காட்டு யானைகள் கிராமப்புற மற்றும் விவசாய பகுதிகளில் ஏற்படுத்தும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில், தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் (NERD) புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மின்சார வேலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
திஸ்ஸமஹாராம பகுதியில் இந்த புதிய மின்சார வேலி வைபவ ரீதியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இந்த புதிய மின்சார வேலி, வழக்கமான வேலிகளை விட அதிக தற்காப்புத் திறனைக் கொண்டதாக இருக்கும் வகையிலும், பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழலுக்கு குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வேலி எந் நேரத்திலும் உடைந்து பாதிக்கப்படும் பட்சத்தில், உடனடியாக கைபேசி செயலி மூலம் உரிய அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதியையும் இந்த புதிய மின்சார வேலி கொண்டுள்ளது. இது உடனடி நடவடிக்கைகளை எடுக்க உதவுவதோடு, யானைகளால் ஏற்படும் சேதங்களை குறைக்கும் முக்கிய முன்னேற்றமாகும்.
தற்போது இந்த மின்சார வேலி சில பகுதிகளில் பரிசோதனையாக அமைக்கப்பட்டு அதன் செயல்திறனை மதிப்பீடு செய்யப்படும். எதிர்காலத்தில், இது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் அறிவித்துள்ளது.
இந்த புதிய முயற்சி, யானைகள் மற்றும் மனிதர்களுக்கிடையே ஏற்படும் மோதல்களை குறைத்து, நிலையான தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




