மன்னார் தீவில் மக்களின் விருப்பமின்றி கனிய மணல் அகழ்வதற்காக மேற்கொள்ளப்படவுள்ள கள ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (18) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு-செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
மன்னார் தீவுப் பகுதியில் கடந்த காலங்களில் கனிய மணல் அகழ்விற்கான ஆய்வுகளை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட போதும், மக்கள் பாரிய எதிர்ப்பு வெளிப்படுத்தியதால் அது நிறுத்தப்பட்டது. ஆனால், நேற்றையதினம் (17) மன்னார் நீதிமன்றத்திலிருந்து போராட்டத்திற்கு எதிராக தடை உத்தரவை பெற்றுக்கொண்டு, நாளை (19) அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளவிருக்கின்றனர்.
இது மக்களின் எதிர்ப்புக்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளதால், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மன்னார் தீவு கடல்நீர் மட்டத்திலிருந்து மிகவும் தாழ்வாக அமைந்துள்ள ஒரு நிலப்பகுதி. இதனால், மழைக்காலங்களில் நீர் தேங்குவதால் மக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாய நிலை உருவாகிறது. மன்னார் தீவில் மூன்று மாடிகளுக்கு மேல் கட்டடங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபை அனுமதி வழங்காமல் இருப்பதும், அதன் நில அமைப்பின் மியத்தனத்தையே உணர்த்துகிறது. இதுபோன்ற ஒரு பகுதியில் கனிய மணல் அகழ்வு மேற்கொள்வது, சுற்றுச்சூழலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைமையில் 23 அரச திணைக்களங்கள் இந்த கள ஆய்வை மேற்கொள்வதற்காக கடந்த இரண்டு முறை முயற்சி செய்தபோதும், மக்களின் கடும் எதிர்ப்பால் அது நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், நீதிமன்றத் தடை உத்தரவுடன், மக்களுக்குத் தெரியாமல் ஆய்வு செய்ய முயற்சிப்பது முற்றிலும் துரோகம் என்று ரவிகரன் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு திட்டமாக இருந்தாலும், மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயல்படுத்த முடியாது. மக்களின் எதிர்ப்பை ஏற்றுக்கொண்டு, இந்த ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டுமென மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் பிற திணைக்களங்களிடம் ரவிகரன் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதால், சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகக் கூடும் என அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.