பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி உதய கம்மன்பில அவருடன் கலந்துரையாடியுள்ளார்.
நேற்று (13) மதியம் குற்றப் புலனாய்வுத் துறையில் பிள்ளையானை, உதயகம்மன்பில சந்தித்து பேசினார். இதன்போது, பொலிசாரும் அவர்களுடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் நாளை (16) ஊடக சந்திப்பை நடத்தி, பல விடயங்களை வெளிப்படுத்தவுள்ளதாக கம்மன்பில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கம்மன்பிலவுடனான சந்திப்பின் போது, பிள்ளையான் கண்ணீர் விட்டு அழுததாக தகவல் வெளியாகியுள்ளது.
தன்னை ஆட் கடத்தல் வழக்கில் கைது செய்து, தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி விசாரணை நடத்துவதாகவும், தன்னை அரச தரப்பு சாட்சியாக்க ஒப்புதல் வாக்குமூலமளிக்க வலியுறுத்துவதாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புலிகளுடனான போரில் தன்னை அரசுகள் பயன்படுத்தி விட்டு தற்போது கைவிட்டு விட்டதாகவும், முதுகு வலியுடன் தரையில் படுத்து தூங்குவதாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிள்ளையான் சமீபத்தில் மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.