வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், உதயராசா அணி மற்றும் சில சுயேச்சைக்குழுக்கள் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானித்துள்ளன.
இந்த கூட்டு, வவுனியா மாவட்டத்தில் எப்படி செயற்படுவதென இன்று (15) காலையில் கலந்துரையாடல் நடத்தினர்.
மாலையில், முல்லைத்தீவு மாவட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடக்கவுள்ளது.
இதன்மூலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் ஒரு உள்ளூராட்சிசபையில் ஆட்சியமைக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
மன்னார், வவுனியாவில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் அண்மையில் ரெலோ தரப்பினர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர், செயலாளரை சந்தித்து பேசியிருந்தனர். இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பான பேச்சுக்கு சீ.வீ.கே.சிவஞானம் சாதகமாக பதிலளிக்க முயன்ற போதும், செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அதை நிராகரித்தார். யாழ்ப்பாணத்தில் ஜனநாயக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எப்படி நடந்து கொள்கிறதோ அதேபோலவே வன்னியில் தமிழரசு கட்சி நடந்து கொள்ளும் என குறிப்பிட்டிருந்தார்.
அவர் அப்படி கூறியிருந்தாலும், கள யதார்த்தம் தமிழரசு கட்சிக்கு பாதகமாக இருந்தது. தமிழ் அரசு கட்சி- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணையாவிட்டால் வவுனியா மாநகரசபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இழக்கும். இலங்கை தமிழரசு கட்சி வவுனியா, முல்லைத்தீவில் அனேகமான சபைகளை இழக்கும்.
இந்த கள யதார்த்தத்தை புரிந்துகொண்ட வன்னி மாவட்ட தமிழரசு பிரமுகர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முடிவில் மாற்றமில்லையென குறிப்பிட்டு வந்தனர்.
முன்னதாக, வவுனியா மாவட்ட உள்ளூராட்சிசபைகள் தொடர்பாக இரு தரப்பும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன. அந்த உடன்படிக்கையின்படியே செயற்படுவோம், வன்னி முடிவில் மாற்றமில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கமும், சக தமிழ் தரப்புக்களிடம் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அந்த கூட்டு உறுதியாகியுள்ளது.
இன்று வவுனியாவில் நடந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட சபைகளில் ஆட்சியமைப்பது பற்றி தீர்மானிக்கப்பட்டது. வவுனியா மாநகரசபையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தவிசாளர் பதவியை பெறுவதென்றும், உபதவிசாளர் பதவியை உதயராசா தரப்புக்கு தமிழரசு கட்சி விட்டுக்கொடுப்பதென்றும், செட்டிக்குளம் பிரதேசசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசும், மாவட்டத்தின் ஏனைய 2 சபைகளில்- நெடுங்கேணி, வவுனியா தமிழ் பிரதேசசபைளில்- இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஆட்சியமைப்பதென தீர்மானிக்கப்பட்டது.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவில் தமிழ் கட்சிகள் ஆட்சியமைக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவளிப்பதால், அவர்களுக்கு செட்டிக்குளம் பிரதேசசபை விட்டுக்கொடுக்கப்பட்டது.
முல்லைத்தீவில் மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேசசபைகளில் ஆட்சியமைப்பது குறித்து இன்று கலந்துரையாடல் நடக்கவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இந்த சபைகளில் இணைந்து ஆட்சியமைக்க கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதை இறுதி செய்ய இன்று மாலையில் கலந்துரையாடல் நடக்கிறது. இரண்டு சபைகளிலும் இரு தரப்பும் தலா 2 வருடங்கள் பகிர்ந்து ஆட்சியமைக்கலாமென இலங்கை தமிழரசு கட்சி யோசனை தெரிவித்துள்ளது.
எனினும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாற்று யோசனையை முன்வைத்துள்ளது. துணுக்காயில் தாமும், மாந்தை கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சியும் ஆட்சியமைக்கலாமென யோசனை தெரிவித்துள்ளது. எப்படி பகிர்வதென்பது இன்று மாலை தீர்மானிக்கப்படும்.
இதேவேளை, மன்னாரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணக்கப்பாடு ஏற்படுத்த மாட்டேன் என சாள்ஸ் நிர்மலநாதன் விடாப்பிடியாக நிற்கிறார். அவர் தேசிய மக்கள் சக்தியினருடன் நெருக்கமாக செயற்படுவதாகவும், அவர்களுடன் இணைந்து செயற்பட முயல்கிறார் என கட்சி வட்டாரத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.




