யாழ் மாவட்டத்தின் போக்குவரத்தை வலுப்படுத்தி மக்களுக்கு இலகுவானதும் நவீனத்துவத்தை உள்ளடக்கியதுமான போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமானங்கள் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட செயலர் ம.பிரதீபனின் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட்ட குறித்த விசேட கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களினதும் போக்குவரத்து துறையில் இருக்கின்ற சவால்கள் மற்றும் சீரமைப்புக்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
போக்குவரத்து துறையில், மக்கள் மத்தியிலிருக்கும் பிரச்சினைகள் மத்திக்கு கொண்டு செல்லப்படாது இருக்கின்றதென்ற நிலையை மாற்றி வடக்கின் மக்களும் நேரடியாக தமது தேவைகளையும் சேவையையும் நிவர்த்தி செய்து கொள்ளும் சந்தர்ப்பத்துக்காகவே இந்த கூட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக குறித்த போக்குவரத்து சேவையை மூன்று கட்டமைப்புக்கள் ஊடாக கட்டமைத்து தொடர்பை பேண நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த தொடர்பை இரண்டு செயலாளர்கள் மாவட்ட செயலரின் ஆலோசனையுடன் முன்னகர்த்துவார்கள்.
இதேநேரம் யாழ் மாவட்ட செயலர் எமக்கு மிக நெருங்கிய நண்பர். அவரூடாக அரசு மக்களுக்காக சேவைகளை செய்ய முழுமையாக முயற்சிக்கும். இதற்கு அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்குவதும் அவசியமாகும்.
இதேவேளை இவர்களை எல்லாம் ஒருங்கிணைக்க யாழ் மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற உறுபினர் இளங்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், பவானந்தராஜா ஆகியோரிடமும் இது தொடர்பான தரவுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
இதேனேரம் போக்குவரத்தில் குறிப்பாக பேருந்து சேவைகள், வீதி புனரமைப்பு, புகையிரதம், சிவில் விமான சேவைகள், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட விடையங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கூட்டத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமானங்கள் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், வடக்கின் ஆளுநர் வேதநாயகன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், கருணாகரன் இளங்குமரன், சண்முகனாதன் ஸ்ரீபவானந்தராஜா மற்றும் மேலதிக அரச அதிபர், யாழ் மாவட்டத்திலுள்ள மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், முப்படைகளின் அதிகாரிகள், மாவட்ட செயலக, பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் துறைசார் அதிகாரிகள் என பல்துறை சார் வல்லுனர்கள் கலந்துகொண்டு கலந்துரையாடினர்,




