்டகால திமுக எதிர்ப்பின் பின்னணி இதுதான்.
கருணாநிதி திருட்டு இரயில் ஏறி சென்னை வந்தார் என ஒரு தவறான தகவலை இலங்கையிலும் பெரும்பாலானவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கவிஞர் கண்ணதாசன் தனது நூலில் தன்னைப்பற்றி குறிப்பிட்டதை பலர் கருணாநிதியாக தவறாக விளங்கிக் கொண்டுள்ளனர். கருணாநிதி குடும்பம் செல்வம் மிக்கது.
கருணாநிதி அரசியலில் பணம் சம்பாதித்தார் என பலர் நினைக்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரு முன்னரே திரைத்துறையில் நிறைய சம்பாதித்து விட்டார். அவர் அரசியலில் பணம் சம்பாதிக்கவில்லையென்பது இதன் அர்த்தமல்ல.
திமுக, அதிமுகவை போலவே ஊழல் முறையற்ற பணம் சேர்த்த குற்றச்சாட்டிற்கு உள்ளானதுதான் மார்ட்டின் குடும்பம். அந்த குடும்பத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா மீட்பராகவும், தூயவராகவும் காட்டிக்கொள்வதும், அதை மாற்றமென ஒரு கூட்டம் நம்புவதையும் காலக்கொடுமை என்பதை விட வேறென்ன என்பது.
திமுக மீது ஈழத்தமிழர்கள் பலர் கோபம் கொள்ள முக்கிய காரணம்- 2009 இறுதி யுத்தத்தை நிறுத்த கருணாநிதி போதியளவில் செயற்படவில்லையென்பதே. அத்துடன் கருணாநிதி யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்ததையும் அவர்கள் எள்ளலாக பேசுவதுண்டு.
என்றாலும், 2009 யுத்தத்தை நிறுத்த கருணாநிதி போதியளவில் முயற்சிக்கவில்லையென ஈழத்தமிழர்கள் கோபம் கொள்வதில் அர்த்தம் இல்லை.
ஈழத்தமிழர்களின் பொதுவான பலவீனமொன்று- எதையும் வெளியாரிடம் எதிர்பார்ப்பது.
விடுதலைப் புலிகளின் தோல்விக்கு ஆகப் பிரதான காரணம்- போதியளவு ஆட்கள் இல்லாதது. இதை சரி செய்யவே, யுத்தத்தின் இறுதியில் கட்டாய ஆட்சேர்ப்பிலும் ஈடுபட்டார்கள். யுத்தத்தை நிறுத்த திமுக செயற்படவில்லையென கோபம் கொள்ளும் ஈழத்தமிழர்கள், யுத்தத்தில் வெற்றிபெற விரும்பியிருந்தால், தாமும் புலிகளுடன் இணைந்து போராடியிருக்கவல்லவா வேண்டும்.
அதை செய்யாமல், பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொண்டு- யாரோ போராடி தனிநாடு பெற்றுத்தர வேண்டுமென விரும்பிய ஈழத்தமிழர்கள், கருணாநிதியும் அதை பெற்றுத்தரவில்லையென கோபிப்பது முறையல்ல.
ஈழத்தமிழர்களுக்காக கருணாநிதி ஒருமுறை ஆட்சியையே இழந்திருக்கிறார். அது போதுமென அண்டை நாட்டுக்காரரான அவர் கருதியிருக்கலாம். ஆனால் தனிநாடு கேட்டு போராடிய நமது இனத்தில், இறுதி யுத்தத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்ந்த மக்களை விட எத்தனையோ மடங்கு அதிகமான மக்கள் வெளிநாடுகளில் இருந்தனர். எத்தனையோ மடங்கு மக்கள் வன்னிக்கு வெளியில் இருந்தனர். இறுதி யுத்தம் குறித்து இவர்களில் யாருக்கேனும் கோபம் ஏற்படுமெனில், முதலில் அவர்கள் தம்மைத்தாமே கோபித்துக்கொள்ள அல்லவா வேண்டும்!
கருணாநிதி போரை நிறுத்த முயற்சிக்கவில்லை, மறுபுறம் காங்கிரஸ் போரை நிகழ்த்தியது என ஈழத்தமிழர்கள் கோபித்தார்கள். நீண்டகாலமாக இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்ததால், அவர்களின் கோபம் தர்க்கச் சிக்கலுக்குள் மாட்டாமல் தப்பித்தது. இப்போது தேர்தலில் தவெக வென்று, ஆட்சியமைக்க காங்கிரசின் உதவியையும் நாடியுள்ளது. விஜய் தரப்பு தம்மிடம் ஆதரவு கோரியுள்ளதாக காங்கிரஸ் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளது. அண்ணன் எப்படியும் ஆட்சிபீடமேறி விடுவார் என அவரது ஈழ ஆதரவாளர்கள் ஃபயர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு ஈழ யுத்தம், அதை நிகழ்த்திய காங்கிரஸ் போன்ற சுலோகங்கள் எதுவும் நினைவில்லை.
ஒருவேளை, மிக ஆரம்பத்திலேயே அஜித் போன்ற ஒரு பிரபல நடிகர் திமுகவில் இணைந்திருந்தால், யுத்தத்தை நிறுத்த திமுக ஒன்றும் செய்யவில்லையென்ற கோசத்தை நமது ஈழத்தமிழர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
திமுக யுத்தத்தை நிறுத்த ஒன்றும் செய்யவில்லையென்பதால் அதை எதிர்க்கும் இலங்கை விஜய் ரசிகர்கள், யுத்தத்தை செய்த காங்கிரஸ், விஜய் கூட்டணியில் இணைந்த போது அமுசடக்கமாக இருப்பதே- அவர்கள் விஜயை ஆதரிப்பது கொள்கை நிலைப்பாட்டில் அல்ல, திரைப்பட ரசிக மனோபாவத்தினாலேயே என்பது புலப்படுகிறது.



