ஹமாஸ் அமைப்பு மேலும் மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுதலை செய்ய உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2023ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி 250 இற்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். பின்னர், தற்காலிக போர் நிறுத்தத்தின் போது 120 இற்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது, ஹமாஸ் அமைப்பினரிடம் 94 பேர் பிணைக்கைதிகளாக இருப்பதோடு, 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தமாக இருந்து சமீபத்தில் இருதரப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஆறு வாரங்களுக்கு நீடிக்கவுள்ளது. இந்த நிலையிலே, ஹமாஸ் ஆயுதக்குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி மேலும் மூன்று இஸ்ரேலியர்களை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
யாஹர் ஹரன் (46), அலெக்சாண்டர் ருபெனோ (29) மற்றும் சஹொய் டிகெல் ஷென் (36) ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதற்கு பதிலாக, 369 பலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க முடிவு செய்துள்ளது. இதில் 36 பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஆயுள் தண்டனை பெற்றவர்களாக இருக்கின்றனர்.
போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில், இதுவரை ஹமாஸ் 21 இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுதலை செய்துள்ளதோடு, இஸ்ரேல் 750 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.