இவ்வருட ஆரம்பம் (2025.01.01) முதல் நேற்று (2025.02.11) வரையான காலகட்டம் வரையில் நாடளாவிய ரீதியில் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கே.புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை 11) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிகையில்,
இப் 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், பாதாள உலக கும்பல்களின் தலைமையில் 07 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஏனையவை தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், பாதாள உலக கும்பல்களின் தலைமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 03 T -56 ரக துப்பாக்கிகள் மற்றும் 05 கைத்துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 04 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.




