சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் நூல்கள்: குரல் கொடுக்கவும் விளம்பரம் தேவையா?

Date:

எழுத்தாளர் தீபச்செல்வனிற்கு இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட சில புத்தகங்கள் இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடக பதிவுகளில் பார்க்க முடிந்தது. தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிராக தீபச்செல்வன் ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து, புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை கூட்டிக் கொண்டிருக்கிறார்.

சமூக ஊடகவாசிகளும், ஏதோ தீபச்செல்வனை இலக்கு வைத்து இலங்கை அரசு செயற்பட்டு வருவதை போல பேசி வருவதை அவதானிக்க முடிந்தது.

இதிலுள்ள முக்கிய விவகாரம் என்னவெனில், இலங்கை சுங்கத்தினால் புத்தகங்கள் தடுத்து வைக்கப்படுவது சாதாரண நிகழ்வாகி விட்டது. தீபச்செல்வனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டது, அண்மைக்காலத்தில் எத்தனையாவது நிகழ்வு என தெரியவில்லை. கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திசாநாயக்க ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான அரை டசினுக்கும் அதிகமான சம்பவங்கள் அறியப்பட்டுள்ளன. அறியாமல் இன்னும் இருக்கின்றனவா தெரியவில்லை.

ஈழப்போர்க்களத்தையும், அதன் வாழ்வையும் அச்சு அசலாக பதிவு செய்யும் வடலி பதிப்பகத்தின் பல நூல்கள் எத்தனையோ மாதங்களாக இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

அப்போது வடலி பதிப்பகம் இது குறித்து பேசியிருந்தது. ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. வேறு சிலரும் சில சந்தர்ப்பங்களில் தமது நூல்கள் தடுத்து வைக்கப்பட்டது பற்றி பேசியிருந்தார்கள். யாரும் கண்டுகொள்ளவில்லை.

முன்னைய சம்பவங்களின் போதெல்லாம் இந்த சமூகம் அமைதியாக இருந்தது. தீபச்செல்வனும் பேசவில்லை. எதையும் அதீத விளம்பரப்படுத்தினால்தான் தமிழ் சமூகம் கண்டுகொள்ளுமா அல்லது குரல் கொடுப்பதிலும் தெரிவை கடைப்பிடிக்கிறதா தெரியவில்லை.

ஒருமுறை, வடக்கிலுள்ள ஒரு புத்தகக்கடைக்காரர் இந்தியாவில் பதிப்பிக்கப்பட்ட ஈழ நூல்களை ஓடர் செய்துள்ளார். புத்தகங்களை விற்றபின்னர் காசு தருவதாக இந்தியாவிலுள்ள பதிப்பு துறை சார்ந்த இலங்கையர் ஒருவருக்கு கூறி, நூல்களை வாங்கியிருந்தார். ஆனால் நூல்கள் யாழ்ப்பாணம் பிரதம தபாலகம் வரை வந்து, அங்கு சுங்கப்பிரிவினால் தடுக்கப்பட்டு விட்டது. அது குறித்த அறிவித்தல் புத்தகக்கடைக்காரருக்கு சென்றது. அவர் பிரதம தபாலக பக்கமே போகவில்லை. தன்னை பிடித்து உள்ளே போட்டு விடுவார்களோ என அஞ்சுவதாக கூறினார்.

தமிழ் சூழலில்- எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும், தற்கொலை குண்டுதாரியாகவும் பாய தயாராக இருப்பவன் போல பாவனை காண்பிப்பவன்தான், தீவிர தேசியவாதியாக கருதப்பட்டு, இரக்கத்திற்குரியவனாகிறான். தீபச்செல்வன் விவகாரமும் இப்படித்தான்.

எழுத்தில் மட்டுமல்ல அதை சூழவுள்ள பரப்புக்களிலும், தனது பிம்பத்தை பெருப்பிப்பதிலும் தீபச்செல்வன் கெட்டிக்காரர். அவரை ஒரு சீருடை அணியாத புலி உறுப்பினராகத்தான் தமிழ் தேசியவாதிகள் எனப்படுபவர்கள் நம்புகிறார்கள். ஆனால், அவர் டக்ளஸ் தேவானந்தாவிற்காகவும் தேர்தல் பிரச்சாரம் செய்தவர். யுத்தம் தீவிரமாக நடந்த சமயத்தில், தனது தங்கையை புலிகள் பலவந்தமாக ஆட்சேர்ப்பு செய்துவிட்டார்கள் என தி்ட்டி கவிதையும் எழுதியிருந்தார். அவரது வலைத்தளத்தில் அது இருந்தது. புலி வேடம் கட்டினால் வசூல் நிச்சயம் என்பதை புரிந்ததும், அந்த கவிதையை வலைத்தளத்திலிருந்து நீக்கி விட்டார். தனது அரச சேவையில் சொந்த மாவட்டத்தில் பணியாற்றாமல் யாழ்ப்பாணத்தில் பணியாற்ற அரச அதிகாரத்தின் எல்லா எல்லைக்கும் சென்று முயன்றவர் என அண்மையில் யாரோ சமூக ஊடகங்களில் விமர்சித்திருந்தனர்.

ஆனால் அவர் போட்ட புலி வேடத்தால், ஒரு பொதுப்பிரச்சினையில்- அவருக்கு மட்டும் தனித்து குரல் எழுப்பப்படுகிறது.

தீபச்செல்வனின் புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டது, அவருக்கு மட்டும் நிகழ்ந்ததல்ல. ஒரு வழக்கமான நிகழ்வு. அதற்கு தீர்வு காண வேண்டும். தீபச்செல்வன் விவகாரம் விளம்பரப்படுத்தப்பட்டு, சூழலின் ஆழம் தெரியாமல், அவசர அறிக்கைகள் விடும் செயற்பாட்டாளர்கள் என கூறிக்கொள்பவர்கள், எழுத்தாளர்கள், அமைப்புக்கள் இந்த விவகாரத்தின் ஆழத்தை புரிந்து, ஒரு முழுமையான தீர்வுக்கு முயற்சிப்பதே நிரந்தர தீர்வாக அமையும்.

தங்கையை புலிகள் பிடித்து விட்டார்கள் என திட்டி எழுதிவிட்டு, ஒரே இரவில் அந்தர் பல்டி அடித்து, புலிகள் யாரையும் பலவந்தமாக பிடிக்கவில்லையென எழுதி, சயனைட் குப்பியுடன் புத்தகம் வெளியிடுவதை எந்த வகைக்குள் அடக்குவது? எழுத்து சுதந்திரம் என்பதன் வரையறை என்ன? ஒருவர் வசதிகளையும், புகழையும் பெறுவதற்கான குறுக்கு வழிகளில் ஒன்றா எழுத்து? வெளிநாட்டில் உள்ளவர்களை திருப்திப்படுத்த எழுதும் எழுத்துக்களை அனுமதிப்பதில் அரசுக்கு சிக்கல்கள் இருக்கலாம் என எழுத்தாளர்களில் ஒரு பகுதியினர் சமூக ஊடகங்களில் பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது.

அரசவையில் பாடி பரிசு பெற்றதுதானே தமிழ் புலவர்களின் ஆதி வரலாறு. அப்படி பாடப்பட்ட எல்லாப் பாட்டும் வரலாற்றில் நிலைக்கவில்லை. பரிசுக்காக பாடப்பட்டவை வரலாற்றில் நீடிக்கவில்லை. அதனால், எழுத்தின் மீதான முன் முடிவுகளையும், தீர்மானங்களையும் எடுக்கும் அதிகாரத்தை அரச நிர்வாகங்களின் கைகளில் வழங்குவதை முழுமையாக எதிர்க்க வேண்டியது ஒவ்வொருவரின் தார்மீக பொறுப்பு.

சில எழுத்துக்கள் சமூகப்பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என அரசு கருதி இப்படியொரு நடவடிக்கையை மேற்கொள்வதாக கருத முடிகிறது. எல்லா நாடுகளிலும் இப்படியான நடைமுறைகள் உள்ளன. ஆனால், இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தமிழ் நூல்களை படிக்க, புரியவல்ல ஒரு அமைப்பு இல்லை. அது உருவாக்கப்பட வேண்டும். அது கலையின் நுண் உணர்வுகளை புரிந்துகொள்ளும் அமைப்பாக இருக்க வேண்டும். முதற்கட்டமாக, தமிழ், சிங்கள எழுத்தாளர்களை கொண்ட ஒரு அமைப்பையேனும் இந்த செயற்பாட்டுக்காக உருவாக்கலாம்.

கருத்து, எழுத்து சுதந்திரத்திற்கு கடிவாளமிட முடியாது. அவை ஜனநாயகத்தை செழுமைப்படுத்துபவை. ஆனால், இலங்கை போன்ற ஒரு நாட்டில், கட்டற்ற கருத்து சுதந்திரத்தை எதிர்பார்த்து, எந்த தணிக்கையுமில்லாமல் புத்தகங்களை அனுமதிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது யதார்த்ததற்கு புறம்பாக இருக்கலாம். அந்த சூழல் கனவாக- எதிர்காலமாக இருக்கலாம். அதை நோக்கிய முயற்சியாக- முதற்கட்டமாக, தமிழ், சிங்கள எழுத்தாளர்களை கொண்ட ஒரு அமைப்பையேனும் இந்த செயற்பாட்டுக்காக உருவாக்கலாம்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹிரு தொலைக்காட்சிக்கு எதிராக அமைச்சர் லால் காந்த முறைப்பாடு

அமைச்சர் கே.டி. லால் காந்த, தனது சொத்துக்கள் குறித்த அறிவிப்பு தொடர்பாக...

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவை பதவிவிலக உத்தரவிட்ட ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கை கிரிக்கெட்டின் நீண்டகால தலைவர் ஷம்மி...

யாழ் விபத்தில் தந்தை, மகன் பலி

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்