கருணாகரன்
NPP அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, ஓராண்டாகி விட்டது. இந்த ஓராண்டிலும் என்ன மாற்றங்கள் நடந்திருக்கிறது என்பதை NPP மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சொல்வதே தவறு. அந்த மாற்றங்களை மக்கள் உணரும்படி செய்திருக்க வேண்டும். அப்படி உணரக் கூடிய மாற்றங்கள் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. உண்மையில் அப்படி மாற்றங்கள் நடந்திருந்தால் NPP அவை என்னென்ன மாற்றங்கள், முன்னேற்றங்கள் என்று மக்களுக்கு ஆதாரங்களோடு சொல்ல வேண்டும். அல்லது NPP ஐ ஆதரிப்போர் அதைத் தெரிவிக்க வேண்டும். இந்தக் கட்டுரையாளர் NPP க்கு எதிரான மனப்பாங்கோடு இதை எழுதவில்லை. அவர் NPP NPP ஐ சாதகமான நோக்கு நிலையிலிருந்தே விடயங்களை அணுகுகின்றார்; பார்க்கின்றார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நாட்டில் மாற்றங்களை உருவாக்க வேண்டும். மக்களுக்கான சிறப்பான ஆட்சி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று விரும்பியது JVP. அந்த இயக்கத்தின் முதன்மைத் தலைமைத்துவத்தோடு உருவாகியதே NPP. NPP யின் பிரகடனமும் முறைமை மாற்றம் (system change) என்றே இருந்தது; இருக்கிறது. இதனை அவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகளிலிருந்தே கற்றுக் கொண்டனர். அதாவது முந்திய ஆட்சியாளர்களின் சிந்தனைத் தவறு, செயற்பாட்டுத் தவறு (ஆட்சித் தவறு) போன்றவற்றிலிருந்தே முறைமை மாற்றம் பற்றிச் சிந்தித்தனர்.
ஆகவே, NPP யின் ஆட்சி என்பது முறைமை மாற்றத்தை (system change) அடிப்படையாகவும் பொதுப்பண்பாகவும் கொண்டது. அப்படியாயின் தான் விரும்பிய – முன்னிறுத்திய அந்த முறைமை மாற்றத்தை (system change) NPP ஆரம்பித்து விட்டதா என்றால், அது எப்படி, என்ன விதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது? எந்தெந்த விடயங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது? அந்த மாற்றங்கள் எவ்வாறு அமைந்துள்ளன? மக்களுக்கு அதனால் உருவாகியிருக்கும் இதுவரையான நன்மைகள் என்ன? முறைமை மாற்றத்தின் முதலாவது கட்டம் எது? அடுத்த கட்டங்கள் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன.
இதுவரையான அவதானிப்பில் NPP யின் பிரகடனங்களுக்கும் ஆட்சி முறைக்கும் இடையில் பெரிய இடைவெளியே உண்டு. அதேவேளை முந்திய ஆட்சியாளர்களுக்கும் NPP யின் ஆட்சிக்கும் இடையில் பெரிய இடைவெளியைக் காணவில்லை. காரணம், தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் சொல்வதைப்போல “பழைய ஆட்சியாளர்களுக்கு சேவை செய்த அரசு இயந்திரத்தை உள்ளவாறே வைத்துக்கொண்டு முறைமை மாற்றம் என்று பேசுவது பகற்கனவு”தான்.
NPP யின் பலவீனம் அல்லது தோல்வி இங்கேதான் உள்ளது. அது முந்திய ஆட்சியாளர்களுக்கு நிகரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. அதாவது மாற்றங்களுக்கு எதிரான நிலைப்பாடு அல்லது மாற்றங்களைச் செய்வதற்கு அச்சமடையும் தன்மை. முந்திய ஆட்சியாளர்களும் பிரச்சினைகள் உள்ளன என்பதை ஏற்றுக் கொண்டனர். அது இனப்பிரச்சினையாக இருக்கலாம். பொருளாதாரப் பிரச்சினையாக இருக்கலாம். கல்வி மற்றும் சூழல்சார் பிரச்சினைகளாக இருக்கலாம். எல்லாவற்றையும் வெளிப்படையாகவே ஏற்றுக் கொண்டனர். அதற்கான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சொன்னார்கள். ஏன் அரசியலமைப்பு மாற்றத்தைப் பற்றி – திருத்தத்தைப் பற்றிக் கூடப் பேசினார்கள். ஏதோ அதற்காக நடவடிக்கை எடுப்பதாகக் கூடக் காட்டிக் கொண்டனர்.
ஆனால், எதுவுமே நடக்கவில்லை. ஏனென்றால், அவற்றைச் செய்வதற்கான துணிச்சலும் உளநிலையும் அவர்களிடத்திலே இருக்கவில்லை. மாற்றங்களைச் செய்தால், தீர்வை முன்வைத்தால் தாம் தோற்கடிக்கப்பட்டு விடுவோம் என்று அச்சமடைந்தனர். அதிகாரத்தைப் பகிர்ந்து பல்லினத்தன்மையை அங்கீகரிக்கும் உளவிரிவைப் பெறாதிருந்தனர். அந்த அச்சம் அவர்களுக்குத் தயக்கத்தை உண்டாக்கியது. அந்தக் குறுகிய மானப்பாங்கு, சிங்கள பௌத்தத்தையே முதன்மைப்படுத்தி யோசிக்க வைத்தது.
NPP யும் அந்தத் தடத்திலேயே மாறாமல் பயணிக்கிறது. என்பதால்தான் அது தானே பெருமையோடு அறிவித்த – மக்களுக்கு வாக்குறுதியளித்த – பகிரங்கமாகப் பிரகடனப்படுத்திய முறைமை மாற்றத்தை (System change) செய்வதற்கு தயங்குகிறது. என்பதால்தான் அது மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குக் கூடப் பின்னடிக்கிறது, யோசிக்கிறது.
இலகுவில் செய்யக் கூடிய பல விடயங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் முக்கியமானவை. அவற்றைக் கூடச் செய்ய முடியாத நிலையில்தான் NPP உள்ளது – இயலாமையில் தவிக்கிறது. குறிப்பாக போக்குவரத்துக் கண்காணிப்பில் இருக்கும் பொலிஸாரின் பகிரங்க ஊழலையே (வழிப்பறியை) அரசு என்னும் கட்டுப்படுத்தவில்லை. ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டு வந்தாலே போதும். பொலிஸாரின் ஊழலுக்கு (வழிப்பறிப்புக்கு) முடிவைக் காணலாம். இயற்கை வளச் சுரண்டலையும் அழிப்பையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். மீன்பிடியையும் விவசாயத்தையும் பனை, தென்னை வளத்தொழில்களையும் மேம்படுத்தலாம். உப்பளங்களை சிறப்பான முறையில் இயக்கலாம் இதையெல்லாம் செய்வதற்கு பெரிய பிரச்சினைகளோ பெருந்துணிவுகளோ பெரிய நிதிச்செலவீனங்களோ வேண்டுமென்றில்லை. அக்கறை இருந்தால்போதும். அந்த அக்கறை போதாது என்பதே பிரச்சினை.
இதையெல்லாம் மறைப்பதற்கு NPP வேறு விதமாக மக்களைத் திசை திருப்பப்பார்க்கிறது. குழந்தைகளுக்கு வேடிக்கை, வித்தை காட்டுவதைப்போல எளிமைப்படுத்தப்பட்ட அரசாங்கம், எளிமையான ஆட்சி என்ற ஒரு தோற்றப்பாடு காண்பிக்கப்படுகிறது. ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் வரையில் பெரிய பந்தாக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் சாதாரணமாகத் திரிகிறார்கள். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் அரச செலவு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது சிக்கனம் கடைப்பிடிக்கப்படுகிறது என்று காட்டப்படுகிறது. இது உண்மைதான். இது ஒரு சிறிய பண்பு மாற்றம்தான். ஆனால், இதனால் எந்தப் பெரிய வளர்ச்சியும் மாற்றமும் ஏற்பட்டு விடாது.
அடிப்படைகளை சரியான முறையில் உருவாக்கினால் – மாற்றியமைத்தால்தான் மாற்றங்களை உருவாக்க முடியும். அதற்கான சிந்தனையிலும் நடைமுறையிலும் புதுமைகளை, புத்தாக்கங்களை, வினைத்திறனை, மாற்றங்களை, பயன்களை உணர முடியவில்லை.
சிக்கனத்தினால் (செலவு குறைப்பினால்) சிறிய லாபத்தை ஈட்டலாமே தவிர, முன்னேற்றத்துக்குரிய வருவாயைப் பெற முடியாது. அதற்கு உற்பத்திசார்ந்த பொருளாதாரம் அல்லது சேவைப் பொருளாதாரம் போன்றவற்றை உருவாக்க வேண்டும். அதாவது வருவாயை ஈட்டக்கூடிய பொருளாதாரத் திட்டங்களை உருவாக்க வேண்டும். நாட்டில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்படியான சிந்தனை இன்னும் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை. குறிப்பாக நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்துவதைப்பற்றிக் கூட அரசாங்கம் சிந்திக்கவில்லை.
முந்திய ஆட்சியாளர்களில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்க, வினைத்திறன் மிக்க மனித வளத்தை அப்படியே வெளிநாடுகள் பயன்படுத்திக் கொள்வதற்கான கதவைத் திறந்து விட்டார். இலங்கையில் பிறந்து, இந்த நாட்டின் பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் மக்களின் வரிப்பணத்தில் படித்துப் பட்டம் பெற்று, இங்குள்ள நிறுவனங்களில் தொழிற்திறன், ஆளுமைத் திறன் பயிற்சியைப் பெற்றவர்களையெல்லாம் வெளிச் சக்திகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான ஒரு மொக்குத் திட்டத்தை (Stupid plan) ரணில் அறிமுகப்படுத்தினார்.
NPP இதை நிறுத்தியிருக்க வேண்டும். நிறுத்தியிருக்க வேண்டும் என்று இங்கே குறிப்பிடப்படுவதன் அர்த்தம், இந்த நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தை இல்லாமல் செய்யும் வழிமுறையை – நம்பிக்கையை உருவாக்கியிருக்க வேண்டும். இந்த மண்ணில், இந்த நாட்டில் நாம் இருக்கலாம். முன்னேற்றங்களைக் காணலாம். முன்னேற்றங்களை உருவாக்கலாம். அதற்கான ஆட்சி முறை இங்கே உண்டு என்று மக்கள் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அது செய்யப்பட்டுள்ளதா? என்பதை வாசகர்கள் சொல்ல வேண்டும்.
திறனாளர்கள் வெளியேறும்போது சாதாரண மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது. ஒரு சிறிய உதாரணத்துக்குச் சொல்வதென்றால், இந்தக் கட்டுரையாளர் வாழ்கின்ற கிளிநொச்சி மாவட்டத்தில், மின்சார சபைக்கான பொறியாளர் இல்லை. மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை நிபுணர் கிடையாது. அங்குள்ள கண் சிகிச்சைக்குரிய சாதனங்கள் கறள் பிடித்துப் பழுதடைகின்றன. கிளிநொச்சியில் மட்டுல்ல, வடக்கில் உள்ள பல மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவர்களில்லை. தாதியர்கள் இல்லை. முக்கியமாக 55 பிரதேச மருத்துவமனைகளில் 33 க்கு தாதிய உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் அப்படியே உள்ளன. ஆளணி நிரப்படவேயில்லை. சாவகச்சேரி, கிளிநொச்சி, மந்திகை, வவுனியா ஆகிய இடங்களில் நெதர்லாண்ட் நாட்டின் உதவியோடு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரிவுகளுக்குரிய ஆளணிப் பட்டியல் ஏற்றுக் கொள்ளப்படவேயில்லை. ஆளணிப்பட்டியல் அங்கீகரிக்கப்பட்டால்தான், ஆளணி நிரப்பப்படும். இதைப்பற்றி வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியுடன் கூடப் பேசிக் களைத்து விட்டார். நிலைமை பூஜ்ஜியம்.
இப்படி ஒவ்வொரு திணைக்களத்திலும் மக்களுக்கான சேவைப் பிரிவுகளிலும் பல பிரச்சினைகள், போதாமைகள், பாரபட்சப்படுத்தல்கள். சிங்களப் பகுதிகளுக்கு ஒன்றாகவும் தமிழ்ப்பகுதிகளுக்கு வேறொன்றாகவும்தான் நிர்வாக பரிபாலனம் நடக்கிறது.
தொகுத்துச் சொன்னால், நாட்டின் முக்கிய பிரச்சினைகளான பொருளாதார நெருக்கடி, இனப் பிரச்சினை அல்லது சிறுபான்மைத் தேசிய இனங்களின் விவகாரம் உட்பட சிறிய – பெரிய விடயங்கள் எதற்கும் தீர்வைக் குறித்த நடவடிக்கைகளைக் காணவில்லை. அதைப் பற்றிய பேச்சே இல்லை.
பதிலாக அரசியலமைப்பொன்றை உருவாக்குவதைப்பற்றி அல்லது அரசியலமைப்பைத் திருத்தம் செய்வதைப் பற்றி அவ்வப்போது ஆளாளுக்குச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதவும் ஆரம்பிக்கப்படவேயில்லை. அப்படித்தான் மாகாணசபைத் தேர்தலைக் குறித்த அறிவிப்புகளும் அவ்வப்போது விடுக்கப்படுகின்றன. அமைச்சர்களின் அறிவிப்புக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பெரிய இடவெளி உண்டு. இதை யாரிடம் கேட்பது?
அரசியலமைப்பு மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறார்களே, அந்த எப்போது நடைமுறைக்கு வரும்? அதற்கான ஏற்பாடுகள் எப்போது தொடங்கப்படும்? அதில் யாரெல்லாம் இணைக்கப்படுவர்? அதனுடைய உள்ளடக்கம் எப்படியாக இருக்கும்? அது இலங்கையின் பன்மைத்துவத்தை உறுதிப்படுத்துமா? ஜனநாயக அடிப்படைகளைப் பேணுமா? ஏற்கனவே உள்ள ஆட்சியாளர்கள் பௌத்தத்துக்கும் சிங்களத்துக்கும் முன்னுரிமை அளித்துச் செயற்பட்ட பாரம்பரியத்தை விட்டு விலகி, JVP அல்லது NPP யின் கோட்பாட்டின் அடிப்படையில் அனைவரையும் சமமாகக் கொள்ளுமா? என்பதைப் பற்றி ஒரு சொல்லை எவரும் சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாக மாற்றம் வரும். மாற்றம் செய்யப்படும் என்று சொல்கிறார்கள். இதை வடிவேலு பாணியில் சொல்வதென்றால், “வரும், ஆனால் வராது”. ரணில், மைத்திரி நல்லாட்சிக்காலப் பாணியில் சொல்வதென்றால், “நல்லாட்சி. ஆனால், கெட்ட நடவடிக்கைகள்”. அவ்வளவுதான்.
அரசியலமைப்புத் திருத்தத்தைப் பற்றிய கதையைப் போலவே பொருளாதார மீட்சியைப் பற்றி அரசாங்கம் (ஆட்சித் தரப்பு) சொல்லிக் கொண்டேயிருக்கிறதே (கதை விட்டுக் கொண்டிருக்கிறதே) தவிர, அதை எப்படி மாற்றுவது? NPP யின் பொருளாதாரக் கொள்கை என்ன? அதை எப்படி நடைமுறைப்படுத்துவது? அதனுடைய புத்தாக்கத் திட்டங்கள் எவை என எதையும் அறிய முடியவில்லை. NPP யின் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றின் விஞ்ஞாபனங்களைத் திரும்பத்திரும்பப் படித்துப் பார்த்தேன். நீங்களும் அவற்றை மீளப் படித்துப் பார்க்கலாம். அந்த எழுத்துகள் செயல்வடிவம் பெற்றால் NPP யின் மதிப்பு மேலுயரும். NPP யின் மதிப்பு மேலுயர்ந்தால் அதனுடைய ஆட்சிக்காலமும் ஆயுளும் நீடிக்கும். துரதிருஸ்டவசமாக அதற்கான வாய்ப்புகள் அருந்தலாகவே உள்ளன.
NPP குழப்பத்தில் இருப்பது ஏன்? NPP க்கு என்ன நடந்தது? முந்திய ஆட்சியாளர்களின் தடத்திலேயே அது பயணிப்பதற்கான காரணங்கள் என்ன? அடிப்படை மாற்றங்களைச் செய்வதற்கு அது பின்னிற்பது ஏன்? தயங்குவது எதற்காக?
இதையெல்லாம் தமிழ் நோக்கு நிலையிலிருந்து பார்க்கவில்லை. அல்லது NPP யின் நடவடிக்கைகள் மீது பூதக்கண்ணாடியைப் பிடித்துப் இது NPP யின் மீதான வலிமையான விமர்சனமே (This is a strong criticism of the NPP). அதேவேளை கவலையோடான விமர்சனமும் ஆகும்.
ஏனென்றால், வராது வந்துதித்த மாமணிபோல, ஒரு மாற்றுச் சக்தியாக வரலாற்றில் NPP அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஒரு மாற்றுச் சக்தியாகக் கருதியே NPP யை மக்களும் மகிழ்ச்சியோடு அதிகாரத்துக்குக் கொண்டு வந்தனர்.
அந்த மகிழ்ச்சியை NPP யே பறித்தெடுக்கக் கூடாதல்லவா! மக்களின் உயர்ந்த – மதிப்பு மிக்க நம்பிக்கையை ஏமாற்றமாக மாற்றக் கூடாது அல்லவா!
00



