பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை நம்பி 50 பேர் 2 கோடி ரூபாய் நஷ்டமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஒரு தம்பதி வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்கான விசா பெற்று தருவதாக முகப்புத்தகத்தில் விளம்பரங்களை செய்துள்ளனர்.
குறித்த விளம்பரத்தில் ஜப்பான், நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பிரான்ஸ் மற்றும் வளைகுடா நாடுகளில் வேலை வாங்கி தருவதாகவும், இதற்கான வேலைவாய்ப்பு விசாக்களை பெற்று தருவதாகவும் குறிப்பாக ஜாக்கி வேலைக்கு விசா பெற்று தரப்படும் என விளம்பரப்படுத்தியிருந்தனர்.
பலரும் இவ் விளம்பரங்களை பார்த்து, நம்பி குறித்த தம்பதிகளுடன் தொடர்புகொண்டு விளக்கங்களை பெற்றுக்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
இவ்வாறே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாக்சிங் என்பவரும் இவர்களை தொடர்புகொண்டிருந்தார். முதன் முறையாக மாக்சிங் இவர்களை தொடர்பு கொண்டு, தன்னுடைய நண்பர்கள் நியூசிலாந்து மற்றும் ஜப்பானுக்கு சென்று ஜாக்கி வேலை செய்வதற்கு விசா பெற்று தரும்படி கேட்டுள்ளார். இதற்காக இந்த தம்பதி 8 லட்சம் ரூபாயை பெற்று விசா வாங்கி கொடுத்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, மீண்டும் மாக்சிங் மேலும் 50 பேரை அழைத்து வந்து அவர்களுக்கும் விசா பெற்று தரும்படி கூறியுள்ளார். அவர்களிடம் இந்த தம்பதியினர் மொத்தமாக 2.6 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளனர். இந்த பணத்தை கொண்டு துபாய், இலங்கை ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஆடம்பரமாக பொழுதை கழித்துள்ளனர். மீண்டும் அவர்கள் பெங்களூருக்கு திரும்பிய நிலையில் அவர்களால் உறுதியளித்தபடி இந்த 50 பேருக்கும் விசா வாங்கி தர முடியவில்லை. எனவே போலியாக விசா தயாரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குறித்த 50 பேரும் இந்த தம்பதிகள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து தற்போது ஒரு எஸ்யூவி கார் , ஒரு செடான் கார், இரண்டு இருசக்கர வாகனங்கள், 24 கிராம் தங்கம் மற்றும் 64 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், காவல் துறையினரால் இந்த விசா மோசடி விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் இதை போன்ற போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அண்மையில் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றங்களை மேற்கொண்ட இந்தியர்கள் மீளவும் நாடு திருப்பப்பட்ட இந்நிலையில் தற்போது மற்றொரு விசா மோசடி விவகாரம் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே மக்கள் இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




