இலங்கை அரச சேவையில் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைவாக, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் 3,000, பாதுகாப்பு அமைச்சில் 09, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சில் 179, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் 132, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 400, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் 161, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் 3,519, மேல் மாகாண சபையில் 34, கிழக்கு மாகாண சபையில் 05, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 17 என மொத்தம் 7,456 வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யும் முறையை மீளாய்வு செய்து, அவசியமான முன்னுரிமைகள் அடிப்படையில் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்ப, அரச பணியாளர்களின் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை சரி பார்க்கவும், தேவையான பணியிடங்களை அடையாளம் காணவும் பிரதமரின் செயலாளர் தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அந்தந்த அமைச்சுக்களின் கீழ் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக, தேவையான கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து, தகுதியான நபர்களை அரச சேவையில் இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புகள் அரசாங்கம் அறிவித்த புதிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.