பருத்தித்துறை வடஇந்து ஆரம்ப பாடசாலையில் நிர்வாக முறைகேடுகள் நடந்ததாக சுட்டிக்காட்டியவரின் மகன் பாடசாலை நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்த… அது நிர்வாக தவறு என பாடசாலை சமாளிக்க… இப்போது இந்த விவகாரம் பூதாகாரமாகி, ஆசிரியர்கள் பணிப்புறப்பாகி- தொடர்ந்து விசித்திர வடிவம் எடுத்து வருகிறது.
தனது மகன் பழிவாங்கப்பட்டார் என கொதித்த தந்தை, அதை தட்டிக்கேட்க சென்று தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை நிர்வாகத்துக்கு ஆதரவாக பாடசாலை ஆசிரியர்கள் நேற்றும், நேற்று முன்தினமும் (24,25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது.
வடஇந்து ஆரம்ப பிரிவு பாடசாலையில் நிர்வாக முறைகேடுகள் நடந்து வருவதாக, பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர் ஒருவரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தருமான ஒருவர் நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்தார். அவர் சமுதாய பணிகளில் முன்னிற்கும் ஒரு சமூக செயற்பாட்டாளரும் கூட.
அவருடன் பாடசாலை நிர்வாகம் முரண்பட்டதுடன், அவர் பாடசாலை அபிவிருத்திக்குழுவிலிருந்தும் நீக்கப்பட்டார். அப்போது இரு தரப்புக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு, பருத்தித்துறை பொலிஸ் நிலையம் வரை சென்றிருந்தது.
இந்த முரண்பாட்டின் தொடர்ச்சியாக இந்த பணிப்புறக்கணிப்பு நடந்துள்ளதாகவும், இது முறையற்ற நடவடிக்கையெனவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் குற்றம்சுமத்துகிறார்கள்.
அண்மையில் பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டியில் சர்ச்சை ஏற்பட்டது.
பாடசாலையில் நிர்வாக குழறுபடி உள்ளதாக சுட்டிக்காட்டியவரின் மனைவியும் அதே பாடசாலையில்தான் கல்வி கற்பிக்கிறார். அவர்களது மகனும் அதே பாடசாலையில்தான் கல்வி பயில்கிறார்.
இந்த சர்ச்சை குறித்து- தற்போது கைது செய்யப்பட்டுள்ள வைத்தியசாலை உத்தியோகத்தரின் உறவினர் வட்டாரம் தெரிவிக்கும் போது-
“அண்மையில் நடந்த பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டியொன்றில், அந்த தம்பதியின் மகன் தேசிக்காய் ஓட்டத்தில் பங்கேற்று முதலாமிடம் பெற்றுள்ளார். பரிசில் அறிவிக்கும் போது, முதலாமிடம் வந்ததாக அந்த மாணவனின் பெயர் அறிவிக்கப்படாமல், போட்டியில் பங்கேற்ற மற்றொரு மாணவனின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதை அவதானித்த, முதலாமிடம் பெற்ற மாணவனின் தாயாரான ஆசிரியை இது பற்றி, விளையாட்டுக்கு பொறுப்பா ஆசிரியரிடம் கேட்டுள்ளார்.
தனது மகன்தான் முதலாமிடத்தை பெற்றவர் என ஆசிரியை வலியுறுத்தியதையடுத்து, போட்டி நிகழ்வின் வீடியோ சரிபார்க்கப்பட்டது. இதில், குறிப்பிட்ட ஆசிரியையின் மகனே முதலாமிடம் பெற்றது தெரிய வந்தது.
இந்த விவகாரம் பாடசாலை அதிபரின் கவனத்துக்கு சென்றதையடுத்து, “பாடசாலை தரப்பில் தவறு நிகழ்ந்துள்ளது. எனினும், முதலாமிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவனின் மனதும் புண்படும் என்பதால், முதலாமிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவனுக்கும், ஆசிரியையின் மகனுக்கும் முதலாமிடத்தை பகிர்ந்து வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
தவறு நடந்துள்ளதாகவும், மெய்வல்லுனர் போட்டி முடிவதற்குள் தவறு சரி செய்யப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போட்டி முடிவடைவதற்குள் இந்த போட்டியின் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதற்குள், முதலாமிடம் பெற்ற மாணவனின் தாயாரான ஆசிரியை, இந்த விவகாரத்தை தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தரான அவரது கணவர், வைத்தியசாலை நடைபவனி தொடர்பான அழைப்பிதழ்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, மனைவியிடமிருந்து தகவலை பெற்றார்.
மாலை 6.30 மணியளவில் அவர் பாடசாலைக்கு சென்று அதிபரிடம் நியாயம் கேட்டு, முரண்பட்டார். பின்னர் அங்கிருந்து வெளியேறும் போது ஆசிரியர்கள் சிலரையும் பேசியுள்ளார். தன் மீதான கோபத்தால் சிறுவர்களை பழிவாங்கினால், அவர்கள் எவ்வளவு மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதை கூட யோசிக்க தெரியாதா என்பதே அவர் பேசியதன் சாரம்சம்.
அவர் பாடசாலையிலிருந்து வெளியேறிய போது, வெளியே நின்ற- பாடசாலை அபிவிருத்திச்சபையில் அங்கம் வகிக்கும் பெற்றோர் இருவர்- பருத்தித்துறை, கற்கோவளத்தை சேர்ந்தவர்கள்- மோட்டார் சைக்கிளில் அவரை விரட்டிச் சென்றனர். தன்னை அவர்கள் விரட்டுவதை அறிந்த வைத்தியசாலை உத்தியோகத்தர் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தினார். அப்போது முச்சக்கர வண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகினார்“ என்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க வேண்டுமென கோரி பாடசாலை ஆசிரியர்கள் நேற்றும், நேற்று முன்தினமும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு மாணவர்களின் பெற்றோரின் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. பாடசாலை உள்ளக மோதலில் ஒருவரை பழிவாங்க, இந்த பணிப்புறக்கணிப்பு ஆயுதம் கையிலெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறையற்ற நடவடிக்கையினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சுமத்தினர்.
இதேவேளை, இந்த சம்பவத்தை தொடர்ந்து பாடசாலை ஆசிரியர்கள் சிலரால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
“பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டி முடிவடைந்த பின்னர், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கூடியிருந்த போது, வைத்தியசாலை உத்தியோகத்தர் அங்கு சென்று அதிபரையும், சில ஆசிரியர்களையும் தூசண வார்த்தைகளையும் பயன்படுத்தி மோசமாக திட்டியதாக ஆசிரியர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறுவளமாக, வைத்தியசாலை உத்தியோகத்தரும் முறைப்பாடு செய்துள்ளார். பாடசாலை அபிவிருத்திசபை அங்கத்தவர்கள் இருவர் தன்னை மோட்டார் சைக்கிளில் விரட்டி வந்து, தாக்கியதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார்“ என பருத்தித்துறை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, வைத்தியசாலை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது முறைப்பாட்டின் அடிப்படையில் பாடசாலை அபிவிருத்திசபை உறுப்பினர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் அன்றைய தினமே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
வைத்தியசாலை உத்தியோகத்தரின் உறவினர் தரப்பினர் மேலும் தெரிவிக்கையில்-
“இந்த சம்பவத்தை தொடர்ந்து கைதானவர் சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் மதுபோதையில் இல்லையென்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர் மதுபோதையில் இருந்ததாகவே முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. வைத்திய அறிக்கையை தொடர்ந்து, பாடசாலையின் கட்டமைப்பு ஒன்றின் அங்கத்தவர்கள் என குறிப்பிட்டபடியும், பெற்றோர் என குறிப்பிட்டபடியும் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு சென்ற ஒரு குழுவினர், வைத்தியசாலை தரப்புடன் முரண்பட்டுள்ளனர். அந்த நபர் பாடசாலைக்குள் நுழைந்த போது தமக்கு மதுவாடை அடித்ததாகவும், நீங்கள் எப்படி அவர் மதுபோதையில் இருக்கவில்லையென அறிக்கையிட முடியுமென தர்க்கப்பட்டுள்ளனர். சட்டவைத்திய அதிகாரி ஒரு சிங்களவர். அவருக்கு இந்த உள்ளூர் மோதல்கள் பற்றி தெரியாது. மதுபோதையில் இல்லாத ஒருவரை மதுபோதையில் இருந்ததாக என்னால் அறிக்கையிட முடியாது, அனைவரும் கிளம்புங்கள் என அவர்களை வைத்தியர் அனுப்பிவிட்டார்“ என்றனர்.
இதுதவிர இன்னொரு சர்ச்சைக்குரிய விடயத்தையும் தெரிவித்தனர்.
“இந்த சம்பவத்தை தொடர்ந்து பாடசாலை அவிருத்தித்குழுவினர் என குறிப்பிட்ட சிலர், கல்வித்துறை அதிகாரிகளை அணுகி, வைத்தியசாலை உத்தியோகத்தரின் மனைவியை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி வருவதாக அறிய முடிந்தது. இது தொடர்பில் நாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாட முடிவு செய்துள்ளோம்“ என்றனர்.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாட மாணவர்களின் பெற்றோர் இன்று புதன்கிழமை பாடசாலைக்கு கட்டாயமாக வர வேண்டுமன பாடசாலை அபிவிருத்திசபை என்ற பெயரில் பிரசுரமும் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில், வைத்தியசாலை உத்தியோகத்தரின் மனைவியையும், மகனையும் பாடசாலையை விட்டு இடமாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தும் கோரிக்கையை முன்வைப்பதென- அபிவிருத்திக்குழு நிர்வாகிகள் என குறிப்பிட்ட சிலர் முன்வைத்தனர். எனினும், அதற்கு ஏனைய பெற்றோர் தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “அபிவிருத்திக்குழுவில் உள்ள நாம் அனைவரும் மாணவர்களின் பெற்றோர். இன்னொரு மாணவனையும், ஆசிரியையும் இடமாற்றம் செய்ய வேண்டுமென எந்த அடிப்படையில் கேட்க முடியும்?“ என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, குறிப்பிட்ட ஆசிரியைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றலாமென்றுள்ளனர்.
எந்த அடிப்படையில் ஆசிரியைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க முடியுமென பெற்றோர் சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர். பாடசாலைக்குள் நடக்கும் விவகாரங்களை வெளியில் சொன்னதன் அடிப்படையில் ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க கோரலாம் என- இந்தியா- பாகிஸ்தான் அணுவாயுத இரகசியங்களை பரிமாறிய பாணியில்- குண்டைத் தூக்கிப் போட்டுள்ளனர் அந்த அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள்.
இதற்கும் பெற்றோர் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர் தனது கணவரான- அந்த பிள்ளையின் தந்தையிடம்தானே விடயத்தை சொன்னார். பாடசாலையில் பிரச்சினை நடந்தது என்று மட்டும் கூறுகிறீர்களே தவிர, என்ன பிரச்சினையென கூறவில்லையே. நடந்ததை கூறுங்கள்“ என பெற்றோர் தொண்டைப்பிடி பிடிக்க, அதற்கு பின்னரே- விளையாட்டு போட்டி சர்ச்சையை குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பிரச்சினையின் மூலகாரணம்- பாடசாலை தரப்பின் தவறு அல்லவா என பெற்றோர் குறிப்பிட- அதையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஆசிரியைக்கு இடமாற்றம் வழங்கும் தீர்மானத்தில் ஒரு பகுதி பெற்றோர் கையொப்பமிட, இன்னொரு பகுதி பெற்றோர் கையொப்பமிட மறுத்து விட்டனர்.
பாடசாலை அபிவிருத்திசபையில் முரண்பட்ட பின்னர், வைத்தியசாலை உத்தியோகத்தர் பலமுறை பேஸ்புக்கிலும் பாடசாலை தொடர்பில் பதிவிட்டுள்ளதாக- அவரது எதிர்தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.
இதனால் இரு தரப்பும் நீண்டகாலமாக எதிரும் புதிருமாக செயற்பட்டு வந்த நிலையில்- பாடசாலை விளையாட்டு போட்டியில் அவரது மகனுக்கு வேண்டுமென்றே அநீதி இழைக்கப்பட்டதாக குடும்பத்தினர் கருதியுள்ளனர்.
மாணவனின் பெயர் விடுபட்ட விவகாரம் தவறுதலாக நடந்தது- அதை பின்னர் சரி செய்து விட்டோம் என்கிறது பாடசாலை நிர்வாகம்.
பாடசாலைகள் தனியொருவரின் சொத்தல்ல. ஒரு சமூகத்திற்கானது. தலைமுறைகள் கடந்தும் மாணவர்களிற்கு அறிவூட்டும் இடங்கள். அதன் நிர்வாக முறைகேடுகள் இருந்தால் அதை சரி செய்வது அனைவரதும் கூட்டு பொறுப்பு. அப்படியில்லாமல், போலியான விமர்சனங்களே இருந்தால்- அவை போலியானது என்பதை வெளிப்படை தன்மை மூலம் பாடசாலை நிர்வாகம் சுலபமாக அம்பலப்படுத்த முடியும். இந்த திசையில் பயணித்து, பாடசாலை மீதான விமர்சனங்களையும், விமர்சகர்களையும் செயலற்றதாக்குவதே செய்யப்பட வேண்டிய பணி. அதை செயற்படுத்தப வேண்டியது திணைக்கள அதிகாரிகளின் கடமையும் கூட.
இதற்குள், கொள்ளிக்கட்டை எடுத்துக் கொடுக்கும் வேலைக்கு பாடசாலையின் கட்டமைப்புக்களின் பெயரில்- பெற்றோர் அல்லது வெளித்தரப்பினர் மூக்கை நுழைத்து சிக்கலை அதிகப்படுத்த அனுமதிப்பது பெரிய தவறாகவே அமையும்.
பாடசாலை நிர்வாகத்தின் தவறால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவன் ஒருவருக்காக, நியாயம் கேட்ட தந்தைக்கு நேர்ந்த கதி தொடர்பில் அவரது உறவினர்கள் தெரிவித்த கருத்துக்களும் இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலை நிர்வாகத்தினர் தமது தரப்பை தெரிவித்தால், அவற்றையும் தமிழ்பக்கம் பிரசுரிக்கும்.