புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் இன்று (15) யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்று நடந்தது.
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், பிரதான தமிழ் தேசிய கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
யாழ்ப்பாணம், நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் காலை 10 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடந்தது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தமிழர் தரப்பின் மீது செல்வாக்கு செலுத்த சுவிற்சர்லாந்தை சேர்ந்த தன்னார்வ நிறுவனமொன்று பணம் செலுத்தி முயற்சிகள் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அந்த தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து செயற்படும் யாழ்ப்பாண சிவில் சமூகத்தவர் என விளிக்கப்படுபவர்களின் பிரதான பங்கேற்போடு இந்த கலந்துரையாடல் நடந்தது.
தமிழ் தேசிய பேரவை இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதாக குறிப்பிட்டு, அழைப்புக்கள் அனுப்பியிருந்த போதும், இதன் பின்னணியில் யாழ்ப்பாணத்திலுள்ள சிவில் சமூகத்தவர் என கூறிக்கொள்ளும் சிலரின் ஏற்பாடும் பின்னணியிலிருந்ததாக நம்பப்படுகிறது.
இன்றைய சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஐங்கரநேசன் அணி, சிறிகாந்தா அணி ஆகிய அரசியல் தரப்புக்களும், இந்து, கிறிஸ்தவ மதகுருக்கள் சிலரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களும், அதன் பிரசாரகர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், ஏக்கியராஜ்ய அரசியலமைப்பு வரைவை முழுமையாக நிராகரித்தல், தமிழ்த்தேசம் என்ற அரசியல் அடையாளத்தை அங்கீகரித்தல், ஈழத்தமிழர்களின் இறைமை உரிமை மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவற்றை அரசியல் தீர்வின் அடிப்படையாக வலியுறுத்தல், திம்புகோட்பாட்டை மீண்டும் அரசியல் உரையாடலின் மையமாக கொண்டு வருதல், இத்தீர்மானங்களை மக்கள் மயப்படுத்தும் வகையில் மாவட்ட மட்ட, கிராம மட்ட செயல்பாடுகளை முன்னெடுத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



