திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த பொதுக்கூட்டம்

Date:

[embedyt] https://www.youtube.com/watch?v=Quw7Fp6vut8[/embedyt]

திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த (2024) பொதுக்கூட்டம் நேற்றைய தினம் (09) ஆலய அன்னதான மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் 1.30 மணி வரை இடம்பெற்றது.

இறை வணக்கத்துடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. செயலாளர் சுந்தரலிங்கம் அருண் அனைவரையும் வரவேற்று, கூட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். கூட்டத்தில், ஆலயத்துடன் தொடர்புபட்டு, சேவையாற்றி இறைவனடி சேர்ந்த திரு. நவதீசன், திரு. இரா. சம்பந்தன் ஆகியோருக்கு ஆன்ம சாந்திக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நம்பிக்கைப் பொருப்பாளர் சபையின் தலைவர் தி. துஷ்யந்தன் உரையாற்றி, கடந்த 2024ஆம் ஆண்டு பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆலய நிர்வாகத்தை முன்னெடுத்துச் சென்றதை குறிப்பிட்டார். சில வழக்குகளால் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்ததையும், ஆலய அலுவலகத்தில் தகவல்களை பெற பொதுச்சபை உறுப்பினர்களுக்கு உரிமை வழங்கப்பட்டு இருப்பதையும் அவர் தெரிவித்தார். மேலும், முகநூல் வாயிலாக முன்வைக்கப்பட்ட தவறான பிரச்சாரங்கள் குறித்து விளக்கமளித்ததுடன், அதனைத் தொடர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதையும் அதன் நிலவரங்களையும் அவர் குறிப்பிட்டார்.

வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில், கணக்கெடுப்பின் போது கையளிக்கப்படாத 15.7 பவுன் பெறுமதியான நகைகள் தொடர்பான பிரச்சனை குறிப்பிடத்தக்கது. முன்னைய நிர்வாகம் இவ்வறிக்கையை சரிவர பரிசீலிக்காமல் பொறுப்பேற்றதாக கூறப்பட்டது. பின்னர், முன்னாள் பொருளாளர் புதிய நகைகளை செய்து வழங்கியதாகவும், இதற்கு யாப்பு முறையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காணாமல் போனதாகக் கூறப்பட்ட லக்ஷ்மி நாராயணன் சிலை, புரதான கல் தூண் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. அந்த தூண் ஆலய வழிபாட்டிற்கு ஏற்ப மூன்று இடங்களில் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், 2015ஆம் ஆண்டு, சில நகைகள் அன்பளிப்பாளர்களின் அனுமதியுடன் உருக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதும் தெரிவிக்கப்பட்டது. மனவிருத்திப் பாடசாலை 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும், பின்னர் வரவு குறைவு காரணமாக மூடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

வழக்குகள் தொடர்பாகவும் முறையற்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த துஷ்யந்தன், ஒரு ஊடகவியலாளரால் பிழையான தகவல்கள் பரப்பப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்ததாகவும் கூறினார். நீதிமன்றத்தினாலும் சில நடவடிக்கைகள் முறையற்ற விதமாக மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கை இடைநிறுத்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை தொடர்பிலும் குறிப்பிட்டார்.

மேலும், இலண்டனில் வசிக்கும் சீலன் என்பவர் ஆலயத்திற்காக காண்டாமணி ஒன்றை அன்பளிப்பு செய்திருந்தார். ஆனால், தொல்பொருள் பகுதிக்குள் அதை அமைப்பதற்கு அரசு தடை விதித்திருந்தது. இவ்விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா ஆகியோர் ஊடாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆலய காணிகளை எல்லைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் தெளிவூட்டினார்.

அத்துடன் இராஜ கோபுரம் தொடர்பாக இந்திய அரசு உதவியுடன் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது, எனினும், அரசு அதனை நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. அம்மன் திருவிழா காலத்தில் அம்மனின் தாலி, கால் சிலம்பு போன்றவை காணாமல் போயிருந்ததாகவும், இது ஆளுநர் செயலகத்தால் குழப்பமான விவகாரமாக மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஒரு சிறப்பான உரையை தலைவர் வழங்கி இருந்தார். ஆலயத்தில் நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து சென்ற பொதுக்கூட்ட அறிக்கை செயலாளரால் வாசிக்கப்பட்டது. மேலும், ஆலய செயற்பாட்டு அறிக்கையும் வாசிக்கப்பட்டது. கூட்டத்தில், பொதுச்சபையின் அனுமதிக்காக சில முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, நன்கொடையாக கிடைத்த வாகனத்தை விற்பனை செய்வதா என்பதும், நன்கொடையாக கிடைத்த தங்க ஆபரணங்களை உருக்கி புதிய ஆபரணங்களாக மாற்றலாமா என்பதற்கான விவாதமும் நடைபெற்றது. உருக்குவது வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தீர்மானங்கள் மேற்கொள்ள முயற்சித்த போது சில குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது. எனினும் முரண்பாடு ஏற்படாத வகையில் கையாளப்பட்டு தீர்மானங்கள் இறுதியாக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கணக்கறிக்கை பொருளாளரால் தெளிவுபடுத்தப்பட்டதுடன், கணக்காய்வாளரும் தன்னுடைய கருத்துக்களை முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதன்போது சிவலிங்கம் மூன்று பகுதிகளாக உடைக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்ற விடயமும் அங்கத்துவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இறுதியாக கூட்டம் 1.30 மணி அளவில் முடிவுற்றது.

அண்மைக்காலமாக திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பில் பல்வேறுபட்ட முரண்பாடுகள் இடம்பெற்று வந்தாலும், ஆலய நிர்வாகத்தின் மீது மக்கள் கரிசனையுடன் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்து வருவதால் ஆலய நிர்வாக சபை தங்களை மேலும் சிறப்புடன் கொண்டு நடத்துவதற்கு வழி செய்து உள்ளது என்பது தெளிவாக தென்பட்டதுடன், ஆலய நிர்வாகம் முதல் இருந்த நிர்வாகங்களை விட வினைத்திறன் மிக்கதாக தங்களை சிறப்பூட்டி புதிய நடைமுறைகளை உள்வாங்கி செயல்பட்டு வருவதையும் அவதானிக்க முடிந்தது.

இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கியமான தீர்மானங்களை முன்வைத்ததோடு, ஆலய நிர்வாகத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கான அடித்தளத்தையும் அமைத்தது எனலாம்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...

சூரியவன்ஷிக்கு முன்னாள் இலங்கை கப்டன் வழங்கிய ஆலோசனை

முன்னாள் இலங்கை கப்டன் அனுர தென்னக்கோன், இந்திய இளம் நட்சத்திர வீரர்...

தென்மாகாண முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்