சீதுவை, ராஜபக்ஸபுராவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 29 வயது பெண் ஒருவர், கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக சீதுவை பொலிசார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பிரிவு காவல் நிலையங்களை சேர்ந்த பொலிசார், காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படையினர் இணைந்து நீர்கொழும்பு காவல் பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டார். குறிப்பாக, வெளியூர்களில் இருந்து வந்து தங்கும் விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் விடுதியில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருட்களின் எடையை அளவிடுவதற்கான நவீன மின்னணு தராசு மற்றும் 6 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில், பெண்ணின் அந்தரங்கப் பகுதிகளில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், பொம்மை அணிந்திருந்த உடையில் போதைப்பொருட்களின் அளவை துல்லியமாக அளவிடும் ஒரு சிறிய, நவீன மின்னணு தராசும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபரை மேலும் விசாரித்ததில், அவர் தனது கணவரிடமிருந்து பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்ததும், கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியில் காபரே நடனமாடி வருவதும் தெரியவந்தது என்று பொலிசார் மேலும் தெரிவித்தனர். கொழும்பு, கொட்டஹேனவில் உள்ள வித்யா வீதியைச் சேர்ந்த சந்தேக நபர், அவரது ஏழு வயது மகளுடன் இருந்தபோது சீதுவ ராஜபக்ஷபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பல சந்தர்ப்பங்களில், மின்னணு தராசுகள் மற்றும் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த பொம்மையை மகளிடம் கொடுத்து, யாருக்கும் சந்தேகமில்லாத வகையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
கொட்டஹேன பகுதியில் இருந்து சீதுவ பகுதிக்கு போதைப்பொருட்களை கொண்டு செல்லும்போது, பொம்மையின் உடலுக்குள் கவனமாக போதைப்பொருள் மறைத்து மகளிடம் கொடுக்கப்பட்டு, சீதுவ பகுதிக்கு போதைப்பொருள் கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு கொண்டு வரப்படும் போதைப்பொருட்கள் சீதுவ ராஜபக்ஷபுர விடுதி அறையில் ரகசியமாக பொதி செய்யப்பட்டு சீதுவ, கட்டுநாயக்க மற்றும் நீர்கொழும்பு சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் அவர் சிறிது காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், அவருடன் கைது செய்யப்பட்ட களனி மற்றும் ராகமவைச் சேர்ந்த மற்ற இரண்டு சந்தேக நபர்கள் அவருக்கு பாதுகாப்பு மற்றும் உதவிகளை வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களும் பொருட்களும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.



