வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, காசாவில் பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸின் தலைவராகக் கருதப்படும் முகமது சின்வாரின் உடலைக் கண்டுபிடித்து அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
“இஸ்ரேல் இராணுவம் இலக்கு வைத்து நடத்திய நடவடிக்கையில் … மற்றும் ஒரு அடையாளச் செயல்முறை முடிந்ததும், முகமது சின்வாரின் உடல் கான் யூனிஸில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்குக் கீழே உள்ள நிலத்தடி சுரங்கப்பாதைப் பாதையில் இருப்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,” என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மே 13 அன்று போராளிக் குழுவின் பல உறுப்பினர்களுடன் சேர்ந்து சின்வார் “கொல்லப்பட்டார்” என்று இராணுவம் கூறியது.
“நிலத்தடி சுரங்கப்பாதைப் பாதையில் தேடுதல்களின் போது, சின்வாருக்குச் சொந்தமான பல பொருட்கள் … கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் கூடுதல் புலனாய்வு கண்டுபிடிப்புகளும், மேலும் விசாரணைக்காக மாற்றப்பட்டன,” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலியப் படைகளால் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர்களிடம் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் கூறுகையில், சின்வாரின் உடல் “மருத்துவமனைக்கு அடியில், அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கீழே, ஒரு வளாகம், சில அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு கண்டெடுக்கப்பட்டது“ என்றார்.
“டிஎன்ஏ சோதனைகள் மற்றும் பிற சோதனைகள்” மூலம் உடல் உண்மையில் முகமது சின்வாரின்துதான் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியதாக அவர் மேலும் கூறினார்.
மே 28 அன்று, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் சகோதரர் சின்வாரை இராணுவம் கொன்றதாக உறுதிப்படுத்தினார், அவரும் காசா போரின் போது இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்.
“பயங்கரவாதிகளை எங்கள் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்தோம், காசா பகுதியில் பலவந்தமாக நுழைந்தோம், பல்லாயிரக்கணக்கான பயங்கரவாதிகளை ஒழித்தோம், … முகமது சின்வாரை ஒழித்தோம்,” என்று நெதன்யாகு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
காசாவில் போரைத் தூண்டிய ஹமாஸின் அக்டோபர் 7, 2023 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக இஸ்ரேலால் குற்றம் சாட்டப்பட்ட முகமது சின்வாரின் மூத்த சகோதரர் யஹ்யா சின்வார், 2024 ஒக்டோபரில் கொல்லப்பட்டார்.
ஹமாஸின் ஆயுதப் பிரிவான எஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைவரான முகமது டீஃப் கொல்லப்பட்ட பிறகு. முகமது சின்வார் பொறுப்பேற்றிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்,
ஒக்டோபர் 7 முதல் பல ஹமாஸ் தலைவர்கள் இறந்த பிறகு, இஸ்ரேலுடனான மறைமுக பேச்சுவார்த்தைகள், பணயக்கைதிகள் பிரச்சினை மற்றும் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் மேலாண்மை ஆகியவற்றில் முகமது சின்வார் முக்கிய பங்கு வகித்ததாகக் கருதப்பட்டது.
ஹமாஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.




