யாழ்ப்பாணத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி போலியான மருத்துவ அறிக்கைகளை காண்பித்து, பல வெளிநாட்டவர்களிடமிருந்து பணம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னணியில், அவர் மோசடியாக பெற்ற 50 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். குறிப்பாக, யாழ்ப்பாண நகரம், திருநெல்வேலி, கல்வியங்காடு, கோப்பாய், கொக்குவில் போன்ற பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஏமாற்றுவதில் குறித்த பெண் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை, கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில், குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் சென்று, தனக்கு சிகிச்சை மேற்கொள்ள பண உதவி தேவை என கூறி 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பணத்தைக் கொடுத்த வெளிநாட்டவர் அதை தனது உறவினர்களிடம் தெரிவிக்கையிலேயே, இதே பெண்ணால் ஏமாற்றப்பட்ட மேலும் பலர் இருப்பதற்கான தகவல்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, அந்த வெளிநாட்டவர் உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கி, பெணின் மோட்டார் சைக்கிளின் இலக்கம் மற்றும் அடையாளங்களை தெரிவித்தார். இதையடுத்து, பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு, கடந்த வெள்ளிக்கிழமை (21) குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.