தெனியாய, விஹாரஹேன பகுதியில் வசிக்கும் 9 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் (17) இரவு தனது வீட்டில் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர்.
தெனியாய, விஹாரஹேன, என்செல்வத்த, பகுதியை சேர்ந்த ராமசாமி இஷாந்தி என்ற 25 வயது கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
17ஆம் திகதி மாலை 6.40 மணியளவில், அயலர்கள் பொலிசாருக்கு அளித்த தகவலைத் தொடர்ந்து, பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். உயிரிழந்த பெண்ணின் கருவிலுள்ள குழந்தையின் உயிரைக் காப்பாற்ற 1990 சுவசேரியா ஆம்புலன்ஸ் சேவை மூலம் இறந்தவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், இறந்தவர் தெனியாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அந்த நேரத்தில் கருவில் இருந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறந்த பெண்ணின் இரண்டாவது திருமணம் இது என்றும், சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் அவரது 28 வயது கணவர் அன்றிரவு கைது செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இது சந்தேக நபருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதுடன், சம்பவம் நடந்த நேரத்தில் சந்தேக நபரும், இறந்தவரின் முதல் திருமணத்தின் 7 வயது குழந்தையும் வீட்டில் இருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். மனைவியைத் தூக்கில் தொங்கவிட்ட பிறகு, சந்தேக நபர் வீட்டை விட்டு வெளியே வந்து, மனைவி இறந்துவிட்டதாகப் புலம்பிவிட்டு ஓடிவிட்டதாக அக்கம்பக்கத்தினர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் நேற்று (18) பிரசவத்திற்காக மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படவிருந்ததாகவும், 17 ஆம் திகதி மருத்துவமனை கிளினிக்கிற்குச் சென்று பின்னர் முச்சக்கர வண்டியில் மருத்துவமனைக்குத் திரும்புமாறு கூறப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மொரவக்க பதில் நீதவான் சி.எஸ்.திசாநாயக்க வந்து சம்பவ இடத்திலேயே விசாரணை நடத்தினார். தெனியாய ஆதார மருத்துவமனையிலிருந்து கர்ப்பிணிப் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாத்தறை பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.
இது தற்கொலையா அல்லது கொலையா என்பதை கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தெனியாய காவல்துறையினரால் நடத்தப்படும் என்றும் தெனியாய காவல்துறைப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் சந்தன அமரரத்ன தெரிவித்தார்.




