மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நாளைய (04) தேசிய சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க, மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 7 பேருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை குடியரசின் சுதந்திர தினமானது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டபடி தேசிய நிகழ்வாக கொண்டாடப்பட வேண்டிய தினம். இந்த நாளில் காந்திபூங்காவில் நடைபெறவுள்ள அதிகாரப்பூர்வ நிகழ்வுகளை பாதிக்கும் வகையில் எந்தவொரு ஆர்ப்பாட்டத்தினையும், சட்டவிரோத செயல்களையும் மேற்கொள்ளக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத் தடை உத்தரவு, பாராளுமன்ற உறுப்பினர்களான, இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் போன்றவர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவர் அ.அமலநாயகி, செயலாளர் சுகந்தினி, அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் இ.செல்வகுமார் ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழர்களுக்கான உரிமையை வலியுறுத்தி வடகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் “கரிநாள்” அனுஷ்டிக்க போராட்ட அழைப்பு விடுத்திருந்ததனடிப்படையில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் தடை உத்தரவு ஏற்பட்டுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் “ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அதையே அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்” எனக் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமைக்காக போராடும் வாய்ப்பு உள்ளபோது, தமிழர்களுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாளைய ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் நோக்கில் 7 பேருக்கு மட்டக்களப்பு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.