‘ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் சுமந்திரனுக்கு இணக்கம்; சீ.வீ.கே விரும்பவில்லை’: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Date:

தமிழினம் முக்கியமான திருப்புமுனை கட்டத்தில் உள்ளது. தமிழ் தேசியம் முன்னோக்கிச் செல்லவுள்ளதா அல்லது முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளதா என்பதை வரும் 5 வருடங்கள் தீர்மானிக்கும். தமிழ் தேசம் முன்னோக்கிச் செல்வதானால் தமிழ் கட்சிகளுக்குள் ஒரு இணக்கப்பாடு ஏற்பட வேண்டும். நாங்கள் பிரிந்து நிற்பதால், கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய தரப்புக்கள் அறுதிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் உள்ளது. ஆகவே நாங்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இன்று (9) யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலுள்ள 47 நாடுகளுக்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் விதமாக ஒரு கடிதத்தை அனுப்பும் முயற்சியை மேற்கொண்டிருந்தோம். இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் சிவில் அமைப்புக்களுக்கு இது தொடர்பாக அறிவித்து, ரில்கோ விடுதியில் முதலாவது கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் தமிழரசு கட்சி கலந்து கொள்ளவில்லை. அனுப்பும் வரைபை தயாரிக்கும் பொறுப்பை சிவில் சமூகத்தினரிடம் ஒப்படைத்தோம்.

முதல் வரைபு வெளியானதும் ஜூலை 25ஆம் திகதி காலை 7.09 மணிக்கு தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், 7.10 மணிக்கு தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்துக்கும் வட்ஸ்அப் வழியாக வரைபையும், ஒரு தகவலையும் நானே அனுப்பி வைத்தேன். அந்த தகவலில்- இந்த வரைபில் உங்கள் கையொப்பத்தை பெற விரும்புகிறோம். சிலவேளை, இந்த வரைபில் கையொப்பமிட முடியாது, திருத்தம் செய்தால் கையொப்பமிடலாம் என்றால், தயவுசெய்து விரைவாக அனுப்பி வையுங்கள். இந்த வரைபில் கையொப்பமிட்ட ஏனைய தரப்புக்களுக்கும் அதை அனுப்பி, இந்த விவகாரத்தை முன்னெடுக்கலாம் என்றேன்.

அவர்கள் அதை படித்திருந்தாலும், எந்த பதிலும் வரவில்லை.

ஒருநாள் கழித்து, எமது கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரனிடம், தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டை அறியுமாறு சொன்னேன்.

கஜேந்திரன், தமிழரசு கட்சியின் செயலாளர் சுமந்திரனை தொடர்பு கொண்டார். தான் அந்த வரைபை படித்ததாகவும், அதில் தனக்கு கொள்கையளவில் எந்த பிரச்சினையுமில்லையென்றும், ஆனால் கையொப்பம் இடுவது தொடர்பில் கட்ச தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும். அவருடன் பேசி நான் பதில் தருகிறேன் என்றார்.

ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாத நிலையில், கட்சியின் தலைவர் சிவஞானத்தை, எமது கட்சி செயலாளர் கஜேந்திரன் தொடர்பு கொண்ட போது, கட்சியின் அரசியல்குழு கூடி இது தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் என்றார்.

இதையடுத்து, நாம் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, தமிழரசு கட்சி அரசியல் செயற்குழு கூட்டத்தை விரைவாக நடத்தி, ஒரு பதில் தருமாறும், கடிதத்தை விரைவாக அனுப்ப வேண்டுமென்றும் கோரியிருந்தோம்.

ரில்கோவில் முதல் தடவை சந்தித்த போது, ஓகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன்னர் கடிதத்தை நிறைவு செய்து அனுப்பி வைப்போம் என மக்களுக்கு அறிவித்திருந்தோம்.

31ஆம் திகதி காலையில் எமது கட்சியின் ந.காண்டீபனை, தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தொடர்பு கொண்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியை, இலங்கை தமிழரசு கட்சி சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார்.

அப்போது, கடித விவகாரத்தில் தமிழரசு கட்சி பதிலளிக்க வேண்டுமென சத்தியலிங்கத்திடம் தெரிவித்தோம். அவர் சுமந்திரனுடன் கதைத்த பின்னர், 31ஆம் திகதி பின்னேரம் கொழும்பில் சந்திக்கலாமென்றார்.

அந்த சந்திப்பில் சிவில் சமூகத்தை சேர்ந்த குருபரன், சிங்கத்தையும் அழைக்கலாமென்றோம். அதை எற்றார்கள். இரவு 9 மணிக்கு சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பை ப.சத்தியலிங்கம் தொடக்கி வைத்தார். இரு தரப்பும் சந்திக்க வேண்டுமென கட்சிக்குள் தானே பேசி முயற்சியை ஆரம்பித்ததாக குறிப்பிட்டார்.

இரு கட்சிகளுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தவே இந்த சந்திப்புக்கு கேட்டீர்கள். புரிந்துணர்வு ஏற்படுவதெனில், பொறுப்புக்கூறல் விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட வேண்டும். நாங்கள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பும் கடிதத்தில் நீங்களும் கையெழுத்திட வேண்டுமென்றேன்.

கடிதத்தில் உள்ளடக்கத்தில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதை அன்றே கஜேந்திரனிடம் சொல்லிவிட்டேன். சீ.வீ.கே.சிவஞானத்திற்குத்தான் கையொப்பமிட விருப்பமில்லை. நாங்கள் முன்னர் ஏதோ பொய் சொன்னதாக குறிப்பிட்டதாக சுமந்திரன் சொன்னார்.

என்றாலும், சனிக்கிழமை கட்சியின் அரசியல்குழுவில் இதை விவாதித்த பின்னர், மாலையில் எம்மை தொடர்பு கொள்வதாக சுமந்திரன் தெரிவித்தார்.

நீங்கள் வரைபை தயாரித்து விட்டீர்கள், இதில் நாம் திருத்தம் செய்வதெனில் என்ன செய்வதென்றும் கேட்டார்.

25ஆம் திகதியே திருத்தத்திற்கு உங்களுக்கு தந்தும் நீங்கள் பதிலளிக்கவில்லை. இந்த வரைபின் உள்ளடக்கத்தை மேலும் பலப்படுத்தும் திருத்தங்கள் செய்வீர்கள் என்றால், கடிதம் தாமதித்தாலும் பரவாயில்லை நாங்கள் காத்திருப்போம். ஆனால் வரைபின் உள்ளடக்கத்தை பலவீனப்படுத்துவது எவ்வளவு பொருத்தமானது என தெரியவில்லை. அப்படியெனில் இதில் கையொப்பமிட்ட அனைத்து தரப்புக்கும் மீள அறிவித்து தயார் செய்ய காலஅவகாசம் போதாது. உங்கள் ஆட்களுடன் கதைத்து பேசி எமக்கு அறிவியுங்கள் என்றேன்.

ஆனால், அரசியல் குழு கூட்டத்தின் பின்னர், சுமந்திரன் தலைமையில் செய்தியாளர்களை சந்தித்து, வரைபில் கையொப்பமிடுவதில்லையென அறிவித்தனர். அத்துடன், எம்மை பற்றி பொய்களையும் கூறியிருந்தார்.

அன்று பின்னேரம் யாழ்ப்பாணத்தில் சந்திப்பதென முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது. அந்த சந்திப்புக்காக எமது பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் காத்திருந்தார்கள். சந்திப்பிற்கு தமிழரசு கட்சியினர் வரவில்லை. அது பற்றி ஒரு தகவலும் அனுப்பவுமில்லை.

நாம் கொழும்பில் சந்தித்த போது, சனிக்கிழமை தமிழர கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் மாலை 5 மணிக்கு கூடி கடித விவகாரத்தை பேசுவதென்றும், ஓகஸ்ட் 7ஆம் திகதி கூடி இரு தரப்பும் கூட்டாக செயற்படுவது பற்றி பேசுவதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை சந்திப்பை இரத்து செய்வது பற்றி சம்பிரதாயபூர்வமாக கூட அறிவிக்காதவர்கள், 7ஆம் திகதி காலையில் சத்தியலிங்கம், காண்டீபனுக்கு ஒரு தகவல் அனுப்பினார். திட்டமிட்டபடி இன்று சந்திப்பு நடக்குமா என கேட்டார்.

அவர்கள் தொடர்ந்து சந்திக்க விரும்பினால், அடுத்த கிழமை யாழ்ப்பாணத்தில் சந்திக்கலாம், எமது உறுப்பினர்கள் அனைவரும் அப்போது யாழ்ப்பாணத்தில் இருப்பார்கள் என்றோம்.

தமிழினம் முக்கியமான திருப்புமுனை கட்டத்தில் உள்ளது. தமிழ் தேசியம் முன்னோக்கிச் செல்லவுள்ளதா அல்லது முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளதா என்பதை வரும் 5 வருடங்கள் தீர்மானிக்கும். தமிழ் தேசம் முன்னோக்கிச் செல்வதானால் தமிழ் கட்சிகளுக்குள் ஒரு இணக்கப்பாடு ஏற்பட வேண்டும். நாங்கள் பிரிந்து நிற்பதால், கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய தரப்புக்கள் அறுதிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் உள்ளது. ஆகவே நாங்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தே ஆக வேண்டும்.

நாங்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதானால், நாங்கள் இந்த விளையாட்டுக்களை விட முடியாது. பொய்களை சொல்லி, ஏமாற்றிக்கொண்டு போக முடியாது. அரசியல் கட்சிகளுடன் பொய்கள், சதிகள் மேற்கொள்வது ஒரு பக்கம், மற்ற அமைப்புக்களுடன் அப்படி செயற்பட முடியாது. அப்படி செயற்பட்டால் ஒற்றுமை வராது. அப்படி வராவிட்டால், மக்களின் பெரும்பான்மை ஆணை எம்மிடம் உள்ளதென தமிழ் தேசிய தரப்புக்கள் நிரூபிக்க முடியாமல் போய்விடும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியை அனுமதியின்றி கடக்க முற்படும் கப்பல்கள் தகர்க்கப்படும்: ஈரான்!

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக்...

எருமை மாட்டை சுட்டுக்கொன்ற இருவர் கைது!

மங்களகம பிரதேசத்தில் எருமை மாடு ஒன்றை துப்பாகியால் சுட்டுக் கொன்ற இருவரை...

மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்த கடற்படை புலனாய்வாளர்கள்!

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்