தமிழக மீனவர்களால் இலங்கை மீனவர் ஒருவர் சிறைப்பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்ட காணொளிகள் சக ஊடகங்களில் பரவி வருகிறது. அப்பாவி இலங்கை மீனவரை, இந்திய மீனவர்கள் தாக்குகிறார்கள், தொப்புள் கொடி உறவென்பது இதுதானா என சமூகஊடக வாசிகள் பலரும் கொதித்தெழுந்துள்ளனர்.
இலங்கை- இந்திய மீனவர்களிற்கிடையில் மீன்பிடி எல்லை தொடர்பாக தீர்க்க முடியாத வாழ்வாதார சிக்கல் தீவிரமாக நிலவி வரும் சூழலில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போல அமைந்த இந்த சம்பவத்தின் உண்மையான பின்னணி என்னவென தமிழ்பக்கம் ஆராய்ந்தது.
இது தொடர்பில், இலங்கை, இந்திய பகுதிகளை சேர்ந்த மீனவர் அமைப்புக்களுடனும், வேதாரணியம் பொலிஸ் நிலையத்துடனும் தமிழ்பக்கம் தொடர்பு கொண்டபோது கிடைத்த தகவல்களில் தொகுப்பு இது.
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பாவித்து, மீன்பிடித்து, கடல் வளத்தை அழிப்பதே அனைத்து பிரச்சினைகளின் மூல காரணமாக அமைந்துள்ளது. கடல்வளத்தை பாதுகாக்கும் விதமான மீன்பிடி முறைகளை இலங்கை மீனவர்கள் மேற்கொண்டுள்ள நிலையில், ஆழ்கடல் இழுவை மீன்பிடி முறையை இந்திய மீனவர்கள் மேற்கொள்கிறார்கள்.
போரினால் பாதிக்கப்பட்டு, சிறியளவிலான மீனவர்களையே மிகப்பெரும்பான்மையாக கொண்ட இலங்கை தமிழ் மீனவர்களிற்கு, பலநாள் மீன்பிடிகலன்களுடன் வரும் இந்திய மீனவர்கள் மிகப்பெரும் வாழ்வாதார சவாலாக அமைந்துள்ளனர். இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து, இலங்கை மீனவர்களின் வலைகளையும் அறுத்து செல்வது அன்றாட வழக்கமாகி விட்டது.
இந்த பின்னணியில், அண்மைக்காலமாக கடற்கொள்ளையர்கள் குறித்த குற்றச்சாட்டு, இந்திய மீனவர்களால் முன்வைக்கப்பட்டு வந்தது. இலங்கையிலிருந்து வரும் கடற்கொள்ளையர்களால் இந்திய மீனவர்களின் மீன்பிடி தொழில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதாக கூறப்பட்டு வந்தது.
ஆனால் இது குறித்த ஆதாரங்கள் இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.
கடற்கொள்ளையர்கள் பற்றி இலங்கையிலுள்ள மீன்பிடி அமைப்புக்கள் சந்தேகம் தெரிவித்தன. அப்படி அமைப்புரீதியான செயற்பாடு வலுவடைந்துள்ளதாக தாம் அறியவில்லையென்றும், கடலில் எப்படி கொள்ளையில் ஈடுபடுகிறார்கள் என தம்மால் ஊகிக்க முடியவில்லையென்றும் கூறினார்கள்.
ஆனால், சமூகத்தில் திருடர்கள் இருப்பதை போல, இரண்டு தரப்பிலும் யாரும் திருடர்கள் இருக்கிறார்களா என்பதை சொல்ல முடியவில்லையென்றார்கள்.
இந்த சூழலில், அண்மையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில், தடை செய்யப்பட்ட இந்திய மீன்பிடி வலைகளை பாவித்த மீனவர்கள் சிலரிடமிருந்து வலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை, கடற்கொள்ளையுடன் தொடர்புபடுத்துகிறார்கள் இந்திய மீனவர்கள்.
இதை தெளிவுபடுத்தி, அந்த வலைகளின் பின்னணியை அறிய வேண்டியது இலங்கை பொலிசாரின் கடமை.
மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி
இந்த சமயத்தில்தான் இலங்கை தமிழ் மீனவர் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
தாக்கப்பட்ட மீனவர் யாழ்ப்பாணம், வளலாய், அன்ரனிபுரத்தை சேர்ந்தவர் என வேதாரணியம் பொலிசார் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர். 29 வயதான தயா என அழைக்கப்படும் தயானஸ் என அவரது பெயரை குறிப்பிட்டனர்.
இந்திய மீனவர்களால் கடுமையாக தாக்கப்பட்ட அவரது தலை, மூக்கு, கை, கணுக்காலில் ஏற்பட்ட காயங்களிற்காக 15 தையல் இடப்பட்டுள்ளது. கடுமையான உள்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஸ்கான் பரிசோதனையில் ஆபத்தான உள்காயங்கள் இல்லையென உறுதிசெய்யப்பட்டதாக வேதாரண்யம் பொலிசார் தெரிவித்தனர்.
காயமடைந்த மீனவர் தற்போது நாகப்பட்டினம் அரச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாகப்பட்டினம், ஆர்க்காட்டு துறையில் கரையிலிருந்து 8 நொட்டிக்கல் மைல் தொலைவில் இலங்கை மீனவர் பிடிக்கப்பட்டதாக, பொலிசார் தெரிவித்தனர்.
வேதாரண்யம் பொலிசாரின் தகவல்படி, நேற்று முன்தினம் (26) இரவு 9 மணியளவில் 5 நாகப்பட்டினம் மீனவர்கள் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். 2 மீனவர்கள் படகின் மேல்பகுதியில் நின்றிருந்த போது, 3 மீனவர்கள் படகின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தனர்.
படகில் 2 மீனவர்கள் மாத்திரம் இருப்பதாக நினைத்த இலங்கை படகொன்று அவர்களை நெருங்கி, 2 பேர் இந்திய மீனவர் படகில் ஏறியுள்ளனர். அவர்கள் கைகளில் கத்தி வைத்துள்ளனர். படகிலுள்ள உணவுப்பொருட்களை எடுக்கும்படி மிரட்டிய பின்னர், ஒருவர் (இந்திய மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டவர்) படகின் இயந்திரத்தை கழற்ற முற்பட்டார். மற்றையவர், உணவுப்பொருட்களை எடுக்கும்படி மிரட்டிக் கொண்டிருந்தார்.
இந்த சமயத்தில், படகின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த 3 பேர், சத்தம் கேட்டு விழித்தெழுந்துள்ளனர். 5 மீனவர்களும் சேர்ந்து, கட்டைகளால் தாக்கியுள்ளனர். கத்தியுடன் நின்ற ஒருவரின் முழங்காலில் கட்டையால் தாக்கியதாகவும், அவர் நடக்க முடியாமல் சிரமப்பட்டு, ஒருவாறு கடலில் குதித்து தப்பித்து தமது படகில் ஏறிக்கொண்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இயந்திரத்தை கழற்ற முற்பட்டவர் தப்பிக்க முடியாமல், இந்திய மீனவர்களிடம் சிக்கியதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அவரை கட்டி வைத்து இந்திய மீனவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
நேற்று (27) காலை 7.30 மணியளவில் மீனவர்களால் அவர் கரைக்கு அழைத்து வரப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.



