டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்ததாக தகவல்

Date:

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில், அங்கு உச்சகட்ட பாதுகாப்பு காரணமாக பதற்றம் நீடிக்கிறது.

டெல்லியில் பாதுகாப்பு பலமாக உள்ள பகுதிகளில் ஒன்று செங்கோட்டை. இந்தப் பகுதிக்கு உள்ளூர் மக்கள், சுற்றுலா வாசிகள் உட்பட பலர் வந்து செல்வது வழக்கம். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி இது. இந்தச் சூழலில் இன்று (நவ.10) மாலை 6.30 மணி அளவில் அந்த மெட்ரோ ரயில் நிலையத்தின் ‘கேட் 1’ நுழைவாயில் பகுதியில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. அப்போது வெடிச் சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்தப் பகுதியில் அங்காடிகளும் அதிகம் நிறைந்துள்ளன.

இந்தச் சம்பவத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறைக்கு இது குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் அந்தப் பகுதியில் தீயை அணைத்தனர். காவல் துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அருகில் இருந்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் சாலையில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வரை தீப்பிடித்து எரிந்தன. இதில் 8 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த பலர் அருகில் உள்ள எல்என்ஜேபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இது குறித்த முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன? – ‘நடந்த சம்பவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒருவரின் கை துண்டாகி சாலையில் இருந்தது. என்னால் இதற்கு மேல் பேச முடியவில்லை’, ‘இங்கு என்ன நடந்தது என்றே எங்களுக்கு புரியவில்லை. அங்கும் இங்குமாக மனித உடல்களின் பாகங்கள் சிதறி கிடந்தன. வாகனங்கள் தீப் பிடித்து இருந்தன’, ‘இந்த அளவுக்கு எனது வாழ்வில் நான் கேட்டது கிடையாது. அந்த சப்தம் அப்படி இருந்தது. மொத்தம் மூன்று முறை அதை நான் உணர்ந்தேன். நாங்கள் எல்லோரும் உயிரிழந்து விடுவோம் என நினைத்தோம்’, ‘எங்கள் வீடு அருகில் தான் உள்ளது. மாடியில் இருந்து பார்த்த போது சாலையில் தீப்பிடித்து எரிந்ததை பார்த்தேன்’ என சம்பவத்தை நேரில் கண்ட டெல்லிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் வேதனை – “இந்த துயரமான நேரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் ஆதரவாக இருக்கிறோம். காயமடைந்தவர்கள் விரைந்து குணம்பெற வேண்டுகிறோம். இந்தச் சம்பவம் குறித்து அரசு ஆழமாகவும், விரைந்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என காங்கிரஸ் கட்சியின் செய்திப் பிரிவு தலைவர் பவன் கெரா தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும், பல்வேறு மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி – செங்கோட்டையை ஒட்டியுள்ள பகுதி முழுவதும் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்