தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் – சல்வடோருக்கு, அமெரிக்காவில் உள்ள விசா இல்லாத அகதிகள், சிறையில் இருக்கும் அமெரிக்க குடியுரிமை பெற்ற குற்றவாளிகள் மற்றும் கிரிமினல் கைதிகளை அனுப்ப அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தினை எல்-சல்வடோர் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் அமெரிக்காவின் சிறைகள் வெறிச்சோடி காணப்படும் என்றும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த இந்தத் திட்டம் உதவக்கூடும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, எல்-சல்வடோரின் சிறைகள் மிகவும் கடுமையானதொரு சூழலில் இயங்குவதால், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள், தாமாக முன்வந்து தமது சொந்த நாட்டுக்குச் செல்ல விரும்புகின்றனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்கின்றன.
இந்தத் திட்டம் அமெரிக்கா முழுவதும் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதனை, அமெரிக்காவில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர ஒரு திடீர் நடவடிக்கையாக பார்க்கின்றனர். குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேர்தலையொட்டி தான் முன்வைத்த வாக்குறுதிகளை செயல்படுத்தும் ஒரு முயற்சியாகவும் இது கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தினால், அமெரிக்கா சிறைகளை நிர்வகிக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளமுடியும். இதனூடாக குற்றவாளிகளை எதிர்கொள்ளும் புதிய முன்முயற்சியாகவும், குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இது அமையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுவருகின்றது.