திருகோணமலை வளாகத்தைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று (25) மாலை 3.30 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்த வேண்டும், அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி வழங்கப்பட வேண்டும், மகாபொல வழங்கப்படாத பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகள் இன்மையை எதிர்த்து கோஷங்களை எழுப்பிய வண்ணம் வண்ணம் குறித்த பேரணியில் மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது, அங்கிருந்து வளாகத்தின் பிரதான வாயிலுக்கு வருகைதந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சில விரிவுரையாளர்கள் வளாகத்திலிருந்து வெளியேற முயன்ற போது, மாணவர்கள் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றதோடு, சில இடங்களில் முரண்பாடுகளும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர், குறித்த பேரணி திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியை நோக்கி நகர்ந்தது.

இந்த நிலையில், பொலிஸாரால் தடுத்துநிறுத்த முற்பட்ட வேளை, மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து, பேரணி தொடர்ந்தும் நகர்ந்து பிரதான வீதியை அடைந்து, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பல்கலைக்கழக பேருந்துகள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களை வெளியேறாமல் தடுத்ததை தொடர்ந்து, ஊழியர்கள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இவ்வாறாக குறித்த மாணவர்களால் பிரதான வீதியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டு ஆர்ப்பாட்ட பேரணியை நிறைவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.