வாதுவ பொலிஸாரால் வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், தாக்கி கொல்லப்பட்டதாக கூறி, சுமார் 40 பேர் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர், வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது ஆர்.எம். சமித டில்ஷான் என்பவராகும்.
உயிரிழந்தவர், வாகன விபத்திற்காக வாதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சில மணிநேரங்களின் பின்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தார். ஆனால் அவர் பொலிஸாரின் தடியடியால் தாக்கப்பட்டதாகவும், நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் உயிரிழந்தவரின் மனைவி ரோஷினி லக்மாலி உருக்கமாக தெரிவித்தார்.
மேலும், “உயிரிழந்தவரின் குடும்பத்தினர், சவப்பெட்டியை வாங்கக்கூட பணம் இல்லை. அப்பாவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த கொலைக்கு நீதி வேண்டும்!” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டுள்ளனர்.
போராட்டத்திற்குப் பின்னர், வாதுவ பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயில் முழுமையாக அடைக்கப்பட்டதுடன், சுமார் 20 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வீதியை மறித்துள்ளதாகவும் போராட்டத்தில் பங்குகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சமித டில்ஷான், பல மணி நேரங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டபோது, இரத்த வாந்தி எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. உயிரிழந்தவரின் மனைவி ரோஷினி லக்மாலி, பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.