இலங்கையின் முக்கிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (பவ்ஃரல்), பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கட்சியின் ஆதரவாளர்களை அமைதியான காலத்திலும் பிரச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்த புகாரை விசாரிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுதலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவுக்கு பவ்ஃரல் கடிதம் எழுதியுள்ளது.
“பிரதமர் அமரசூரிய மே 3, 2025 முதல் அமைதியான காலத்துக்குப் பிறகும் தனது ஆதரவாளர்களை பிரச்சாரத்தில் ஈடுபட ஊக்குவிப்பதாகக் கருதக்கூடிய ஒரு கருத்தை வெளியிட்டிருப்பதை நாங்கள் கண்காணித்துள்ளோம். பிரதமரின் கருத்து, அவரது ஆதரவாளர்கள் தேர்தல் சட்டத்தை மீற ஊக்குவிக்கும் செயலாகும், அதே நேரத்தில் அவர் சட்டத்தை புறக்கணித்துள்ளார்,” என்று பவ்ஃரல் நிர்வாக இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கோயில்களில் தேர்தல் விதிகளை மீறி ஹரிணி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக மற்றொரு கண்காணிப்பு அமைப்பு குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.




