குரங்குகளின் இனப்பெருக்கத்தை குறைத்து அவற்றால் விளைவிக்கப்படும் சேதங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குளுக்கான குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது. எனினும் சில காரணங்களால் அம் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பயிர்ச்செய்கைகளுக்கு குரங்குகள் விளைவிக்கும் பாதிப்பை கட்டுப்படுத்த குரங்கு இனப் பெருக்கத்தைக் குறைக்கும் நோக்கில் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் பரீட்சார்த்தமாக செயல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனைத் தொடர்ந்து, குரங்குகளின் இனப்பெருக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்பில், மாத்தளை மாவட்டத்தின் ஹரஸ்கம பிரதேசத்தில் குரங்குகளிற்கான இந்த பரீட்சார்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும், குரங்குகளிற்கான குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான மிருக வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு, உயர்வான சிகிச்சை செலவு மற்றும் கிரிதலே மிருக வைத்திய சிகிச்சை நிலையத்திற்கு குரங்குகளை போக்குவரத்து செய்வதில் ஏற்படும் அதிக செலவு போன்ற காரணிகளினால் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்ட நிலையில், இணைப்புக் குழுவின் தலைவர் மற்றும் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்கவிற்கு இந்த சூழ்நிலை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு மட்டும் 12 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, புதிய மாற்று தீர்வுகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தற்போது, குரங்குகளால் ஏற்படும் விவசாய சேதத்தைக் குறைக்கும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா? அல்லது மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படுமா? என்ற கேள்வி இன்னும் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்,




