யாழ்ப்பாணம் வேலணை செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவனான சந்திரகாசன் கனிஸ்டன் என்பவரே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று (16) மாலை, சிறுவனின் தாய் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், சிறுவன் வீட்டில் தனியாக இருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
தொலைக்காட்சி பார்ப்பதற்காக மின் இணைப்பை ஏற்படுத்த முயன்றபோது, திடீரென மின்சாரம் தாக்கியதால் சிறுவன் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், உறவினர்கள் வீட்டிற்கு வந்தபோது சிறுவனை மின்சாரம் தாக்கிய நிலையில் கண்டனர். அதனைத்தொடர்ந்து உடனடியாக அவனை வேலணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், வைத்தியசாலையில் அனுமதிக்குமுன்பே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில், சிறுவனின் உடல் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.