தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கிடைத்தபோது, முன்னாள் ஜனாதிபதியும், தனது தந்தையாகிய மகிந்த ராஜபக்ச மிகுந்த மனவருத்தத்துக்குள்ளானார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதுகுறித்து கூறியிருந்தார்.
“பிரபாகரனின் மகன் சிறுவன் பாலச்சந்திரன் போரில் தொடர்புடையவர் அல்ல. ஆனால், அவர் தவறுதலாக உயிரிழந்தார். இதுபற்றி பல்வேறு கதைகள் உருவாக்கப்பட்டன. உண்மையில், இந்த மரணம் வேண்டுமென்று நிகழ்ந்த ஒன்று அல்ல, அது தவறுதலாக (Cross-Firing) நடந்த சம்பவம்” என விளக்கமொன்றை ஊடகங்களுக்கு முன்வைத்துள்ளார்
மேலும், “அந்த செய்தி அதிகாலையில் கிடைத்தபோது, முன்னாள் ஜனாதிபதி மிகவும் கவலை அடைந்ததாகவும், தான் அவரை இவ்வளவு மனவருத்தத்துடன் பார்த்தது அந்த தருணத்தில் மட்டும்தான் எனவும் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, அந்தக் காலகட்டத்தில் நடந்த பல சம்பவங்களில், தனது தந்தைக்கு மிகுந்த வேதனை அளித்த ஒன்று என பாலகன் பாலச்சந்திரனின் உயிரிழப்பு பற்றி அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற சம்பவங்கள் போரின் வேகத்தில் தவறுதலாக நடந்திருக்கலாம் என்பதையும், பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது தொடர்பாக நிலவி வரும் கருத்துகள் நிஜம் இல்லை என்பதையும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.