Pagetamil
கிழக்கு

இராணுவச் சிற்றூண்டிச்சாலையை அகற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு

பாசிக்குடா சுற்றுலா தளத்தில் உள்ள இராணுவ சிற்றூண்டிச்சாலையை அகற்றுதல், மகப்பேற்று சிகிச்சை நிலையங்களுக்கு நிரந்தர கட்டிட வசதி, புற்றுநோய் மற்றும் ஏனைய தொற்றுநோயாளர்களுக்கான சிகிச்சை வசதிகள் போன்ற பலவற்றை உள்ளடங்களாகக் கொண்டு கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் (13) இடம்பெற்றது.

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்கான 2025ம் ஆண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இறைவணக்கத்துடன் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத், எம்.எஸ்.நளீம், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு வங்கி மற்றும் நிதி தொடர்பான இணைப்பாளர் க.திலிப்குமார், பிரதேசத்தின் பல்வேறு அரச திணைக்கள அதிகாரிகள், கிராமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, மீராவேடை கிராமத்தின் எல்லை தொடர்பான பிரச்சினை மற்றும் பாசிக்குடா சுற்றுலா தளத்தில் இராணுவத்தினரின் சிற்றுண்டிச்சாலை இயங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மீராவேடை எல்லை விவகாரம் குறித்து நில அளவைத் திணைக்களம் பக்கச்சார்பின்றி செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அந்தப் பகுதி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலின் பேரில் நிர்ணயிக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட மற்ற தரப்பினரின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே, சரியான எல்லை வரைபடத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

பாசிக்குடா சுற்றுலா தளத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலையை அகற்றுவது தொடர்பாகவும், அங்கு உள்ள கடைதாரர்களுக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை முன்வரவேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதால், இதில் எந்தவித பிரச்சினைகளும் ஏற்பட்டால் அடுத்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தகவல் வழங்கப்படுமென கூறப்பட்டது.

மேலும், பேத்தாழை மீன்பிடித் துறைமுகப் பகுதியில் தனிநபர் ஒருவர் தனது காணியை ஆற்றோடு இணைந்து வேலி அமைத்து போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்துள்ளதாக புகார் முன்வைக்கப்பட்டது. இதனை அகற்றுமாறு முன்பு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை அது நடைமுறைக்கு வராத நிலையில், உடனடி நடவடிக்கை அவசியம் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் படகு கட்டுவதற்கு இடப்பரப்பு போதாது என்பதால், விஸ்தீரணத்தைக் கொண்டுவர வேண்டுமெனவும், படகு திருத்தும் வசதிக்காக தனி இடமொன்றை அமைக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதேசமயம், படகுகளுக்கு ஏற்படும் விபத்திகளை தவிர்க்க, புல்லாவி போன்ற பகுதிகளில் சமிக்கை விளக்குகள் அமைக்க திட்டம் தயாரிக்குமாறு துறைமுக அதிகார சபை முகாமையாளர் கேட்டுக்கொண்டார்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட சில கிராமங்களில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பிரதேச சபை மற்றும் கிராம சேவகர்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் கூறப்பட்டது. வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் டெங்கு நுளம்பு உற்பத்திக்கு காரணிகள் காணப்படுவதால், அதனை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், மகப்பேற்று சிகிச்சை நிலையங்களுக்கு நிரந்தர கட்டிட வசதி, புற்றுநோய் மற்றும் ஏனைய தொற்றுநோயாளர்களுக்கான சிகிச்சை வசதிகள் உள்ளிட்ட விடயங்களும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. கோறளைப்பற்று பிரதேச சபை, பிரதேச செயலகங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், இத்திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தனர்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வசதிகள் குறைவாக இருப்பது, வெளியிடத்திலிருந்து பணிக்கு வரும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தங்குமிட வசதி இல்லாததால் அவர்கள் சேவையிலிருந்து விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான நிரந்தர கட்டிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரப்பட்டது. மேலும், சுத்தமான குடிநீர், மின்சாரம், ஊழியர்களுக்கான இருசக்கர வாகன நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிகள் பற்றிய பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டன.

அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களது திட்டங்களை செயல்படுத்துவதில் அரச அதிகாரிகள் தடையாக இருப்பதாகவும், இதனால் அபிவிருத்தி திட்டங்கள் காலதாமதமடைவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனைத்து திணைக்களங்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கேட்டுக்கொண்டார். வழக்கத்துக்கு மாறாக, ஊடகவியலாளர்களின் ஊடக பணிக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

மூதூர் இரட்டைக் கொலை: 15 வயது சிறுமி கைது!

Pagetamil

இரு பெண்கள் வெட்டுக்காயத்துடன் சடலங்களாக மீட்பு!

Pagetamil

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி உறுப்பினர் போர்க்கொடி

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment