நாட்டில் தற்காலங்களில் இடம்பெற்று வரும் அசம்பாவித சம்பவங்களால், சில பாதுகாப்புப் படைகள் கிளீன் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாதுகாப்புப் படைகளில் ஏற்படும் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாட்டில் பாதாள உலக இயக்கங்கள் அதிகரித்து, அரசியல், பாதுகாப்புப் படைகள், சட்டம் ஆகியவற்றுக்குள் தொடர்பு காணப்படுவதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் (19) நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 39 பேரைக் கொலை செய்தவர் எனக் கூறப்படும் கனமுல்ல சஞ்சீவ, 7 பேரைக் கொலை செய்தவர் எனக் குற்றம் சாட்டப்பட்ட நபரால் நீதிமன்ற அறையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
சஞ்சீவ குறித்த தகவல்கள் திரட்டப்பட்டபோது, அவர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டவர் என்பதும், புலிகளின் ஆயுதங்களை கொழும்புக்கு கடத்திய குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது. இதுவரை சீதுவ மற்றும் கல்கிஸை பகுதிகளில் ஏழு கொலைகள் செய்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு முன்னாள் இராணுவ வீரர், லெப்டினன் தரத்தில் பணியாற்றிய நபர் புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு பெண்ணால் சட்ட புத்தகத்திற்குள் ரிவோல்வரை மறைத்து கொண்டு சென்றதாகவும், அப் புத்தகம் குறித்த கொலையாளி கையிற்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வாடகைக் கொலை எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் நாடாளுமன்றத்திலும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. பா.உ தயாசிறி ஜயசேகர, நாட்டில் பெரிய பாதுகாப்பு பிரச்சினை நிலவுவதாகக் கூறியதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த, பாதாள உலக நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் கடுமையாக எதிராக இருக்கிறது எனக் கூறினார். இதற்காக கருப்புப் பணம், போதைப்பொருள் கடத்தல், கொலைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் பாதுகாப்புப் படைகள், இராணுவம், பொலிஸார் என்பவர்களால் சிலருக்கு ஆதரவு வழங்கப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. கனமுல்ல சஞ்சீவ மீது முன்பு நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தன. ஆனால் போதுமான சாட்சிகள் இல்லாததால் அவரை விடுவிக்க சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார். இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
சஞ்சீவ யாருக்காக கொலைகளைச் செய்தார்? என்பதற்கான தகவல்கள் வெளிவந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்திற்கு பதிலளித்த பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு சட்டத்தரணிகள் உட்பட அனைவரும் சோதனை செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். இது போல பாதாள உலகத்துடன் தொடர்புடைய சில பொலிஸாரும், இராணுவத்தினரும் இருக்கலாம் என்பதால், நாட்டின் பாதுகாப்புப் படைகள் முழுமையாக சுத்திகரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இந்த சம்பவத்திற்குப் பிறகு தனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு மட்டுமல்லாது மன்னார் நீதிமன்ற வளாகத்திலும் அண்மையில் இவ்வாறே முன்னாள் இராணுவ வீரர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல அம்பாந்தோட்டை மித்தெனிய பகுதியில், ஒரு குடும்பத்தை சேர்ந்த தந்தை, 6 வயது மகள், 9 வயது மகன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
இந்த வருடம் மட்டும் 15-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன. இதில் பொலிஸார், இராணுவ அதிகாரிகள் தொடர்புடையதாக கூறப்படும் தகவல்களும் வெளியானதால் மக்கள் பாதுகாப்பு தொடர்பாக மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்த குற்றச்செயல்களை நிறுத்த, பாதுகாப்புப் படைகள் முழுமையாக சுத்திகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சமூகத்திலும், அரசியலிலும் வலுவாக எழுந்து வருகிறது.




