– கருணாகரன்
‘தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது?‘ என்ற கேள்வி, அந்த அரசியலை முன்னெடுப்போரையும் அதை ஆதரிப்போரையும் பாடாய்படுத்தத் தொடங்கியிருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று, மக்களுடைய பிரச்சினைகளையும் அவர்களுடைய தேவைகளையும் தீர்ப்பதற்குப் பதிலாக, அவற்றை வைத்து அரசியல் செய்ய முற்பட்டமை. குறிப்பாக அபிவிருத்தியும் அரசியல் உரிமையும் சமாந்தரமானவை. இரண்டும் அவசியமான இரண்டு கண்கள் என்ற அடிப்படையைப் புரிந்து கொள்ள மறுத்து, அபிவிருத்தியைப் பேச மறுத்ததும் அரசியல் உரிமையைப் பற்றிப் பேசி வந்ததுமாகும்.
ஆனால், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து விடுதலை இயக்கங்களும் அபிவிருத்தியையும் அரசியலையும் இணைத்தே பார்த்தன; வலியுறுத்தி வந்தன. குறிப்பாக திம்புப் பேச்சுவார்த்தை தொடக்கம் நோர்வேயின் மத்தியஸ்த்துடன் நடந்த பேச்சுவார்த்தை வரையில் அரசியல் உரிமைக்கான தீர்வை எட்டுவதற்கான பேச்சுகள் நடக்கும்போதே, மக்களின் இயல்பு வாழ்க்கை மேம்படுத்தப்பட வேண்டும். படைகள் பழைய இடங்களுக்குத் திரும்ப வேண்டும். இராணுவ நெருக்கடி இருக்கக் கூடாது. அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டது. இதை இன்னும் சரியாகச் சொன்னால், இதையொரு முன்நிபந்தனையாகவே புலிகளும் முன்வைத்திருந்தனர்.
இந்த அடிப்படையில்தான் அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டன. மட்டுமல்ல, பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித்திட்டங்களை இங்கே வாசகர்கள் நினைவுறுத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால், இதைப் புரிந்து கொள்ளத் தவறின இன்றைய தமிழ்த்தேசியத் தரப்புகள். அதிலும் குறிப்பாக, விடுதலைப்புலிகளை முன்வைத்து அரசியல் நடத்தும் கஜேந்திரன்கள், சிறிதரன் போன்றோருக்குக் கூட இது புரியவில்லை. இதனால் அரசியல் உரிமையைப் பற்றியும் எந்த முடிவும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை என்ற நிலையில், இரண்டுக்குமான சாத்தியக்குறைவுகள் நம்பிக்கையீனத்தை இந்தத் தரப்புகளின் மீதும் இந்த அரசியலின் மீதும் பெருந்திரள் மக்களுக்கு உண்டாக்கியிருக்கிறது.
மக்கள் எப்போதும் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்குமே விரும்புவர். அதற்கிசைவான அரசியற் தரப்புகளோ, அரசியற் சூழலோ இல்லை என்றால், அவர்கள் அதைத் தேடத் தொடங்குவர். அல்லது, அந்தச் சூழலை விட்டு, அந்த இடத்தை விட்டு வெளியேற – புலம்பெயர முற்படுவர். இதனால்தான் அவர்கள் இந்தக் கட்சிகளையும் இந்த அரசியலையும் விட்டொதுங்கி, புதிய திசைகளைத் தேட முற்படுகின்றனர். கூடவே இந்தக் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையும் நிதானமும் இல்லை என்பதுமாகும்.
இரண்டாவது, தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியும் அநுர குமார திசநாயக்கவின் கவர்ச்சிகரமான நடவடிக்கைகளும் வடக்குக் கிழக்கில் வலுப்பெற்றிருந்த தமிழ்த்தேசிய அரசியலை ஆட்டம் காண வைத்திருக்கின்றன. தேசிய மக்கள் சக்தியாலும் அநுரவினாலும் எதையெல்லாம் சாத்தியப்படுத்த முடியும் என்ற கேள்விக்கு அப்பால், அந்தத் தரப்பின் மீது பெருந்திரள் மக்களுக்கு ஒரு கவர்ச்சி – ஆதரவு அலை – உருவாகியிருக்கிறது. இன்றைய சூழலில் எந்தத் தமிழ்த் தலைவர்களுக்கும் இல்லாத ஆதரவை அநுர தமிழ் மக்களிடம் பெற்றிருக்கிறார். அநுர அலை இன்னும் சில காலத்துக்குப் பலமாகவே இருக்கக் கூடிய சாத்தியங்களே அதிகமாக உண்டு. இது அடுத்து வரவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல், மாகாணசபைகளுக்கான தேர்தல்களிலும் பிரதிபலிக்கலாம். அந்த அச்சத்தில் தமிழ்த்தரப்புகள் உள்ளன. இதை முறியடிக்கக் கூடிய அளவுக்கு எந்தத் தமிழ்க் கட்சியும் இல்லை. எந்தத் தமிழ்த் தலைமையிடத்திலும் உபாயங்கள் கிடையாது. ஆளுமையும் இல்லை.
இதனால் பசி, தூக்கமெல்லாத்தையும் இழக்கின்ற அளவுக்கு தமிழ்த்தேசியவாதிகளைப் பதட்டமும் கலவரமும் சூழ்ந்துள்ளது. தமிழ்த் தேசியவாதிகளை மட்டுமல்ல, ஏனைய ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் போன்ற கட்சிகளையும்தான் தடுமாற வைத்திருக்கிறது.
இதனால் அடுத்து வரவுள்ள உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாணசபைகளுக்கான தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது? அவற்றில் தமது வெற்றியை எப்படி உறுதிப்படுத்துவது? தேசிய மக்கள் சக்திக்கு வடக்குக் கிழக்கில் பெருகி வரும் ஆதரவுத் தளத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்ற குழப்பத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் உள்ளன.
“இந்தச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்? இதில் எப்படி மாற்றத்தை உண்டாக்க முடியும் என்று கருதுகிறீர்கள்? உங்களுடைய எதிர்காலத் திட்டமென்ன?” என்று தமிழ்த்தேசியவாதக் கட்சியொன்றின் தலைவரிடம் கேட்டேன்.
”இதொரு சிக்கலான நிலைதான். அநுர அலை சுனாமியைப்போல அடித்துக் கொண்டிருக்கிறது. அது ஓயும்வரை ஒன்றும் செய்ய முடியாது. உண்மையைச் சொன்னாலென்ன, இதற்குப் பொருத்தமான மாற்றுப் பொறிமுறைகளையோ உபாயங்களையோ வகுக்க முடியாமல்தான் தமிழ்த்தேசியக் கட்சிகள் எல்லாம் தடுமாறுகின்றன. எல்லோரும் (எல்லாக் கட்சிகளும்) ஒன்று சேர்ந்தால் தமிழ் மக்களின் நம்பிக்கையை மீளப் பெறலாம். அது ஓரளவுக்கு தேசிய மக்கள் சக்தி மீதான ஆதரவைக் கட்டுப்படுத்தக் கூடும் என்று சிலர் கருதினாலும் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒற்றுமைப்படுத்துவதும் அவை ஒருங்கிணைவதும் இலகுவான சங்கதிகளாக இல்லை” என்றார் அவர்.
உண்மை நிலவரத்தை அவர் புரிந்திருப்பது பாராட்டுக்குரியது. உண்மையும் அதுதான்.
தமிழரசுக் கட்சி உட்படப் பல கட்சிகள் உள்முரண்பாடுகளையே கட்டுப்படுத்த முடியாமல், அதற்குத் தீர்வு காண முடியாமல் சிதைந்து போயிருக்கிற நிலைமையில், எப்படி எல்லாக் கட்சிகளையும் ஒருங்கிணைப்பது என்ற திகைப்பு – கேள்வி எழுகிறது. இந்த நிலையில் அடுத்த இரண்டு மாதங்களில் வரவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்குக் கிழக்கிலும் வெற்றியைப் பெறுமாக இருந்தால், அது மேலும் தமிழ்த்தேசிய அரசியலைப் பின்னுக்குத் தள்ளி விடும். உள்ளுராட்சி மன்றங்களும் மாகாணசபையும்தான் மக்களுடைய தேவைகளோடு அதிகமாகச் சம்மந்தப்பட்டவை. அவற்றைத் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றினால், அது தமிழ்ச்சமூகத்தின் அடிமட்டம் வரை அதைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். இப்போதே எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் தேசிய மக்கள் சக்தியின் வேர்கள் பரவியுள்ளன. எதிர்பார்க்காத திசைகளில் – சாதாரண இடங்களில் – சர்வசாதாரணமாக அநுர திசநாயக்கவும் அவருடைய கட்சியின் முக்கியஸ்தர்களும் (அரசாங்கத்தின் பிரமுகர்களும்) செல்கிறார்கள். சாப்பிடுகிறார்கள். பழகுகிறார்கள்.
இந்த மாதிரி எந்தத் தமிழ்க் கட்சித் தலைவரும் எளிமையாக எளிய மக்களோடு உறவாடியதில்லை என்றொரு அபிப்பிராயம் பொது மக்களிடத்திலே உருவாகியுள்ளது. ஜே.வி.பி ஆயுதம் தாங்கிய போராட்ட அமைப்பாகவும் தலைமறைவு இயக்கமாகவும் இருந்த வரலாற்றைக் கொண்டது என்பதால், அது தன்னியல்பில் இத்தகைய பண்பைக் கொண்டுள்ளது. ஆனால், ஒரு காலம் விடுதலை இயக்கங்களாகவும் மக்களிடத்திலேயே தமக்கான ஆதரவுத் தளத்தையும் கொண்டிருந்த தமிழ் விடுதலை இயக்கங்களிலிருந்து வந்த கட்சிகளால் – தலைவர்களால் – இப்படி மக்களுடன் நெருங்கிப் பழக முடியவில்லை.
இது இன்னொரு நெருக்கடியையும் பின்னடைவையும் தமிழ்த்தேசியவாதக் கட்சிகளுக்குக் கொடுத்திருக்கிறது. ஏற்கனவே தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற சிறுபிள்ளை விளையாட்டு உண்டாக்கிய பலவீனமும் சேர்ந்து தமிழ்த்தேசியத் தரப்புகளை ஆழத்துள் அமிழ்த்துகின்றன. பொதுவாகவே தமிழ்த்தேசிய அரசியல் என்பது சிறுபிள்ளை விளையாட்டுப் போலாகி விட்டது.
ஒரு காலம் மாபெரும் கனவுகளோடும் மிகப் பெரிய நம்பிக்கைகளோடும்தான் விடுதலை இயக்கங்களையும் போராளிகளையும் அவற்றின் தலைவர்களையும் மக்கள் ஆதரித்தனர். மிகப் பெரிய நெருக்கடிகள், துயரங்கள், அலைச்சல்கள், இழப்புகளின் மத்தியிலும் போராட்டத்தை ஆதரித்து, போராட்டத்துடன் நின்றதும் அந்த விடுதலைக் கனவுக்காகவும் வேட்கைக்காகவும் அது எப்படியாவது கிடைத்து விடும் என்ற நம்பிக்கையினாலும்தான்.
ஆனால், இறுதியில் எல்லாமே தோற்றுப்போய், கருகிப்போய், ஆறாத காயங்களோடும் தீராத வலிகளோடும் முடியாத கண்ணீரோடும்தான் மக்கள் வாழ வேண்டியேற்பட்டது. அப்படியிருந்தும் பெருந்திரள் மக்கள் தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுறுதியோடு நின்றனர். தமிழ்த்தேசியவாதத்தைப் பேசிய தரப்பினரை ஆதரித்தனர், வெற்றிடைய வைத்தனர். அப்படியிருந்தும் கடந்த 15 ஆண்டுகளில் இந்தச் சக்திகளால் மக்களுடைய எந்தப் பிரச்சினைக்கும் தீர்வைக் காண முடியவில்லை.
காணாமலாக்கப்பட்டோரைப் பற்றிய பிரச்சினை, போர்க்குற்ற விசாரணை, படை விலக்கல், நில மீட்பு, மேய்ச்சற்தரை விவகாரம், தொல்பொருட் திணைக்களத்தின் அத்துமீறல்கள், திட்டமிட்ட குடியேற்றம், பௌத்த மயமாக்கல், அரசியற் கைதிகள் விடுதலை, அரசியற் தீர்வு என்று இவை முன்னிறுத்திய – பிரகடனப்படுத்திய எந்த விடயத்துக்கும் உள்நாட்டிலும் தீர்வை எட்ட முடியவில்லை. இவற்றைக் குறித்து, பிராந்தியத்திலும் சரி, சர்வதேச சமூகத்திடத்திலும் சரி ஆதரவைப் பெற முடியவில்லை.
மட்டுமல்ல, மாகாண சபைகளை இயங்க வைத்தல், அவற்றுக்கான தேர்தல்களை நடத்துதல், அரசியலமைப்பை மாற்றுதல், வடக்குக் கிழக்கிற்கான அபிவிருத்தி, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முழுமையான நிவாரணத்தை அல்லது இழப்பீட்டை வழங்குதல், அவர்களுக்கான ஆற்றுப்படுத்தல்களை நிறைவடையச் செய்தல் என எதிலும் இவை சரியாகச் செயற்படவில்லை. புலம்பெயர் மக்களின் அரசியல் மற்றும் அபிவிருத்திக்கான ஆதரவைக் கூடச் சரியான முறையில் வழிப்படுத்திக் கொள்வதற்கான நம்பிக்கையான கட்டமைப்புக்களை உருவாக்கவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் மற்றும் போராட்டத்தில் உயிரிழந்த போராளிகளின் குடும்பத்தினருக்குக்குரிய – அவர்களுக்குத் தேவையான வசதிகள், முன்னுரிமைகள், தேவைகளைக் கூடச் செய்யவில்லை. அதைப்போலப் போராட்டத்தின்போதும் போரின்போதும் உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கான திட்டங்கள், பணிகளைக் கூட இவர்கள் செய்யச் சிந்திக்கவில்லை. அவர்களுடைய பிரச்சினைகளில், துயரங்களில் பங்கேற்கவில்லை. அவர்களுடைய நிலைமை என்னவென்றே தெரியாத நிலையில்தான் தமது அரசியலைச் செய்து கொண்டுள்ளனர்.
இதெல்லாம் இந்தச் சக்திகளின் மீதும் இந்தத் தலைமைகளின் மீதும் கசப்பையே ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவேதான் விடுதலை இயக்கங்கள் எப்படிச் சிறுபிள்ளை விளையாட்டுப்போல எல்லாவற்றையும் பாழாக்கிப் போட்டுடைத்தனவோ, அவ்வாறே இந்தச் சக்திகளும் வீடு வராத விளைச்சலைப் பற்றிப் பேசுகின்றனவோ என்ற ஐயத்துக்கு வந்து சேர்ந்துள்ளனர் தமிழ் மக்கள். அதனுடைய வெளிப்பாடே அண்மையில் மக்களிடம் காணப்படும் மாற்றங்களாகும். இதை நிவர்த்தி செய்வது எளிதானதல்ல. ஏனெனில் இன்றைய உலகளாவிய பண்பாட்டுச் சூழலும் வாழ்க்கை முறையும் மக்களின் மனநிலையும் வேறாகி விட்டது. இது உலகெங்கும் லட்சியவாதங்களுக்கு எதிரான காலமாக மாறி வருகிறது. போராட்டங்கள் முன்னரைப்போல அர்ப்பணிப்புகளைக் கோர முடியாது. மக்கள் அதற்குத் தயாருமில்லை.
இந்த நிலையில் பழைய மாதிரிகளோடு தொடர்ந்தும் களமாடுவது பொருத்தமானதல்ல. தமிழ்த்தேசியவாதம் என்பது அதனுடைய அடிப்படையான விடுதலைக்கான அடிப்படைகளையும் அதற்கான உபாயங்களையும் பற்றிச் சிந்திப்பதற்கும் அதற்கான ஜனநாயகத் தளத்தை நிர்மாணிப்பதற்கும் பதிலாக மேலும் உட்சுருங்கியே வருகிறது. மக்களிடம் செல்வதற்குப் பதிலாக, தத்தமது வீடுகளிலிருந்தபடியே ஊடகச் சந்திப்புகளை நடத்தும் அளவுக்குப் பஞ்சிக்குணம் பிடித்தவர்களாக தலைவர்கள் மாறிவிட்டனர். தென்னிலங்கையிலிருந்து வந்து கிராமங்களை நோக்கி தேசிய மக்கள் முன்னணி ஆட்கள் செல்கிறார்கள். இவர்களோ, தங்கள் வீட்டுப் படியை விட்டிறங்கவே பஞ்சிப்படுகிறார்கள். இந்த நிலையில் எப்படித் தமிழ்த்தேசிய அரசியலைப் பலமடையச் செய்வது? அதனுடைய எதிர்காலத்தை உருவாக்குவது?
00




