எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்துக்கு எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்த போராட்டத்துக்கு ஆதரவளிக்கமாட்டோம் என வடக்கிலுள்ள முக்கியமாக வர்த்தக அமைப்பின் பிரதிநிதிகள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.
முத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தின் பின்னணி சிக்கலானது, இளைஞன் இராணுவ முகாமுக்குள் தாக்கப்பட்டார்- ஆனால் அவரது மரணத்துக்கு காரணம் இராணுவ தாக்குதல் அல்ல என்ற விபரங்கள் வெளிப்பட்டு வரும் நிலையில்- இந்த விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்த எம்.ஏ.சுமந்திரன் முயல்வதாக கருதப்படுகிறது. வடக்கு கிழக்கில் போராட்டங்கள் நடத்த வேண்டிய விடயங்கள் பல இருக்க, இராணுவ பிரசன்னத்தை எதிர்க்க வேண்டிய தருணங்களில் சத்தமின்றி இருந்து விட்டு, தற்போது அரசியல் இருப்பிற்காக சுமந்திரன் இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளார் என்ற விமர்சனம் பரவலாக எழுந்துள்ளது.
முத்துஐயன்கட்டு விவகாரம் ஒரு குற்றச்சம்பவம் என்றிருக்க, அதை அரசியல் விவகாரமாக்கும் மோசமான அணுகுமுறையை சுமந்திரன் கையிலெடுத்துள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
முத்துஐயன்கட்டில் நடந்தது என்ன?- முழுமையான வாசிக்க இங்கு அழுத்துங்கள்
கதவடைப்பு போராட்டம் பற்றி பிற தரப்புக்களுடன் கலந்துரையாடாமல் சுமந்திரன் இந்த அறிவிப்பை விடுத்தார். முத்துஐயன்கட்டு விவகாரத்தை சுமந்திரன் முழுமையாக அறியாமல், அவரது ஆதரவாளர்கள் சிலரால் பிழையாக வழிநடத்தப்பட்டு விட்டதாக- இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகரான, சுமந்திரன் அணியை சேர்ந்த ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் வடக்கிலுள்ள மாவட்டங்களின் பிரதான வர்த்தக அமைப்புக்களின் பிரமுகர்களை தமிழ் பக்கம் தொடர்பு கொண்ட போது, இந்த அழைப்பை தாம் பொருட்படுத்தவில்லையென தெரிவித்தனர்.
அரசியல் உள்நோக்கமுடைய அழைப்பு என்பதால் இதில் நாம் ஈடுபடப் போவதில்லையென்றும், எனினும் எந்தவித அறிக்கைகளோ, அறிவிப்புக்களோ விடுக்காமல் தாம் வழக்கமான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றார்கள்.
இதேவேளை, மன்னாரிலுள்ள வர்த்தக பிரமுகர் ஒருவர் தெரிவிக்கையில்- வெள்ளிக்கிழமை நண்பகலில் முஸ்லிம் வர்த்தகர்கள் எமது பிரதேசத்தில் கடைகளை பூட்டுவார்கள். முஸ்லிம் வர்த்தகர்களையும் இலக்கு வைத்து சுமந்திரன் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் வர்த்தகர்கள் கதவடைப்பில் ஈடுபடும் தீர்மானம் பெரும்பாலும் எடுக்கப்படாது என்றார்.
இதேவேளை, ஏனைய பிரதான தமிழ் அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் தலையிடுவதில்லையென தீர்மானித்துள்ளன. ஆதரவு, எதிர்ப்பு என்ற எந்த பகிரங்க அறிவிப்பும் விடுவதில்லையென தீர்மானித்துள்ளதாக பிரதான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.



