பதுளை மக்களுக்கு பாறை சரிவு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் எல்ல-வெல்லவாய வீதியில், மலைப்பகுதிகளில் உள்ள பாறைகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரித்துள்ளது.
ராவண எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தினால் மலை உச்சியில் உள்ள பாறைகள் உறுதியற்ற நிலையடைந்துள்ளன. கடந்த இரண்டு நாட்களாக எரிந்து கொண்டிருந்த தீ, இன்று (15) காலை தீவிர முயற்சிகள் மூலம் அணைக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல். உதயகுமார தெரிவித்துள்ளார்.
இந்த தீ அணைப்புப் பணியில் முப்படைகள், வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் வன பாதுகாப்புத் துறைகள் இணைந்து செயல்பட்டன.
தீவிபத்தினால் ராவண எல்ல வனப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, அதன் விளைவாக பாறைச்சரிவுகளுக்கும் அதிக ஆபத்து இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.