அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களின் தொடர்ச்சியான அலைகளால் ஈரானின் இரண்டு மிகப்பெரிய எஃகு ஆலைகள் செயலிழந்துள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
“இந்த ஆலைகளை மீண்டும் இயக்குவதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும் என்பது எங்கள் ஆரம்பகட்ட மதிப்பீடு,” என்று குசெஸ்தான் எஃகு நிறுவனத்தின் செயல்பாட்டுத் துணைத் தலைவர் மெஹ்ரான் பக்பின் கூறியதாக, வியாழக்கிழமை மிசான் இணையதளம் மேற்கோள் காட்டியுள்ளது.
“அதிக அளவிலான தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய இஸ்ஃபஹான் மாகாணத்தில் உள்ள மொபாரகே எஃகு நிறுவனம் தனது உற்பத்திப் பிரிவுகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டதாக”க் கூறியுள்ளது.
கடந்த வாரம் முதல் இரு ஆலைகளும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன.
“இந்தத் தொழிற்துறை வளாகத்தின் அனைத்து பாகங்களும் எஃகு உலைகளும் சேதமடைந்துள்ளன,” என்று பக்பின் கூறியதாக மிசான் மேற்கோள் காட்டியுள்ளது.
தாக்குதல்களுக்குப் பிறகு, “செயல்பாடுகளைத் தொடர்வது சாத்தியமில்லை” என்று மொபாரகே எஃகு நிறுவனம் புதன்கிழமை பிற்பகுதியில் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
எஃகு ஆலைகள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அப்பகுதி மற்றும் இஸ்ரேல் முழுவதும் உள்ள தொழிற்சாலைப் பகுதிகள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடந்தால், மேலும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் IRGC எச்சரித்துள்ளது.
எஃகு என்பது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் கப்பல்கள் உள்ளிட்ட தொழில்துறை மற்றும் இராணுவ உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகும்.



