கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள பிரபலமான கிரிஷ் கட்டடத்தில் இரவு வேளையில் தொடர்ந்து இரு தினங்கள் ஏற்பட்ட தீ விபத்துகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கடந்த 6ம் திகதி (நேற்று முன்தினம்) கட்டடத்தின் 35வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து 34வது மாடிக்கும் பரவி, பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கட்டுப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, நேற்று (7ம் திகதி) இரவு 24வது மாடியிலும் தீ விபத்து ஏற்பட்டது, எனினும் அதனை விரைவில் கட்டுப்படுத்த முடிந்தது.
இச்சம்பவங்களுக்குப் பின்னணி என்ன என்பதைக் கண்டறிய அரச பகுப்பாய்வாளரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை பெறப்படவுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் நோக்கில், கிரிஷ் கட்டடம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக தீ விபத்துகள் ஏற்பட்டிருப்பது பலரிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிகாரப்பூர்வமான விசாரணை மூலம் இதற்கான காரணங்கள் விரைவில் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.