‘சுமந்திரன் சொன்னதை போல சீ.வீ.கே என்னிடம் கேட்கவில்லை… சிறிதரனின் பேச்சு கட்சிப் பிரச்சினை’: டக்ளஸ் தேவானந்தா!

Date:

“இலங்கை தமிழ் அரசு கட்சி செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் வழிகாட்டல், பணிப்புரை- அனுசரனையில்தான் அந்த கட்சி தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் சிறிதர் தியேட்டருக்கு வந்து, தமது கட்சிக்கு ஆதரவு கோரினார். பாராளுமன்றத்தில் இன்று சிறிதரன் ஆற்றிய உரை, அந்த கட்சியின் உட்கட்சி மோதலின் பிரதிபலிப்பு. அங்கு சிறிதரன் அணியும், சுமந்திரன் அணியும் மோதி வருகிறது. நாம் அவர்களின் உட்கட்சி மோதலில் சிக்காமல் முடிவொன்றை எடுப்போம்“- இவ்வாறு கூறியுள்ளார் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நேற்று ஈ.பி.டி.பி தலைமையகமான சிறிதர் தியேட்டருக்கு சென்று, உள்ளூராட்சிசபைகளில் ஈ.பி.டி.பியுடன் கூட்டாக இணைந்து ஆட்சியைப்பிடிப்பது பற்றி பேசினார்.

இந்த பேச்சின் போது- தமிழரசு, ஈ.பி.டி.பி கூட்டில், வி.மணிவண்ணன் தரப்பும் இணைய விரும்புவதையும் சீ.வீ.கே சுட்டிக்காட்டியிருந்தார்.

சீ.வீ.கே. சிறிதர் தியேட்டர் சென்றது தமிழரசு கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் கொதிப்படைய வைத்தது. கட்சித்தலைமையை அவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று (6) சுமந்திரன் வெளியிட்ட வீடியோவில்- “சிறிதர் தியேட்டர் சென்றது தொடர்பான விமர்சனங்களையடுத்து கட்சித்தலைவருடன் பேசினேன். இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில்- உள்ளூராட்சிசபைகளில் அதிக ஆசனங்களை பெற்ற தமிழ் கட்சி அந்தந்த பகுதிகளில் ஆட்சியமைக்க வேண்டும். தமிழரசு கட்சி அதிக ஆசனம் பெற்ற சபைகளில் ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் உதவ வேண்டும். வேறொரு தமிழ் கட்சி அதிக ஆசனம் பெற்ற சபையில் ஆட்சியமைக்க தமிழரசு கட்சி உதவும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தையே டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தேன் என கட்சித்தலைவர் சீ.வீ.கே என்னிடம் தெரிவித்தார்“ என குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்- 2001 இல் யாழ் தீவகத்தில் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராசாவை படுகொலை செய்ய, இராணுவ ஆதரவுக்குழுவான டக்ளஸ் தலைமையிலான ஈ.பி.டி.பி முயன்றது என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை அறிய தமிழ் பக்கம் இன்று அவரை தொடர்பு கொண்டது.

எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட வீடியோ கருத்தை டக்ளஸ் தேவானந்தா மறுத்தார். தமிழரசுகட்சியின் அரசியல்குழு தீர்மானம் எதையும் சீ.வீ.கே தன்னிடம் தெரிவிக்கவில்லையென்றார். மற்றொரு கட்சியின் அரசியல்குழு தீர்மானம் இன்னொரு கட்சியை எப்படி கட்டுப்படுத்தும் என கேள்வியெழுப்பினார்.

“சீ.வீ.கே என்னிடம் தனது கட்சி தீர்மானம் எதையும் கூறவில்லை. இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளூராட்சிசபைகளில் அதிகாரத்தை கைப்பற்ற நாமும் ஆதரவளிக்க வேண்டுமென்றார். எங்கள்ளுடன் மணிவண்ணனும் இணைந்து செயற்படுவார் என கூறினார்“ என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

“இலங்கை தமிழ் அரசு கட்சி- சீ.வீ.கே.சிவஞானம் என்னிடம் உதவி கேட்பது இது முதல்முறையல்ல. கடந்த உள்ளூராட்சி அதிகாரசபை தவிசாளர் தெரிவு சமயத்திலும் சீ.வீ.கே.சிவஞானம் என்னிடம் நல்லூரில் தனது ஆளான தியாகமூர்த்தி வெற்றியீட்ட ஆதரவளிக்குமாறு கேட்டிருந்தார். பிற சபைகளிலும் தமிழரசு கட்சியின் பிற பிரமுகர்கள் பேசியிருந்தனர். கடந்த முறை அவர்களை நாம் ஆதரித்திருந்தோம்“ என்றார்.

இதேவேளை- நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் கருத்து தொடர்பில் பதிலளித்த போது, நாரந்தனை சம்பவம் பற்றிய தனது தரப்பு கருத்துக்களை தெரிவித்தார். இந்த விவகாரம் மேல்முறையீட்டில் இருப்பதால் விபரமாக பேச விரும்பவில்லையென்றார்.

“சிறிதரனுக்கு கட்சிக்குள் பிரச்சினையுள்ளது. சிறிதரன், சுமந்திரன் அணிகள் மோதிக்கொள்கிறார்கள். அவையின் பிரச்சினை உட்கட்சி பிரச்சினை. கட்சி செயலாளர் சுமந்திரனின் வழிகாட்டல், அனுசரணை, பணிப்புரையின் அடிப்படையில் தலைவர் எமது அலுவலகத்துக்கு வந்திருப்பார். தெரியாமல் வந்திருக்க முடியாதுதானே. எம்மிடம் கட்சித்தலைவர் ஆதரவு கோரினார். இதற்கு சிறிதரன் ஆதரவா, சுமந்திரன் ஆதரவா என நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாதுதானே“ என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்