தையிட்டியிலுள்ள சட்டவிரோத விகாரை விவகாரத்தின் ஆக்கிரமிப்பு வடிவத்தை நியாயப்படுத்தும் விதமாக யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பேசியுள்ளார். விகாரையை வைத்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் விலகினாலே அந்த பிரச்சினையை தீர்க்கலாமென கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
இதுவரை வடக்கு மக்கள் தமிழ் கட்சிகளை தெரிவு செய்தார்கள். கிழக்கு மக்கள் முஸ்லிம் கட்சிகளை தெரிவு செய்தார்கள். தென்னிலங்கை மக்கள் சிங்கள கட்சிகளை தெரிவு செய்தார்கள். இதன்மூலம் எல்லா தேர்தல்களிலும் மக்கள் பிரிக்கப்பட்டனர். ஆனால் கடந்த பொதுத்தேர்தலில் என்ன நடந்தது? வடக்கு மக்கள், தெற்கு மக்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தனர்.
முதல் நடந்த தேர்தலில் மக்கள் பிளவுபட்டனர். கடந்த தேர்தலில் மக்கள் ஒன்றுபட்டனர். அப்படி ஒன்றுபட்ட மக்கள் மீண்டும் பிரிந்து செல்ல வேண்டுமா? பிரிந்து செல்லும் நிலையிலா இருக்கிறோம்? நாங்கள் அடிபட வேண்டுமா? நாங்கள் சந்தேகத்துடன் வாழ வேண்டுமா? நாங்கள் ஒன்றுபட்டு வாழும்- ஒரே தாயகத்தை கொண்டவர்களா- உரிமைகள் கிடைக்கப்பெறும் நாட்டை உருவாக்க தேசிய மக்கள் சக்தி பாடுபடும்.
நாங்கள் போர் புரிந்தோம். சந்தேகத்துடன் வாழ்ந்தோம். இறுதியில் எமக்கு என்ன கிடைத்தது? வடக்கு அழிந்தது. பிள்ளைகளை இழநத தாய்மார்.. உறவினர்களை இழந்தார்கள். நண்பர்களை இழந்தார்கள். வடக்கிலும் தெற்கிலும் இதுதான் நடந்தது.
எங்களுக்கு அவ்வாறான ஒரு காலம் மீண்டும் வேண்டுமா? எங்களுடன் தலைமுறை போர் புரிந்தோம். எங்களுடைய பிள்ளைகள் போர் புரியாத ஒரு நாடு, ஒற்றுமையாக வாழும் ஒரு நாட்டை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும்.
இனிமேல் இனவாதம் இல்லை. யாருக்கு இனவாதம் தேவையாக உள்ளது. அரசியல்வாதிகளுக்குத்தான் இனவாதம் தேவையாக உள்ளது. மக்களுக்கு இனவாதம் தேவையா?
உங்களுக்கு தெரியும் திஸ்ஸ விகாரையை (தையிட்டி) மையமாக கொண்ட ஒரு பிரச்சினை உள்ளது. நான் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கூறினேன்- திஸ்ஸ விகாரை பிரச்சினையை மிக இலகுவாக முடிவுக்கு கொண்டு வரலாம். அந்த விவகாரத்தை மையமாக கொண்டு செயற்படும் வடக்கு அரசியல் அந்த விவகாரத்திலிருந்து விலக வேண்டும். அந்த பிரச்சினையை வைத்து தென்னிலங்கையில் செய்யப்படும் அரசியல் நிறுத்தப்பட வேண்டும். திஸ்ஸ விகாரை பிரச்சினை மீதுள்ள அரசியலை நீக்குவதன் ஊடாகத்தான் அந்த பிரச்சினையை தீர்க்க முடியும்.
அந்த விகாரையிலுள்ள பௌத்த பிக்குகள், அந்த ஊரிலுள்ள பிரஜைகள், நாக விகாரையிலுள்ள எமது பிக்குமார்கள் இவர்கள் சேர்ந்தால் இந்த பிரச்சினையை தீர்க்கலாம். யார் இதனை தடுக்கிறார்கள்? அவர்களுக்கு மீண்டும் இனவாதம் தேவை.
நாங்கள் எந்தவொரு பிரதேசத்தில் வாழும் மக்களின் உரிமைகளையும் பறித்தெடுப்பதற்காக ஒருபோதும் செயற்பட மாட்டோம்.
இந்த நாட்டில் எந்தவொரு பகுதியிலாவது தொல்பொருள் எச்சங்கள் காணப்பட்டால், அது தமிழர்களுடையதா, சிங்களவர்களுடையதா, முஸ்லிம்களுடையதா என பார்க்க வேண்டுமா? அது தவறானது. அதை வரலாற்று எச்சங்களாகவே நாம் பார்க்க வேண்டும். அதை நாட்டின் மரபுரிமையாகவே நாம் பார்க்க வேண்டும். ஆனால் இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது?
ஒரு தொல்பொருள் எச்சம் காணப்பட்டால், அது சிங்களமா, தமிழா, இந்துவா, பௌத்தமா என்றுதான் தேடுகிறோம். எமது நாட்டின் கடந்த காலம் எப்படியிருந்தது என பார்க்க வேண்டும். அதை அடுத்த தலைமுறைக்கு பாதுகாக்க வேண்டும். ஆனால் இனவாதி அப்படி பார்ப்பதில்லை. அது இந்துவா, பௌத்தமா என்றுதான் பார்ப்பார்கள். அவர்களுக்கு என்ன தேவையாக உள்ளது.
இனவாத குழுக்கள் தோல்வியடைந்துள்ளன. மக்களால் அவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அந்த இனவாதத்தை மீண்டும் இந்த நாட்டில் விதைக்க முயற்சிக்கிறார்கள். நாட்டில் இனவாதத்தை தூண்ட முயற்சித்தால், அதை அடக்க தேசிய மக்கள் சக்தி எடுக்கக்கூடிய எல்லா நடவடிக்கையையும் எடுக்கும். எங்களுக்கு தேவை இனஒற்றுமை.
யாழ்ப்பாணத்தில் பரம்பரையாக அரசியல் செய்த தலைவர்கள் இருந்தார்கள். பரம்பரையாக வந்த அரசியல் கட்சிகள் இருந்தன. 1949 இல் உருவாகிய பெடரல் கட்சி (தமிழரசு கட்சி) இருந்தது. தமிழர் விடுதலை கூட்டணி இருந்தது. தமிழ் காங்கிரஸ் இருந்தது. இந்த பெரிய கட்சிகள், பெரும் தலைவர்கள் இருக்கும் போது கூட நீங்கள் எங்களை தெரிவு செய்துள்ளீர்கள். இனவாத குழுக்களின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வோம்.
பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் காணிகள் எடுக்கப்பட்டன. இப்போது போரில்லை. இனிமேலும் பாதுகாப்பு காரணங்களை கூறிக்கொண்டு மக்களின் காணிகளை அரசாங்கம் வைத்திருக்காது. விடுவிக்கக்கூடிய எல்லா காணிகளையும் விடுவிப்போம்.
இந்த பகுதியில் பாதைகள் மூடப்பட்டுள்ளன. படிப்படியாக வீதிகளை திறக்கிறோம். இங்கு மட்டுமல்ல. கொழும்பிலும் பல பாதைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றையும் நாம் திறந்தோம்.
காணாமல் போனவர்கள் விடயத்தில்- இராணுவத்திடம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளுக்கு என்ன நடந்ததென்று நாங்கள் தேடிப்பார்க்க வேண்டும். அதுதான் பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை. பிள்ளைகள் காணாமல் போன தாய்மார், தந்தைமாரின் வேதனை… ஒருவர் இறந்தால் அவரை நாம் அடக்கம் செய்வோம். அழுவோம். படிப்படியாக அந்த வேதனை குறையும். ஆனால் காணாமல் போன பிள்ளைக்கு என்ன நடந்தது, அவர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் படும் வேதனை எனக்கு புரியும். என்னுடைய சகோதரர் ஒருவரும் காணாமல் போனார். எனவோ காணாமல் போனவர்களின் தாய், தந்தையின் வேதனை எமக்கு புரியும். அவர்களுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை நாம் சொல்ல வேண்டும். எவரையும் சிறையிலகை்க அல்ல, அமைதிக்காக அது தேவை. அரசாங்கம் என்ற வகையில் அதை செய்வோம்.



